எனையாளும் ஐயனுக்கு
மடிதாங்கும் அன்னைக்கு
ஒளியாகி வளியாகி உயிராகி
உலகின் காட்சிகளாய் விரியும் பரமனுக்கே முதல்வணக்கம்!
மொழியாகி பேச்சின் அழகாகி
முதலாகி எழுத்தின் மூலமாகி
விழுதாகி எங்கும் செறிவாகி
தெளிவான எந்தன் அறிவே; தமிழே வணக்கம்!
நெருப்பின்றி நீளும் ஒளியாகி
மின்தெருவெங்கும் தமிழின் சுவையாகி
இலக்கிய வணப்பிற்கு பலம்சேர்க்கும் இடமாகி
எம் கருத்துக்கும் செவிசாய்க்கும் அவையே; சந்தவசந்தமே வணக்கம்!
கவியாலும் கற்றக் கல்வியாலும்
உழைப்பாலும் கலைத் திறனாலும்
திகட்டாத எம் தமிழுக்கு; சளைக்காது வார்த்தைச் சரம்கோர்த்து
மொழியாளுமெங்கள் தலைமைக்கு
இச் சிறியோனின் சிரந்தாழ்ந்திட்ட மரியாதை மிக்கதொரு வணக்கம்!!
கவியரங்கம் : 37
தலைமை : ஐயா தமிழ்த் திரு. வா.வே.சு.
தலைப்பு: “திசைமாற்றிய திருப்பங்கள்”
இடம் : சந்தவசந்தம் இணைய குழுமம்
மேலெறியப்பட்ட பந்தொன்று
கீழ்விழும்போன்ற சமையமது..
வாழ்வின் சறுக்கலில் சாய்ந்த குடும்பமொன்று
பசிப் பள்ளத்தில் விழுந்து
எழுந்திருக்கமுடியாமல்
குஞ்சுப் பறவைகளெல்லாம் தாயினலகைக் கொத்திய நாட்களது..
பழையச் சாதத்தில் தண்ணீர் ஊற்றி ஊற்றி
வயிறுகளை நிரப்புவோம்;
அம்மா
கண்ணீரைச் சிந்திச்சிந்தி வீடெங்கும் நனைப்பாள்;
வீடு
அப்பாயிருந்த நினைவுகளைச் சுமந்துக்கொண்டே
வறுமையில் மூழ்கும்..
வறுமை தனது வலிய கால்கொண்டு
மிதிக்கும்;
வாழ்க்கைச் சிறகுகளைப் பொருளாதாரம் உடைக்கும்
வீட்டாரின் சோற்றிற்கு வழி தேடியலைந்த நாட்களை
சித்திரம் வரைந்து வரைந்துப் புதைப்பேன்;
சில மீதநாட்களை
கராத்தே என்று தொலைப்பேன்..
கடைசியில் ஓவியம் ஒரு கையாகி
நம்பிக்கை மறு கையாகி
செல்வாக்கென்னும் துடுப்பின்றி
வெற்றியின் இலக்குநோக்கி
வறுமைக் கடலில் நீந்தியப் பயணமது..
வாழ்க்கையை
அன்னாந்து வாஞ்சையோடுப் பார்க்க
அதற்குமுன் வலித்த வலிகளெல்லாம்
வாசல்களாய் மெல்ல மெல்ல
திறந்துவந்த தருணமது..
தலைகொத்திய மீன்கள் பின் வருந்தி
திசைக்காட்டியதைப் போல;
உடல்சுட்ட வெல்டிங் வேலை
எழுத ஏடெடுத்தும் தந்ததெனக்கு,
மனஞ் சுடும் மிருகங்களுக்கிடையே
மனிதரை மதிக்கும் மேலுணர்வும்
கீறப்பட்ட இடமெங்கும் தழும்புகளாய்ப் பூத்தது..
சிறகுகளுக்குப் பறக்க கனவுகள்
கற்றுத் தருவதும்,
கனவில் விரிந்த வானம்
வாழ்க்கையை வெளுப்பதும் கவிதைகளாயின;
கதறிக் கதறியழுத அழைகளும்,
கல்லில் அடித்த
ஆணிபோன்ற பிடுங்கமுடியா வலிகளும்
கதைகளாயின..
இரவில் எழுத்தென்றும் பகலில்
பற்றவைப்பென்றும்,
பகலில் மேல்படிப்பென்றும் இரவில்
படைப்பென்றும்
உடம்பின் வலிகளை
வெற்றியின் நிலத்தில் புதைத்தேன்;
சிந்தும் வியர்வையையும்
சோர்ந்த சமையங்களையும் வாழ்வின் பாடத்தில் நிறைத்தேன் ..
வருடம் மாற மாற வாழ்க்கையும் இடம் மாறி
பசி தேடியலைந்த பாதை
பணம் தேடியலைய,
உழைப்பின் வலிமையில் நின்ற இடம் நகர்ந்து நகர்ந்து
உயர்ந்து உயர்ந்து
சற்றுத் திரும்பிப் பார்க்கையில் –
கண்ணீரின் தடம்..
