மனதிற்குள் மறக்காத முகம்
அவளுடைய முகம்;
இதயம் முழுதும் சுமக்கும் நினைவுகளில்
சிரிக்கவும்
அழவும் வைப்பவள் அவள் மட்டுமே;
அவளுக்கும் எனக்கும் அன்று
அப்படி ஒரு காதல் இருந்தது..
நான் அழுதால் அவள் அழுவாள்
நான் சிரித்தால் அவளும் சிரிப்பாள்
ஏனிப்படியிலேறி
மேலிருந்து தலைகீழ்விழும் குழந்தையைப் போல
மனசு மேலேறி மேலேறி மீண்டும்
அவளின் காதலுள் விழுந்த அந்த கணங்களை
அவளுக்கும் நினைவிலிருக்கும்;
ஒருநாள் இரண்டு நாளல்ல
பதினாறு வருடங்கள் ஆகிறது நாங்கள் பார்த்து..
காலமும் தூரமும்
காணாமுகமும் எங்கள் காதலை
மறக்கடித்ததில்லை..
காத்திருந்து காத்திருந்து தவித்த நேரமெல்லாம்
மனதிற்குள் புகுந்து
உயிர்வரை நிறைந்துப் போனவர்கள் நாங்கள்..
எழுதிய டைரியை கிழித்துப் போட்டு
கிடைத்த வாழ்க்கைக்கு அகப்பட்டுக்கொண்டதைப் போல
மனத்தைக் கிழித்து
அழித்துக் கொள்ள முடியாத நினைவும்
வலியான நாட்களும்
வலியாகவே கடக்கிறது எங்களுக்குள்..
குழாயடியில் பார்த்ததில்லை
கடைத்தெருவில் நின்றுப் பேசியதில்லை
பள்ளிக்கூட புத்தகத்தில் –
காதல் கவிதையெழுதித் தந்ததில்லை
முகத்தோடு முகம் பார்த்து
மனதோடு மனது பேசி
ஒரே வீட்டில் வருடமிரண்டையும்
மௌனத்தில் கழித்துப்
பிரிகையில் –
கண்ணீரால் மனதை கசக்கி
உயிர்வரை வலித்துக் கொண்டு
வீட்டிற்கெனப் பிரிந்த ஒரு உன்னத காதலின்
வெளியில் தெரியா சாட்சிகள்தான் நானும் அவளும்..
அறியாத மொழியும்
புரியாத இடமும்
புதிதாக எல்லாமே முளைக்கின்ற தருணம்
பூ போல் உள்ளே பூக்க
காதலாய் காற்றென வீச
சிரித்துக்கொண்டே எதிர்வந்து நின்றவள்,
மணக்கின்ற மனசு இதுவென்று அறியும்
பார்வை பேசிய மொழியில்
உயிராழம்வரைத் தொட்டு
உடல் சிலிர்க்கப் பார்த்த
அவளை
இன்று வரை மறந்து மனசது துடித்ததேயில்லை..
பாட்டுகேட்டு வலிக்கையில்
படம் பார்த்து வலிக்கையில்
கனவில் அவளைக் கண்டு மனசு நோகையில்
ஐயோ இன்னொரு காதலரிப்படி இனி
பிரியவேக் கூடாதென்று எண்ணியழுவேன்
அவளும் அழுதிருப்பாள்
துடித்திருப்பாள்
பாவமவள், பார்வையில் மட்டுமே பேசத் தெரிந்தவள்
வலிக்கையில் அழமட்டுமே முடிந்தவள்
அழையையும் –
வலிக்க வலிக்க அடக்கிக் கொள்பவள்..
அவளை முதலில் கண்ட நாளும்
விட்டுப் பிரிந்த நாளும்
காதலைச் சொன்ன நாளும்
காதலித்த நாட்களெல்லாமும்
காலண்டரில் கண்டால் கூட வலிக்குமென்று
யாருக்கு இனி புரியப் போகிறது;
என்ன தான் காதலென்றாலும்
மனசு என்றாலும்
நோகும் என்றாலும்
உயிர் போகுமென்றாலும்
இந்த உலகத்திற்கென்ன (?)
அது பற்றியெல்லாம் யாருக்கிங்கு கவலை ?
சுத்தும் பூமி எங்களுக்காக நிற்கவாப் போகிறது ?
அதன் சுழற்சியில் வரும்
இரவையும் பகலையும் நிறுத்ததாத காதல்
மனதிற்குள் மட்டும் வலிக்க வலிக்க வாழ்வதை
தலையெழுத்தென்றுச் சொல்லும் உலகை
எங்களின் இருசாமி மதங் கொண்டு எப்படி மறுக்க (?)
எப்படியோ
ஒன்றுமே இயலாத நிலையில்
பிரிய மட்டுமே முடிந்தது எங்களுக்கு.
நிமிடம் மறக்காது
ஒருநாள் பார்க்காது உதிக்குமந்த
சூரியனைக் கூட
வெறுக்கவைக்கும் நெருக்கத்திலும்
விதியைப் பற்றி அறியாமலே பிரிந்தோம்
நிரந்தரமாய் பிரிந்தோம்
பிரிவோம் என்று அன்று எண்ணாததைப் போல
சேர்வோம் என்றும் எண்ணியதில்லை
ஆனால் சேர்ந்தேயிருப்பதாகவே எண்ணி
கடக்கிறதெங்கள் காலம்..
—————————————————–
வித்யாசாகர்
கண்ணீருடன் இதயம் கனக்கிறது….
அழகான, மனதை உருக்கும் காதல் நினைவுகள்….
நினைக்க கனத்திருப்பது நினைக்க இனிக்கவும் செய்கிறது. தங்களின் கருத்திற்கு நன்றியும் வணக்கவும் மகா..