9)
காதல் அப்படியொரு இனிப்பு. கசப்பை சகிக்கும் இனிப்பு. நினைவை தொலைக்கமுடியாமல் நினைத்து நினைத்து சாகத் துடிக்கும் இதயத்தை உணர்வுகளால் அடைத்துக்கொள்ளும் இனிப்பு. விஷம் கக்கும், ஞானம் தரும், நாகரிகம் வளர்க்கும், மனிதமூறச் செய்யும், மானுடப் பிறப்பை இன்பக் கடலில் மூழ்கடித்து சாகச் சாக உயிர்களைப் பிறப்பிக்கும் காதல்.
ஆனால் காதல் ஒரு பொருளில்லை. கடையில் வாங்கும் பொருட்களைப் போல் வாங்குவதோ உருவாக்கிக் கொள்வதோ இல்லை காதல். காதல் ஒரு உணர்வு. உயிர் அடைந்துப் போகும் உணர்வு. காதல் என்பது நேசம், பிரியம், அன்பு. அது ஈர்ப்பினூடே ஏற்பட்டப் புரிதலில், குணங்கள் ஒத்துப் போவதில் அல்லது விட்டுக்கொடுக்க தன்னை தயார்படுத்திக் கொள்வதில், எதிர்கால வாழ்க்கைக்கு நாம் பொருத்தமானவர்கள் எனும் மானசீக நம்பிக்கையில் துளிர்த்து பின் உடல் வெப்பத்திற்கிணங்க ஏற்படும் மனதின் ஆசையில் வளர்ந்தும் விடுகிறது.
இதற்கிடையே காதலுக்கு கண் இல்லை, காதல் பித்தாக்கும் என்பதெல்லாம் எல்லோரிடத்தும் பொருந்துபவையல்ல. எந்த ஒரு கட்டத்திலும் எதையும் யோசித்து செய்யக்கூடிய நடுநிலைத் தன்மை மனிதரிடையே நிறைய உண்டு. வயப்படுதல் என்பதே ஒன்றில் கூடுதலாய் மயங்குதல் என்பதாகும். மயங்குதல் எனில் தன்னிலை விட்டிடறி இன்னொன்றில் ஆட்பட்டு விடுவதாகும். ஆட்படுதல் ஒன்று இயலுமெனில் விட்டு விலகுவதும் இயலும். ஆனால் சந்தோசத்தை உடனே ஏற்றுக் கொள்ளும் நாம் வருத்தத்தை விட்டு விலகியிருக்கவே விரும்புகிறோம். எனவே ஆட்படுதலுக்கு உடன்பட்டுவிடுமளவு விட்டுவிலக தயாரில்லா நிலைக்கு தள்ளப்பட்டுப் போகிறோம்.
எங்கு நாம் நம் உணர்வுகளின் புரிதலின்றி தள்ளப்படுகிறோமோ அங்கே நமக்கு நிறைய பிரச்சனைகளும் முளைத்துவிடுகிறது. எனவே எங்கு எதைச் செய்யினும் சிந்தியுங்கள். குழந்தைகளுக்கு வளரும்போதே சரிவர சிந்திக்கச் சொல்லிக்கொடுங்கள். எதைப்பற்றி கேட்டாலும் விளக்க மறுத்துவிடுவது அல்லது குழந்தைகளுக்கு விரிவாகச் சொல்லித்தர தயங்குவதே அவர்களை வேறொரு சோதனைக் குழிக்குள் தள்ளி தகாத பாதைகளுள் இழுத்துச் செல்லக்கூடிய மனநிலைக்கு அவர்களை ஆளாக்கிவிடுகிறது.
ஆனால் பாருங்கள்; குழந்தைகள் பிறக்கும் போதே நம் அதிகபட்ச பழக்கவழக்கங்கள் மற்றும் புரிதல்களுக்கு ஏற்ப நமக்கொத்த உணர்வுகளைப் பெற்றுக்கொண்டே பிறக்கிறார்கள். அவர்களுக்கு நம் உணர்வொத்த நிறைய புரிதல் இருப்பதன் காரணமாக அங்ஙனம் கேள்விகளும் இருக்கும். அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் கடமையும் நமக்கு உண்டு. அப்படி கேள்விகள் புரிந்து தெளிவோடு வளரும் குழந்தைகளுக்கு எதையும் நேரிடையாக நேர்மறை வழிகளில் சிந்திக்கத்தக்க தெளிவும் இருக்கும். அது காதலிலும் கைகொடுக்கும்.
காதலின் சரியான புரிதல் இல்லாத் தன்மையே பல குடும்பங்களின் நிம்மதியை குலைத்துவிடுகிறது. காதலின்பேரில் பல கொலைகளையும் நிகழ்த்தி இளைய சமுதாயத்தை வீரியமிழக்கவும் செய்துவிடுகிறது. குழந்தைகள் காதலிப்பதைக் கண்டு பெற்றோர் பயம் கொள்வது இயல்புதான் அதேநேரம் அங்கு அவர்களை சரிவர வழிநடத்துமொரு உயரிய கடமையும் அவர்களுக்குள்ளதை பெற்றோர்களும் நினைவில் கொள்ளல் வேண்டும்.
