ஒரு பெருநகரத்தின் தெருவழியே நடக்கிறேன்
வெறும் கவிதைப் பொறுக்கித் திரிகிறேன்,
கால்சட்டை ஓட்டையினுள் உலகை ரசிக்கிறேன்
அதைத் தைக்காத கைமுறித்துக்கொண்டு – கவிதைக்குள்
முடமாய்க் கிடக்கிறேன்;
வாசலில் பூசணி உடைக்கிறேன்
உள்ளிருக்கும் சாமிகளை கண்மூடிச் சபிக்கிறேன்,
காலத்தில் நல்லது கெட்டது பார்க்கிறேன்
இரவு-பகலைக் கூட இனாம் வாங்கித் தொலைக்கிறேன்;
யாருக்கு யாரென்றுத் தெரியாமலே
காதலில் உலகை மறக்கிறேன்;
பின்பு கட்டிய மனைவின் தாலிவைத்து – ஒரு
குவாட்டரேனும் வாங்கிக் குடிக்கிறேன்;
யாருக்கு என்னானால் எனக்கென்ன
எதிர்வீட்டு மல்லிகையில் மணக்கிறேன்,
எல்லாவற்றிலும் நானே ஜெயிக்க
எவரின் கழுத்தையறுக்கவும் துணிகிறேன்;
சோற்றுக்கு தெருவெல்லாம் அலைகிறேன்
எவன் பாட்டுக்கோ கைதட்டி குதிக்கிறேன்;
சினிமா பார்த்து கட்டவுட்டு வைக்கிறேன் – பெற்றத் தாயை
மிதித்தேறி அவனுக்குப் பாலபிசேகம் செய்கிறேன்;
குழந்தைக்கு விரல்நசுங்கிச் சிரிக்கிறேன்
மருத்துவம் செய்யா மனைகளையும் பொருக்கிறேன்,
காசுக்கு ஆன தொழிலென எதையும் வெறுக்கிறேன்
உலக மாற்றத்தையே மனதிற்குள்ளிருந்துத் தொலைக்கிறேன்;
கரியாகிப் போகப்போக பணத்தைப்
பட்டாசாக்கி வெடிக்கிறேன்,
குழந்தைகளை – பணக்காரச் சந்தோசத்தில்
கடன்பட்டேனும் புதைக்கிறேன்;
படிக்க புத்தகமின்றி அலைகிறேன்
பாடத்தை காணுமிடமெல்லாம் குருடாகித் தொலைகிறேன்,
உலகம் இருட்டு இருட்டென்று சபிக்கிறேன்
சாபத்தினுள் முதலாயென்னையே எரிக்கிறேன்;
மீண்டுமொரு –
பெருநகரத்தின் தெருவழியே நடக்கிறேன்
மயான எல்லைக் கண்டு திகைக்கிறேன்
மாயும் உலகமே வாவென்று விழிக்கிறேன்
கனவுதானென்றறிந்ததும் –
கை விசமள்ளிக் குடிக்கிறேன்!!
———————————————————-
வித்யாசாகர்
”இரவு-பகலைக் கூட இனாம் வாங்கித் தொலைக்கிறேன்;” ”குழந்தைகளை – பணக்காரச் சந்தோசத்தில்
கடன்பட்டேனும் புதைக்கிறேன்;” ” படிக்க புத்தகமின்றி அலைகிறேன்
பாடத்தை காணுமிடமெல்லாம் குருடாகித் தொலைகிறேன்,” யதார்த்தமான வரிகள்..!
LikeLike
நன்றி ஐயா. பெருநகரத் தெருக்களின் வாரிக் குவித்த குப்பைகளை எழுதி மட்டுமே என்னால் கூட்ட முடிகிறது.. எரிக்கும் சக்தியை சிந்திப்போர் எல்லோரும் சேர்ந்து ஏற்படுத்தட்டும்..
LikeLike
அருமையான சிந்திக்க கூடிய வரிகள்.
LikeLike
ஊரிலிருக்கையில் கண்ணை உறுத்தியது மட்டுமல்ல நெஞ்சில் தைத்ததும் ஏராளம் உமா..
ஊர்பார்த்த சந்தோசம்போலவே அங்கிருக்கும் ஜீரணிக்க இயலாவிசயங்களும் எழுத எழுத எழுதிக்கொண்டே இருக்கலாம். என்றாலும் அது நம்மூர், நம் வீடு நாமே சுத்தம் செய்வோம்..
LikeLike