எனக்கென்று பிறந்த ஒன்று
இன்று எனைவிட்டுப் போகப்போகிறது;
நான் சிரிக்கையில் சிரித்து
அழுகையில் அழுத ஒன்று போகப்போகிறது;
நடக்கையில் நடக்கவும்
உறங்கையில் உறங்கவும்
சுடுவதைக் கூட சகிக்கவும் முடிந்த ஒன்று
போகப்போகிறது
வளரும்போதே உடன் வளர்ந்து
எனை வளர்த்த
தாயைப் போன்றது’ இன்றுப் போகப்போகிறது
அசிங்கம் பேசினாலும் சரி
அவதூறு பேசினாலும் சரி
செய்வது எதுவாயினும்
நான் சொல்வதை மட்டுமே செய்த ஒன்று
போகப்போகிறது;
எனைவிட்டு இம்மியளவு பிரிந்ததில்லை
வேறு யாருக்கென்றும் பிறக்கவில்லை
எனக்காகவே பிறந்ததின்று
போகப்போகிறது;
கல்லை நொருக்கவும்
காலத்தை அறுக்கவும் முடிந்த அதை
எப்படி என்னோடிருந்து அகற்ற
மனம் கொண்டேனென யோசிக்கிறேன்,
வேறென்ன செய்ய வலிக்கான மருந்தில்லை
வலியை பொறுக்கும் பலமுமில்லை
வேறு வழியின்றி
அகற்றியப் பல்லிற்கு விடைகொடுக்கிறேன்; போய் வா..
பல் போனால் சொல் போனதாய்
சொன்னவர்களை பயத்தோடிங்கு
நினைவு கூறுகிறேன், போ..
என்றாலும் எனது சொற்களை சொச்சப் பற்கள்
சேகரித்துக் கொள்ளும்
தமிழ் இனியுமதில் நன்றே மணக்கும்..
பிடிங்கி எரியுமளவிற்கான வலியை யொழித்த
விடுதலையை இனி
மற்ற பற்கள் கொண்டாடும்..
வாழ்க அந்த பல்பிடுங்கிய மருத்துவர்
ஒழிக சொத்தைப் பல்வலி..
———————————————————–
வித்யாசாகர்
இந்தக் கவிதைக்கான ஒரு காரணமுண்டு.
விடுமுறையில் ஊருக்கு வந்தப்போ ஒரு புதிதாக ஆரம்பித்த மருத்துவமணையில் அவருக்கு ஊக்கம் தருவதாக எண்ணிக்கொண்டு வீட்டிலிருந்து பல் பிரச்சனை இருந்த எல்லோரையும் அழைத்துக்கொண்டு போயிருந்தேன். அப்போ இடையில் ஒருநாள் இடது பக்கம் ஏனோ வலியா இருக்குன்னு அந்த சகோதரியிடம் வாயைக் காட்ட, அவர் இடது பக்கத்தை விட்டுவிட்டு வலது பக்கம் மேலே கொஞ்சம் சொத்தையைப் போல இருக்கே அதை மெட்டல் போடவா என்று கேட்டு போட்டும் விட்டார். இடது பக்கம் பிறகு பார்ப்போம் என்று எண்ணி எண்ணி எண்ணியெடுத்துவந்த விடுமுறை நாட்கள் தீர்ந்துப் போக குவைத்திற்குத் திரும்ப வந்துவிட்டேன்.
அவர் போட்ட அந்த மேல்பக்கத்து பல்லின் மெட்டல் அடுத்த ஒரு வாரத்தில் விழுந்துவிட, எது சாப்பிட்டாலும் உள்ளே போய் புகுந்துக் கொள்ளும், புகுந்து எடுத்து புகுந்து எடுத்து நாளடையிவில் அது ஒரு பெரிய தொந்தரவாகிப் போக அதை நிரப்பவேண்டி இங்குள்ள மருத்துவமணைகளில் ஏறி இறங்கி அலைந்து கடைசியில் ஒரு லெபனானி மருத்துவச்சியிடம் போனேன். அவள் தன் வசதியைக் கூட்ட எனைப் போன்றோரை இப்படியா செய்வாள்;
சொன்ன பல்லினை விட்டுவிட்டு வேறிரு பற்களில் கோடு போட்டது போல பள்ளமாக வெட்டி அதில் ஒன்றை நிரப்பி விட்டு நீ கொடுத்த பணம் சரியா போச்சி இன்னொன்றை இன்னொரு நாள் வந்து நிரப்பிக்கொள் போ’ என்றாள்.