அதுபோல் கண்டதும் காதல் கைதொட்டதும் காதல் உடலுரசிக் கொண்டதால் காதல் என்பதையெல்லாம் படிக்கும் மாணவர்கள் கடந்துவிடவேண்டும். எழுபது வயதிலா வரும் காதல் படிக்கும் காலத்தில் தானே வரும், இளமை பூச்சொரிக்கும் வயதில்தானே காதலிக்க ஆசையூரும் பிறகு இளமையில் காதலிக்காதே என்றால் எப்படி சரி என்கின்றனர் சிலர். அந்தக் கூற்றை முற்றிலும் சரியென்று ஏற்பதற்கில்லை. அந்த வயதில் கூடுதலான பொருப்பில்லாமை அல்லது பல இழப்புகள் மற்றும் ஏற்புக்களால் ஏற்படும் பாரம் மனத்தை அழுத்தாமை ஒரு சுயசுதந்திரத்தை ஏற்படுத்தித் தருகிறது. அந்தச் சுதந்திரம் வயதின் உடலின் தேவையையும் கையிலெடுத்துக் கொண்டு காதலின் கண்மூடித் தனமான பாதையில் நம்மை ஆட்படச்செய்கிறது.
உண்மையில் வெறும் காதல் அன்பு என்று பார்த்தால்; அதை நாம் சரியாக உணர்வதன்பொருட்டு, அல்லது தெளிவாகப் புரிந்துக் கொள்வதன்பொருட்டு எல்லா வயதிலும் யார்மீது வேண்டுமாயினும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் அதை நாம் சரிவரப் புரிந்து, அதன் பின்விளைவுகளுக்கு ஏற்ப இடம் வகுத்து, தன்னிலை அறிந்து, பிறர்பால் அக்கறைக் கொண்டு, தனது பின்னணி சார்ந்த நடப்புகள் இன்னபிற விளைவுகள் பற்றியெல்லாம் சிந்தித்து, மனதின் அடியாழ அன்பிற்குள் மட்டும் காதலைப் புதைத்துக் கொள்கையில்; அது காமம் உதிர்த்த நட்பாகவோ, சகோதர பாசமாகவோ, குரு பக்தியாகவோ, பிள்ளைகளின் மீதான பற்றாகவோ தாயன்பாகவோ கூட திரிந்துகொள்ள நேரிடுகிறது.
எனவே காதலுக்கு ஒரு வரம்பில்லை, வயதில்லை; ஆனால் கண்ணுண்டு. நமைச் சிந்திக்கவைக்கும் மலையளவு திறன் உண்டு. நம்மைப் பக்குவப் படுத்தும் பலம் உண்டு. நம்மை கூர் தீட்டக்கொடிய செம்மைமிகு சக்தி காதலுக்கு உண்டு. அதை எந்த வியாபாரத்திற்கும் உட்படுத்தாமல் வேறெந்த சுயநலத்திற்கும் ஆட்படுத்தாமல் மனதுள் தேக்கிக்கொண்டு நல்லுணர்வின் சாட்சியாய் நடப்போருக்கு வாழ்க்கை தானாகவே காதலின் புனிதவட்டத்திற்குள் அகப்பட்டுக்கொள்கிறது.
அதன்பின் காணுமிடமெல்லாம் மனிதர் மீதான; பிற உயிர்கள் மீதான; வாஞ்சையை மனது தானே ஏற்படுத்திக்கொள்கிறது. ஒரு மலரைக் கொய்தெறியக் கூட மனதை அஞ்சவைக்கிறது. எங்கும் எதிலும் யார் மனதும் உடைந்துவிடாத நிலையைத் தேடியே சுற்றிவரும் வாழ்விற்கிடையே காதல் சந்தனமாய் காற்றெங்கும் மணக்கிறது..
அத்தகைய ஒரு நல்ல மனநிலையின் மனிதர்களைத் தாங்கி சுற்றும் பூமி நல்லுயிர்களின் களமாக விளங்க; காதல் ஆங்காங்கே அன்பாய் நட்பாய், பாசமாய் பூத்துக்கொள்கையில்; எல்லோரிடமும் எல்லோரும் விட்டுக் கொடுத்தல், பற்றோடிருத்தல், புரிந்து நடத்தல், பிரியம் கொள்ளுதலில்; பூமி சண்டையை’ வஞ்சினத்தை’ மனதின் வக்கிரத்தையெல்லாம் ஒழித்துக்கொண்டு நல்லுயிர்களின் நிலமாய் விளங்கும்..
விளங்க வாழ்த்துக்கள்..
வித்யாசாகர்