இடம் : சந்தவசந்தம் இணைய அரங்கம்
கவிதையின் கதைக் கரு : ஐயா தமிழ்த் திரு. இலந்தை சு. ராமசாமி
புவியாளும் கவிராஜன் தாய்போல
உலக நிலமெங்கும் வடிக்கின்ற பாட்டுக்கு
தனதன்பாலே இடம்வார்த்து வளம்சேர்க்கும்
இணைவேண்டா இனிதான அரங்கிற்கு ‘
மனதாலும் இடந் தந்த ஐயா இலந்தைக்கும்
ஏனையப் பெரியோர்க்குமென் பணிவான வணக்கம்!
தலைப்பு : குருவே குருவே சரணம்…
வெண்பனிச் சாரல்வந்து இமை மூடமூட
ஈரமதும் இனிக்கும் மாதம்,
சந்தனவாசமும் செந்நிற ஆடையும்சேர்ந்து
செய்த தவறுகளைக் களையும் நாட்கள்;
மனச்சலவைசெய்ய மணிமாலையணிந்து
அய்யன் மலையேறயிருக்கும் காலை,
அவன்நாம மலர் தூவி பாதக்கமலம் பணிந்து
உள்ளம் பக்தியில் திளைத்த வேளை;
விரதநாட்கள் கழிந்து குருவின் பாதம் வணங்கி
இருமுடியேற்க யிருந்தோம்; குருவோ
பொறுவென்றுரைத்து ஏனோ பனியில் தலைநனைய
விருட்டென்று எழுந்துப் புறத்தே நடந்தார்
அகத்தே அவன் நாமம் சொல்லி
வெளிக்கண் திறந்திருந்த நாங்கள் பயத்தில் பதைக்க
அவள் வந்தாள்,
ஒரு மின்னல் வெட்டும்போல் வெட்டி
வீடுபுகுந்து உள்ளே மலரெனமாறி வீழ்வதுபோல்
ஒரு பெண் வீழ்ந்தாள்;
மூர்ச்சையோ முடமோ
பார்க்கையில் நெஞ்சம் தவிக்குமழகு
யார்பொருட்டிங்கு வந்தாளோ
ஏனோ வீழ்ந்தாள் நங்கை (?)
நாங்கள் உற்ற விரதம் கெடுமோ
இல்லையவள்
உயிர்விட்டால் அறம் விழுமோ
என் செய்வேன் இறைவா என்று நான் தவிக்க;
மூத்த சாமிகள் முகம் திருப்பிக்கொண்டு –
‘ஐயோ யிவன் பாவம்
அவள்தடம் கண்ணில் பட்டதே தீட்டு,
யாரும் முகங்கூட காணாதீர் சாமி,
அவள் போனால்போகட்டுமது விதி; நமக்கேன் சபரிசாபம்
விட்டு விலகிப்போவோம் வாரீர்’ரென
மொத்த சாமிகளும் கூச்சலிட
நானோ –
தொட்டதும் ஒட்டுமோ தீட்டு; எனில்
தொடாது மிருகமாய் நீவிர் வாழும்,
உயிர் –
மலரெனக் காயும் முன்னே
மனிதம் ஒரு சொட்டு நீராகவேனும் ஆதல் தர்மம்;
எங்கே-
பாலோ தயிரோ உண்டா கொடுப்பீர், பாவமிவள்
உயிர் காப்பீர்’ ரென்று இங்குமங்குமாய் ஏதேனும் தேட;
அசுரன் இவனே –
பூஜையை அழிக்கும் மகனே
நீ ஒரு கல் நகர்ந்தாலும் குற்றம் –
அவளை ஒருதரம் தொட்டாலும் பற்றும்
இருகரம் தூக்கி யாம் சபிப்போம்
நீ செய்த அபத்தத்தைச் சொல்லிப் பழிப்போம்
குருவின் கடைக்கண் கூட எரிக்கும்
இருமுடி சுமக்கஉனை மறுக்கும்
உனக்கு மலையுமில்லை
ஐயப்பன் அருளுமில்லை; போ’வென்று சபிக்க;
நான் –
அவளை பெண்ணென மறந்தேன்
ஒரு உயிரென மட்டும் மதித்தேன்
விருட்டென்று எழுந்தேன்’
பால் –
அபிஷேகக் குடம் தூக்கிநடந்தேன்;
அபத்தம் அபத்தமென்றெல்லோரும் சலிக்க
அவளை மடிமேல் தூக்கிநான் சரிக்க
அய்யன் மலைபோல் முன்வந்து நிற்க
ஐயா அருளுமென்றெண்ணி –
குடம்பாலை யவள்மீது நான் தெளிக்க
அவள் மின்மினுக்கும்
இரு கண்கள் திறந்து
எனை கண்கண்ட கடவுளென்று வணங்க
தாயம்மா நீயென்றுத் துதித்து
மீதப் பாலள்ளி அவளருந்தக் கொடுத்தேன்
அவள் மெய்சிலிர்க்க எழுந்து நின்றாள்