எல்லாம் மயக்க மருந்து கொடுத்துவிட்டு செய்ததால், அவள் உள்ளே எந்தப் பல்லில் என்ன செய்தாள் என்று புரியவிதீண்டிப் பார்த்தால் பகீரென்றது.
அந்த ஓட்டை அப்படியே யிருக்க, இன்னொரு இடம் பள்ளமாகவும் அதற்கு முந்தையப் பல்லில் மெட்டல் வைத்து அடைத்துமிருக்க வேறு வழியின்றி உடனே மருத்துவமனைக்கு ஓட,
அவள் பேய் போல முகத்தை விகாரமாக வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, எங்கு இது பெரிய பிரச்சனை ஆகுமோ என்றெண்ணி, அந்த, ஊரில் லேசாக மெட்டல் போட்ட மேல் பக்க பல்லை மயக்கம் கொடுத்துவிட்டு முழுக்க பெரிதாகக் குடைந்தெடுத்துவிட்டு தற்காலிக களிம்பை தடவிவிட்டு, போ போய் மூன்று நாட்கள் கழிந்து வா நான் இலவசமாக இதை அடைத்துத் தருகிறேன் என்று சொல்லிவிட்டு;
மூன்று நாட்கள் கழிந்துப் போனால், அதெல்லாம் மெட்டல் போட இயலாது ரூட்கேனல்தான் செய்யனும் ஆனால் அதற்கு பணம் நிறைய செல்வாகும் பரவாயில்லையா என்றாள். ஏற்கனவே மொத்தப் பற்களின் எக்ஸ்ரே, வொய்ட் மெட்டல் அது இதுன்னு பணத்தை ஒருவாறு பிடிங்கிக் கொண்டவள் உள்ளே பார்க்கக் கூட பார்க்காமல் வந்ததும் அப்படிச் சொன்னதும் எனக்கு அவளின் நயவஞ்சகம் புரிய கோபம் வந்து மருத்துவமனையின் மேலதிகாரிகளிடம் புகார் கொடுத்தேன்.
அவர் வந்து மின்விளக்கு வைத்து பார்த்துவிட்டு, நடந்த உண்மையை ஒருவாறுப் புரிந்துக்கொண்டு அவர்களின் மொழியில் இருவரும் உரையாடிவிட்டு ஆமாம் பல்ப் மொத்தம் போயிடுச்சி இனி இதை பிடுங்கனும் அல்லது ரூட்கேனல் தான் செய்யனும் தவிர இன்னொரு பல் வேறு அறுத்து அப்படியே பாக்கியாக உள்ளது அதையும் நிரப்ப பணம் வேண்டும் என்று சொல்ல.. எப்படியிருக்கும் எனக்கு யோசித்துப் பாருங்கள்..
எது எப்படியானாலும் சரி, இப்படியொன்று இனி இன்னொருத்தருக்கு நடக்கக் கூடாது என்றெண்ணிக்கொண்டு, அட்மின் முதல் மேல்மட்டத்திலுள்ள எல்லோரையும் வரவழைத்து பெரிய பிரச்சனையாக கொண்டுபோனேன்.
அவளின் கணவர் வரை மருத்துவமனைக்கு வந்திருக்க அவள் கண்கள் கலங்கிப் போனாள். இதை மேலும் அரசிடம் புகார் செய்தால் எனக்கு நஷ்ட ஈடு பெரிதாகக் கிடைக்கும். ஆனால் ஆரம்பத்தில் உதவிய நம்ம சேரநாட்டு நர்ஸ்கள் சற்று பின் வாங்கினார்கள். நான் முதலில் பேசியது, அதைக் கேட்டுவிட்டும் அந்த மருத்துவச்சி உதாசீனமாக இங்ஙனம் செய்தது எல்லாம் ஒன்று அவர்களின் கேமராவில் பதிவாகியிருக்கும் அல்லது அந்த நர்ஸ்களுக்கே வெளியில் சொல்லமுடியும். என்றாலும் இது அவர்களின் வேலையை பாதிக்கும் விஷயம். மருத்துவமனைக்கு ஆதரவாக மட்டுமே அவர்கள் பேச இயலும்.
