உறவுகளுக்கு வணக்கம்,
மீண்டுமொரு பாடலோடு உங்களை இணையம் வழி அணுகுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கேட்டு ரசிப்பீர்கள் எனில் எங்களின் நேரமும் உழைப்பும் மகத்துவம் பெரும்.
பல்லவி
வலிக்க வலிக்க உடையுது வாழ்க்கை
வாழ வாழ கரையுது மனசு..
மண்ணுக்குள்ள போகுறப் பயணம்
முடியும்போதும் தொடர்வதைத் தேடும்
மூச்சுமுட்டி அணையுற விளக்கு
ஆகாசத்தை நெஞ்சில சுமக்கும்..
சரணம் – 1
கண்ணுக்குள்ள கனவுகளுண்டு
மரணம் மறந்த ஆசைகளுண்டு
மார்புக்கூட்டில் உலகம் சுருங்கி மனசு விரியக் கனக்கிறதே;
மலையும் கடலும் நொறுங்கும் சப்தம்
நெருப்புநினைவில் அணையா வெப்பம்
நெருங்க நெருங்க முடியாக் கடலாய்; தீரா வாழ்க்கை வலிக்கிறதே;
தீண்டும் வலியில் தொலையும் மனசு
தேடிக் கிடைத்த தொலைவின் சிறகு
காதல் படிக்கும் காட்டுமரத்தில் ஒடியும் கிளையாய் விழுகிறதே..
(வலிக்க வலிக்க …)
சரணம் – 2
ஜென்மம் சுட்டு மிளிரும் தருணம் –
வெட்டியெடுத்தால் கிடைக்காதா? மண்போல் மூடும்
ஆசைத்திரையை அறுக்க மனமே தெரியாதா?
பெண்ணும் பொன்னும் மூடும் கண்ணை
தியானப் பார்வை திறக்காதா?
மூளும் நெருப்பில் வீழக் கருகி
மனசு மனசு வலிக்கிறதே
வாழும் கதையின் வாசல் தேடி
ஒளிரும் விளக்கும் அணைகிறதே
விட்டால்நிற்கும் மூச்சுபிடித்து –
வானப் பலகை படிக்கிறதே!!
நன்றிகளுடன்..
வித்யாசாகர்
அற்புதமான வரிகளுடன் இதமான இசை. மிக அருமை!!
LikeLike