ஆழக் கிணற்றிற்குள் தெரியும்
முகம்போலவே
தெரிந்துக்கொண்டேயிருக்கிறது
மனதுள் உன்முகம்,
நினைவுச் சிறையிலிட்ட உன்
மரணமொன்றே
வேகமாய் தள்ளுகிறது எனை
விதவையெனும் வார்த்தைக்குள்,
விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம்
மீண்டும் வாழ
இடம் தராத மனதிற்குள் மட்டுமே
சிறைவைக்கிறது என்னை,
சிரிக்கவும் அழவும் முடிகிற எனக்கு
பொட்டையும் பூவையும் தந்தாலும்
வண்ணப்புடவையின் மீதும் விதவை விதவையென்றே
எழுதுகிற மனசு அசிங்கமானது,
மனிதர்கள் மிக நல்லவர்கள்
கற்பிதம் குற்றமென கைகாட்ட
காணும் திசையெங்கும் தெரியுமுலகைக்
கண்டிக்கும் கடவுள் இங்கில்லை,
பெண் அழகானவள்
உடம்பு சுகமானது
அதை ஏற்கும் மனசு ஒன்றெனப் போதித்ததில்
முளைத்துவிட்டது அசுரச் செடிகளும்,
தாலியை வேலியென்று கற்ற எனக்கு
அது இல்லாதபோது நுழையும்
மிருகங்களைத் துரத்த
இன்னொரு மிருகம் வாய்ப்பது அவசியமற்றது,
மனதின் ஒழுக்கம் வெல்லும் திசையில்
மீண்டுமொரு பூ எனக்காகப் பூக்குமெனில்
பூக்கட்டுமென நடக்கும் தெருவில்
நீ மட்டுமே தெரிவதை மறைக்கத் தோற்கிறேன்;
மறுமணத்தை எண்ணாததும்
துறவறத்தை தீண்டாததும்
உன் அருகாமையை மறக்காததும்
இயல்பு எனில் யாரை இங்கு நான் நோக,
ஆணை பெண் வதைப்பதும்
பெண்ணை ஆண் வதைப்பதும்
மனிதத்தைக் கொல்லுஞ் சடங்கென்று ஒரு
சமபுரிதலை ஏற்படுத்த இன்னும் நிறையப் புனிதர்கள் தேவை,
பொட்டினை அலைக்காத
புடவையை வெள்ளையில் திணிக்காத
பூவிற்கும் என் வாசம் பிடிக்குமொரு மறுமலர்ச்சி
போதாத தெருவில் நடப்பதை பூனையின் கண்களே அறிகிறது;
இனி வாழ்வதற்கென்று இவ்வுலகில்
எங்களுக்கென்று ஒன்றுமில்லை,
நினைவுகள் கொடியது
நாளைக்குப்பின் வந்துவிழும்
வார்த்தைகள் நஞ்சுடையது என மிரட்டும்
மூப்பிற்குமுன் –
எங்களின் வலிகளைத் தொலைக்கும் மரணமேனும் வேண்டும்,
அல்லது உனை மறக்கச் செய்யும் ஒரு
மனிதர் வேண்டும,
இரண்டையும் தந்திடாத வார்த்தை “விதவை” யெனில்
அப்படிச் சொன்னவரை கொல்!!
—————————————————–
வித்யாசாகர்
அருமையான கவிதை. அவர்களின் பார்வையில் அவர்கள் படும் அவதிகள் புரிகிறது……
எனது அம்மாவின் அத்தையொருத்தி 16 வயதில் விதவைக்கோலம் – 88 வயதில் இறந்தார். அதுவரை அவரது மனது என்ன கஷ்டப் பட்டிருக்கும்……
LikeLike
பெண்ணின் வேதனையை அற்புதமாக சொல்லி உள்ளீர்கள்.
LikeLike