அந்நிலையில் அவர்களை தனியே அழைத்து நீங்கள் யாரும் எனக்கு சார்பாக பேச வேண்டாம் சகோதரி, என் நிலையை நான் சமாளித்துக் கொள்வேன், உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்று எனக்கு நானே ஒரு கத்தியை தீட்டிக் கொடுத்துவிட்டு –
நிர்வாகி மற்றும் மூத்த மருத்துவர்களுக்கு நடந்ததை மட்டும் இந்தளவில் தவறு இதென்று புரியவைத்துவிட்டு இனி நான் இங்கு மருத்துவம் செய்வதாக இல்லை, மொத்த மருத்துவக் குறிப்பு மற்றும் கதிரியக்கச் சான்றிதழ் என எல்லாவற்றையும் கொடுங்கள், உங்களை எங்கு பார்க்கவேண்டுமோ அங்கு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எச்சரித்துவிட்டு வெளியே இறங்குகையில் –
அந்த மருத்துவச்சியின் கண்களில் படிந்த ஈரமும் பயமும் சற்று எனைத் தொட்டுவிட, ஒரு பெண்ணாயிற்றே என்ற இரக்கமும் மனதில் சுரக்க, அல்லாது அந்த மற்ற இரண்டு செவிலித் தாயிகளின் நினைவும் வர, எப்படியோ என் கணக்குப் படி, ‘இப்படி நோயாளியை அலைகழிக்கச் செய்வது தவறு என்று அவளுக்குப் புரிந்துவிட்டது, இனி வேறென்ன வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அந்த நிகழ்வை அதோடு மறந்துவிட்டேன்.
கேள்வியுற்ற நட்புறவுகள் எல்லோரும் நீ அரசில் புகார் கொடு நிறையப் பணம் கிடைக்கும் இப்படியே அவளை இதோடு விட்டுவிடாதே என்று மேலும் திட்டித் தீர்த்தனர். எனக்கு பணம் அத்தனைப் பெரிதாகத் தெரியவில்லை. அதற்கு மேல் அலைந்து நேரத்தை வீணடடிக்க வேண்டாம் இனி யாருக்கும் அவள் அப்படி செய்யமாட்டாள் அது போதும் என்று நம்பிக்கொண்டு..
நாட்கள் வலியோடு கடக்க. அந்த இரண்டில் ஒரு பல்லை மட்டும் சரிசெய்ய எண்ணி வேறு தனியார் மருத்துவமனைக்குச் சென்று விவரம் சொல்ல, அந்த மலையாளி மருத்துவர் உனக்காக நான் குறைந்த செலவில் செய்துத் தருகிறேன் நீ கவலைப்படாதே என்றுச் சொல்லி தள்ளுபடியில் ஒரு பல்லிற்கு மெட்டல் நிரப்பிவிட்டு, பணத்தையும் குறைவாக வாங்கிக் கொண்டு, இன்று நான் ஊருக்குப் போகிறேன் ஒரு பத்து நாட்கள் கழிந்து வா மற்றதைப் பார்ப்போம் அல்லது பிடிங்கிவிடுவோம் என்றார்.
ஐயோ !! பிடிங்குவதா “பல் போனால் சொல் போச்சி” என்பார்களே, பொறுத்திருந்து பார்ப்போம் என்று இருந்து இருந்து, பிறகது கன்னிப்போய் வலியென்றால் வலி அப்படியொரு வலியெடுக்கத் துவங்க, வலியையும் தாங்க முடியாமல், நல்ல பல்லை இப்படிக் கெடுத்த அவளின் துரோகத்தையும் ஜீரணிக்க இயலாமல், மேலே அதிக வைத்தியம் செய்ய இங்கு அதிகளவில் பணமும் செலவாகுமே என்று எண்ணிக்கொண்டு நாட்களை ஓட்டினேன். பிறகு வலியை தாங்க இயலாமல் போகட்டும் ஒரு பல்தானே என்று எண்ணி மனதை தேற்றிக் கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்று நேற்று தான் அந்த நல்ல பல்லை வீணாக பிடுங்கிவிட்டு வீட்டிற்கு வந்து, பல் போன சோகத்தை கவிதையாக்கவும் செய்தேன்.
இதில் பெரிய கொடுமை என்ன தெரியுமா? போன வருட விடுமுறையில் கீழ்ப்பக்கப் பல்லிடுக்கில் வலி என்று முதன்முதலாக மருத்துவமனைக்கு போனேனே நினைவிருக்கா ? அது இன்னும் கூட வலித்துக் கொண்டுதான் உள்ளது. அதை மீண்டும் ‘ஆ’விலிருந்து ஆரம்பிக்கவேண்டும் போல்..
வித்யாசாகர்
LikeLike
என்ன கொடும சார்…
LikeLike
அட அட இவ்வளவு கதை இருக்கா உங்கள் பல்லுக்கு…ஒரு தமிழ் படம் எடுக்கலாமே…
பல் கவிதை சூப்பர்..
LikeLike