தெரு தெருக்குச் சாராயம்
வழிநெடுக்கப் போராடும்
வறுமைக்குக் குழிதோண்டும்
வாழ்க்கைக்கு பாதாளம்!
இளமைக்கு இடராகும்
இயற்கைக்கு எதிராகும்
இன்பத்தின் எல்லையிலும்
போதை; துன்பத்தின் துளிராகும்!
கல்விக்கும் கால் சறுக்கும்
கடலில் உப்பாய்ச் செல்வங் கரையும்
சந்ததிக்கும் குடிகாரப் பழிசூட்டும்; சாகும்போது(ங்)கூட
ச்சீ இவனான்னு பிறர்வாயில் பிறப்பு நாறும்!
ஒருநாள்னு குடிப்பவனும்
ஓலைக் குடிசையில் அடிப்பவனும்
மாடிவீட்டில் காலாட்டி பெப்சியூத்தும் பெருமகனும்; போதைக்கு
விலைபோன புழுவுக் கீடென்று திருந்துகையில் தெரியவரும்!
ஓரறிவு மலரும் ஒருகாடு மணத்துதிரும்
நாலறிவு பறவை கூட நீர்விட்டு பாலருந்தும்
ஐந்தறிவு கால்நடையும் நாற்றமெனில் நகர்ந்துப்போகும்; பகுத்தறியும்
மனிதனுக்கு போதை குலமொழித்தாலும் குடிக்கப் பிடிக்கும்!
கல்லில் முளைக்கும் புற்கள் அழகு
மண்ணில் ஊறும் தங்கம் உயர்வு
சேற்றில் மலரும் செந்தாமரை சிறப்பு; போதையில் நாறும்
மனித நாற்றுக்களோ நாகரிகப் புரட்சியின் வெகுவேக வீழ்ச்சி!
—————————————————————
வித்யாசாகர்
ஆம் ..போதைச் சேற்றில் மனித நாற்றுக்கள்… தள்ளாடுவதை வருத்தமுடன் பதிந்திருக்கிறீர்கள் ! சம்பந்தப் பட்டவர்களுக்கு உறுத்தவேண்டும்.
LikeLike
சமூகத்தின் சீர்கேடுகளுக்கு முதன்மை காரணம் இந்த கழிவு நீர் அதை குடிப்பவனின் எண்ணமும் கழிவை போல நாற்றம் கொண்டதாக தான் இருக்கிறது …….
அந்த சூழலில் அவன் எதை பார்த்தாலும் அது அவனுக்கு சேறாகவும் பிழையாகவும்தான் தெரியும் அப்படிப்பட்ட சேற்றில் இருந்து எப்போது விடுபட போகிறானோ ???
இந்த அரசாங்கம் எதற்க்காக அதை திறந்து வைத்திருகிறது என்றால் அந்த போதை குழியில் அனைவரையும் தள்ளி மூடிவிட்டு அந்த பாலை நிலத்தில் தனித்து நின்று இராட்சியம் செய்யத்தான்……..
இவர்களை ஒன்றும் செய்ய இயலா இயலாமை மட்டுமே எழுத்தில் பிரதிபலிகிறது ……….
உங்களின் எண்ணம் தான் எனக்கும் என்ன செய்ய வெந்து புழுங்குவது மட்டுமே இப்போது சாத்தியம் வித்யா
LikeLike
நன்றி உறவுகளே, ஏற்கனவேக் கூட நிறையப் பேசியுள்ளோம். எதுவாயினும் குடி ஆக்கப்பூர்வமான சூழலை ஏற்படுத்த நம்மண்ணிற்கு உகந்ததல்ல. அதை விட்டொழிப்பதே வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மையை பயக்கும்.. உடனிருக்கும் தோழமைகளையும் குடியுதற கெஞ்சுங்கள்; அவரின் வாழ்வை மீட்ட நன்றிக்கடன் உங்களையும் சாரும்..
LikeLike