ஒரு உடையும் சிறகில் உதிரும் இறகில்
முடையும் பொருளில்
தோல்வி வென்றுகொள்கிறது, அல்லது
வெற்றி அவசியமற்றும் போகிறது;
கூடைகளே வாருங்கள் –
கோழிகளின் இறப்பையும்
இறகுகளின் வெற்றியையும்
இயற்கையின் கணக்கில் ஒன்றென்று எழுதுவோம்!
மாட்டுவண்டி உருண்டோடுகையில்
அவிழ்ந்த சக்கரம் கழன்று ஓடி
பிள்ளைகள் கீழே விழ
முடியாமல் சுமந்துக்கொண்டு ஓடிய மாடு நின்று
ஓய்வெடுக்கத் துவங்கியது;
மாடுகளே ஓடிவாருங்கள்
நீங்கள் வாங்கிய சாட்டையடிகளைச் சேகரித்து வையுங்கள்
ஊர் அவனை அடிக்க வருகையில்
தப்பித்து ஓடினால் அந்த சாட்டையடிகள் அவனைப்
பிடித்துத் தர உதவும்!
தேர்வுகள் முடிகிறது
முதலும் இரண்டுமாய் மதிப்பெண்களும்
சில குழந்தைகளின்
மகிழ்ச்சிப் பூரிப்பும் குவிகின்றன,
ஆங்காங்கே சாக்கடையும்
சில முனைமடங்காத புத்தகங்களும்
மூச்சு திணறி சில பிள்ளைகளும் இறந்துக்கிடந்தன;
பிள்ளைகளே எழுந்து வாருங்கள்
சேற்றில் புதைந்த மரணத்தின் உயிரை
கண்ணீரில் சுமந்துச் சிவக்கும்
பெற்றோர்களின் ஈரவிழியைப் பாருங்கள் – உங்களின்
வெற்றி மீண்டும்
பெற்றோரின் முயற்சியால் மாற்றியெழதப் படலாம்!
தேயிலைத் தோட்டதிலும்
தீக்குச்சி மருந்துக்குள்ளும்
பட்டாசுகளோடு சேர்த்தெரித்த மனசுமாய்
மனிதம் கொன்று
பணத்தை அள்ளிக் கொள்கிறான் மனிதமூடன்,
ஒரு பணக்கட்டினை மிதித்துக் கொண்டு
நகர்ந்துச்செல்கிறதொரு ஆடு,
ஆட்டிறைச்சி தின்போரே; மனிதர்களே வாருங்கள்;
நம்மைச் சுற்றியொரு கூடாரம்
கட்டிக்கொள்ளுங்கள்
நாளை நம் பிள்ளைகள்
நமைக் கூட கொன்றிட நேரிடும்; இறைச்சிக்காய்!!
————————————————————-
வித்யாசாகர்