காயங்கள் ஆறாத ஏமாற்றத்தின் வடு..
ம்ம் பார்க்காதே போ.. ஒடு.. ஓடு..
இன்னும் வேகமாக ஓடென்று கன்னத்தில்
மாறி மாறி அறைந்தது.
மீண்டும் மீண்டும் ஓடுகிறேன்
ஓடிக்கொண்டேயிருக்கிறேன்
இடையிடையே திரும்பிப் பார்த்துக் கொள்கையில்
சிலரென்னை கைகாட்டி
பொறியாளனென்றும்
மேலாளரென்றும்
படைப்பாளியென்றும் பேசிக்கொள்ளும் சப்தம் கேட்கிறது..
எனது எழுத்துக்களையும் ஆய்ந்து சிலரை
முனைவராக்கியத் தகுதி மெல்ல
பாடல்களாய் பரிணாமமெடுக்கிறது
பாடல்கள் வெள்ளித்திரையை நோக்கியும் நகர்கிறது
இப்படி மதித்தும்
மதிக்கப்படாமலுமின்று
வெற்றிகளில் சில கண்ணெதிரே கனக்க,
அதைத் தலையிலேற்றிக் கொள்ளாமல் – அன்று
பழையச் சாதத்தில் ஊற்றி ஊற்றிக் குடித்தத் தண்ணீரை
அடிக்கடி நன்றியோடு நினைத்துக்கொண்டு –
‘திசைமாற்றியத் திருப்பங்கள்’ தலைப்பு பற்றி
சிந்திக்கிறேன்;
உண்மையும்
முயற்சியும்
உழைப்பும்
நம்பிக்கையும்
நம்பிய மனிதர்களும்
கடவுளும்
திறந்துவைத்த வெற்றியின் கதவுகள்
வாழ்வின் வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது;
மனிதம் மட்டுமே அதில் பெரிதாக மின்னுகிறது..
——————————————————————-
நன்றிகளுடன்…
வித்யாசாகர்
அனுபவத் தழும்புகளின் மீது நம் உணர்வுகள் விரல் நீட்டி வருடும் ஒரு சுகமான காலத்துணுக்கில் இக்கவிதை தங்களின் உள்ளிருந்து தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்கிறது..!
நாடகக் கொட்டகைக்கு வரும் பார்வையாளர்கள் போல் சிறுக சிறுக செல்வம் சேர்வதும் நாடகம் முடிந்து ஓரிரு நிமிடங்களில் கொட்டகை வெறிச்சோடிப் போவதுபோல் செல்வம் நம்மை விட்டு போவதும் என்று நிலையாமை அதிகாரத்தில் வள்ளுவம் வாழ்ந்ததைக் காட்டும்..!
அதே செறிவோடு வாழ்வின் வீழ்ச்சியை மேலிருந்து கீழ்விழும் பந்தின் வேகத்திற்கு ஈடுவைத்துக் கவிதையைத் தொடங்கியதுமே அது மேலே வீசப்பட்டப் பந்தாக சிவ்வ்..வென்று எழும்புகிறது..! பாராட்டுக்கள்..! வாழ்த்துக்கள்..! நல்லக் கவிதைக்கு நன்றி..!
LikeLike
//குஞ்சுப் பறவைகளெல்லாம் தாயினலகைக் கொத்திய நாட்களது..// பாலில்லா வரட்டுக்காம்பைப் பசியோடுக் கவ்வும் மழலையின் காட்சியாக மனதில் தைக்கிறது..!
LikeLike
//சிறகுகளுக்குப் பறக்க கனவுகள்
கற்றுத் தருவதும்,
கனவில் விரிந்த வானம்
வாழ்க்கையை வெளுப்பதும் கவிதைகளாயின//
வாழ்க்கையை இதைவிட வேறுவகையில் புரிந்துகொள்வது…எளிமையானதல்ல!
LikeLike
தங்கத்தை எதிர்பார்த்திருப்பவனுக்கு தங்கங்களாகவே கிடைத்தால் வாரி எங்கு வைத்துக் கொள்வது என்று பயம் வரும்போல எனக்கும் ஒரு அதிர்ச்சியான பலத்தை உள்நிரைக்கிறது உங்களின் தொடர்வார்த்தைகள் ஐயா..
உண்மையும் உழைப்புமே நமை உயர்த்தும் சக்தி என்பதை பறைசாற்றும் நோக்கின் கவிதையிது அவ்வளவே; இன்னும் பயணிக்க கடுந்தூரமுண்டு. உங்களின் நம்பிக்கையையும் சேர்த்தெடுத்துக்கொண்டே பயணிக்கிறேன். நன்றியும் வணக்கமும் ஐயா..
LikeLike
கடந்த வாழ்க்கை பயணத்தை, அழகான வார்த்தை கோர்வையுடன் வலிக்க சொல்லி உள்ளீர்கள். எனக்கும் வலிக்கிறது.
LikeLike