சுற்றும் முற்றுமென
இதழ் படபடக்க எமைக் கண்டாள்
காணும் விழியில் கோபம் ததும்ப
எல்லோருக்கும் கைதூக்கி வணக்கம் என்றாள்
எல்லாம்
இவளா பெண்
இல்லை
இவளே அவள் அசுரி
எரிக்கும் இருவிழி பாரீர்
தீட்டு ஒட்டும்முன் ஒதுங்கிப் போவீர்;
என்று சொல்லி யொதுங்க –
அவள் கர்ஜித்தாள்
கொண்டையை அவிழ்த்துவிட்டாள்
முடிபறக்க –
மூன்று நான்கென நாலாப்புறமும்
பயமெடுக்க ஆடினாள்
ம்ம்ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்.. ம்.. மென உறுமி
உறுமி
உறுமல் அடங்க அடங்க அடங்கி
தலைநிமிர்த்திக்கொண்டு
கூந்தலை வாரி கட்டிக்கொண்டு
எல்லோரையும் பார்த்து வணங்கினாள்;
கதிகலங்கிப் போனோரை பயம் நீங்க
வணங்கி –
பெரியோரே வணக்கம்
வதையில் மயங்கி விழுந்தேன்
பொறுப்பீர் பரமே காக்க
தொட்டால் ஓட்டுமோ தீட்டு
பெண்ணாய்ப் பிறந்ததே பாவ(ம்) மிழுக்கோ
உந்தன் தாயவள் தீட்டென்று ஒதுங்கி
வெறும் ஞானப்பால் குடித்தா நீ வளர்ந்தாய் ?
நரம்பென்றும் உடல்முகமென்றும் மூழ்கி
உள்ளே –
அந்தத் தீட்டிற்குள் தானே மாதம் பத்து கிடந்தாய் ?
இருந்தும் தாய்போல நீ என்னைத் தாங்கி
இம்மாந்தர்தம் தீண்டாமையைத் தகர்த்தாய்
நீயே தெய்வம் சாமி
நீயே தெய்வம் வாழி’ என்று எனைமட்டும் வாழ்த்தி யவள்
வெளியிலேற –
மணக்கும் சந்தனம் புகும்பின்னே
வெளிர்த்த முகத்தோடு குரு சாமி வந்தார்
சுருக்கும் பார்வைக்குள் கேள்வி கோர்த்து
சொடுக்கும் நேரத்துள் சொல்லுங்கள்
யாரவள் இங்கேப் பெண்ணென்று பாய –
எல்லோரும் –
இளசாமி இவனென்றுக் காட்டி
பழி சாட்டி பலபேச்சு பேசி
பூமி பொறுக்கா பொய்க்கதை நூறு பூட்டி
தொட்டான் பெண்ணை என்றார்
மடியில் சாய்த்த கதையெல்லாம் சொன்னார்
நெஞ்சமிவர் பேச்சுக்குக் கூச
நடுவீட்டின் கலசமது நடுங்க
பொருக்கார் குருசாமி அந்தோ
இனி –
என்னாகுமோ என்றெல்லோரும் நிற்க
நெடுஞ்சாண்கிடையாய் வீழ்ந்து
ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சாமி சரணம்
நாற்பது நாள் வணங்கி மலையேறி யென்ன
மகரஜோதி கண்டு மெய்யுருகி புண்ணியமென்ன
எங்கோ அவனென்று தேடி
நாளும் –
அலைந்திங்கே ஆவதென்ன,
உள்ளே அவனென்று நம்பி நீயும்
அவளைக் காத்ததேப் பெருந்தர்மமாகும்
பெருந் தர்மமாகும்
அதற்கே நின் பாதம் பணிந்தேன்; இது
அவனையும் அறிந்தநற் பாதமன்றோ’ என்று
பெருஞ்சாமி
குருசாமி
நெடுஞ்சான் கிடையாய்
விழுந்துவணங்க –
அய்யன் திருவருளைக் கண்டேன்
மீண்டும் உடம்பாடி நின்றேன்
கண்ணிரண்டில் அவன் காட்சிப் பொங்க
கையெடுத்து வணங்கிச் சொன்னேன் –
ஐயா..
குருவே குருவே சரணம்
ஐயப்பன் அருளே அருளே கரணம்
தெய்வம் தேடி அலைந்தேன் – இங்கே
அஃதும் யாதென்று அறிந்தேன்; நீயே நீயே ஐயா
அய்யன் முன்னான முதல் தெய்வமையா
நின் பாதம் தொட்டே நின்றேன்;
ஆங்கே அவன் கீர்த்தி சேர்த்தே கண்டேன். குருவே குருவே சரணம்…
குருவே குருவே சரணம்…
————————————————————————————
வித்யாசாகர்