ஒரு மாத்திரைப் போடுங்க
ஒருநாள் ஆயுள் குறையும்
போடாதுபோனால் –
வாழ்வின் இரண்டுநாட்கள் குறையும்
எது உங்களுக்கு வேண்டுமென்றார் மருத்துவர்,
உயிர்வேண்டும்
உயிர்கூடு வேண்டும்
உயிர்கூடு தாங்கும் ஆயுள்
சற்று நீளவேண்டுமென்றேன்
சர்க்கரைக்கு ஒன்று
கொழுப்பிற்கு இரண்டு
ரத்தக்கொதிப்பிற்கு மூன்றுவேளைக்கு அரைமாத்திரை
ஈரல் பாதிக்கப் பட்டுள்ளது அதற்கொன்று
மாத்திரைகளால் வயிறு புண்ணாகாதிருக்க
உணவிற்கு முன் காலையும் மாலையும் ஒவ்வொன்று
இப்படி
நாட்களை மாத்திரைகளால்
கழித்துக் கொண்டிருந்தார் மருத்துவர்,
எனக்கு சாகக்கூட ஒன்று
கேட்கவேண்டும் போலிருந்தது..
—————————————————————————-
உப்பு எதிலேயும் சேர்த்துக்காதீங்க
காரமும் வேண்டாம்
புளிப்பு மசாலா கூடாது
சர்க்கரை நாக்கில் பட்டால் விசமென்றெண்ணி
வெளியில் உமிழ்ந்துவிடவும்
காலையில ஒரு மணிநேரம்
மாலையில் ஒரு மணிநேரம் நடந்தே ஆகணும்
வயிறு நிரம்ப சாப்பிடக்கூடாது
உணர்ச்சிவசப்படலாகாது
கோபம் ரொம்ப கெடுதல்
சிரிச்சமுகமா இருங்க; மனதை
இலேசாக வைத்துக்கொள்ளுங்கள் சரியா ?
ம்; எது சரி?
ஏனிந்த வாழ்க்கை ?
எது இனி இனிக்குமெனக்கு ?
என்றெண்ணிக் கொண்டு
திரும்பி எனது மனைவியின் முகம் பார்த்தேன்
அவள் முகத்தை –
வேறுபக்கம் திரும்பிக்கொண்டு விசும்பினாள்
பிள்ளைகளைப் பார்த்தேன்
அதுக பாவம்
ஐயோ அப்பா சீக்கிரமாப் போய்சேர்ந்திடுவேனோ
என்று பயந்து
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கப் பார்த்தன
எனக்கு, ‘நான் போனால்
என் பிள்ளைகளின் கதியென்ன ஆகுமோ என்ற
எண்ணம் வர, கண்ணீர் குபீரென்று விழிநிரம்பியது
அதற்குள்
அப்பா, அதலாம் ஒன்னுமில்லைப்பா
சரியாயிடும்பா கவலைப்படாதீங்கப்பா என்று
எனக்கு ஆறுதல் சொல்லமுயன்று
கட்டிப் பிடித்தவாறு
தோள்மீதும் மார்மீதும் பிள்ளைகள்
சாய்ந்துக்கொண்டன..
எனக்கு அவர்களின் அப்பா எனும்
குரலைக் கேட்கவும்
அவளின் அன்பிலூறியக் கண்ணீரைத் தாங்கவும்
இன்னும் கொஞ்சகாலம் தேவைபட்டது..
மருத்துவரைப் பார்த்து
சரி; சர்க்கரை உப்பு புளிப்பு ஏதுமே
வேண்டாம் டாக்டர்
எல்லாவற்றையும் நிறுத்திவிடுகிறேன்
எனது பிள்ளைகள் எனக்குப் போதுமென்றேன்,
மாத்திரைகள் என் மிச்ச நாட்களைத் தின்ன
பணம்கேட்டுக் காத்திருந்தன..
————————————————————————————————–
மனைவி தெருவில் நடந்துப் போகையில்
தூரநின்று கண்டேன் அழகாகத் தெரிந்தாள்
நான் தூங்கியெழுந்து
கண்ணாடி பார்க்க எத்தனித்தேன்; எதிரே
அவள் வந்து நின்றுக்கொண்டு
நீங்கள் எத்தனை அழகென்று முத்தமிட்டாள்
சற்று நேரத்தில் பிள்ளைகள் புறப்பட்டு
பள்ளிக்குச் செல்ல அணிவகுத்து நிற்கையில்
அவர்களைப் பார்த்து பார்த்து கண்கள் பூரிப்பில்
பணித்துப்போனது,
நல்லக் குடும்பத்தின் நாட்கள்
காலத்தின் அவ்வப்பொழுதைய அழகையும்
அழுகையின் ஈரத்தையும்
சிரிப்பின் சப்தத்தையும்
மனிதர்களின் மொத்த நினைவையும்
மௌனத்தின் கனத்தையும்
சேர்த்தெடுத்துக் கொண்டே நகர்கிறது..
———————————————————————-
வித்யாசாகர்
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னாள் புத்தனுக்கு ஏற்பட்டத் தெளிவு எல்லா மனிதர்களுக்கும் எதோ ஒரு நேரத்தில் எதோ ஒரு வயதில் வந்துவிடுகிறது..! சிலருக்கு வராமலும் போகலாம்! போதி மரம் என்பது அனுபவமே…!
LikeLike
மிக நன்றாக இருக்கிறது உங்கள் கவிதைகள்!! உங்கள் கவிதைகள் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் , அற்புதமாக இருக்கிறது! Hats off to u sir 🙂
LikeLike