தெருவில் கிடக்கும் வார்த்தைகள்..

1
ருட்டில்
அடித்துக்கொண்டிருக்கும் அலாரத்தில்
தான் எழுந்திருக்காவிட்டாலும்
தனக்கு அருகே இருப்பவர்களெல்லாம்
எழுந்துகொள்கிறார்களென்றுத் தெரியாமலே நாம் தூங்கிக்கொண்டிருக்கிறோம்..

அலாரம் காற்றில் தனது கூச்சலை
இரைத்தபடியே
யாரினுடிய தூக்கத்தையேனும்
கெடுத்துக்கொண்டே இருக்கிறது..
———————————————–

2
ழஞ்சோற்றில் கைவைக்கும்போது
சில்லென்று குளிர் விரலுள் நுழைகையிலும்,
சுடச்சுட உண்கையில்
நாக்கு சுட்டுவிடுகையிலும் –
எத்தனைப் பேர்
பசியிலெரியும் பல
ஏழ்மை வயிறுகளைப் பற்றி எண்ணுகிறீர்கள்?

எண்ணத் துவங்குங்கள்
பழஞ்சோறோ சுடுசோறோ
எங்கேனும் யார் பசிநெருப்பையேனும் அணைக்க அதை
எண்ணியாவது வைப்போம்..
———————————————–

3
ழையப் புத்தகங்களையும்
புதியப் புத்தகங்களையும்
வாரியணைத்துக் கொள்ளும்
சிறுபிள்ளைகளுக்குத் தெரியாது
அந்தப் பழையப் புத்தகங்களில் ஏதோ சில
ஏழை மாணவர்களின் படிப்பிருக்கிறது என்று;

பெரியோர்கள் பெற்றுக்கொடுங்களேன்; ஒரு
புத்தகம் கிழிகையில்
ஒருவரின் வாழ்க்கையையேனும் அது
தைத்ததாக இருக்கட்டும்..
———————————————–

4
வீ
டு கட்டும்போது
நிறைய பார்த்துப் பார்த்து கட்டுகிறோம், சரி
நிறைய ஆடம்பரப் பொருட்களை வாங்கி
அடுக்குகிறோம், சரி
தேவையற்றதையெல்லாம்
மனதிற்குப் பிடித்தும் பிடிக்காமலும்
என்றோ உதவுமென்றெண்ணி
வாங்கி வாங்கி வீட்டிற்குள் சேர்க்கிறோம்;

சில வீடுகளில்
பணக்கட்டுகள் ஆபரணங்கள் கூட
இடத்தை அடைத்துக்கொள்வதை வீடு எப்போதும்
வெளியில் சொல்வதில்லை,

ஆனால் மனசாட்சி உள்ளவர்கள்
கொஞ்ச இடைத்தை வெற்றிடமாக்கி
வையுங்கள் மனதுள்;

அது –
பிறரைப் பற்றியும் சிந்திக்கத் தேவைப்படும்..
———————————————–

5
ரண்டோ நான்கோ மிளகாய்
சமைக்காமலே வதங்கியும்,
நான்கோ எட்டோ கருவேப்பிலை
மற்றும் காய்கறிகள் காய்ந்தும்
தரையில் விழுந்தும்,
பத்தோ இருபதோ அரிசிகள்
எடுக்கும்போதும் அரிக்கும்போதும்
சிந்தியும் சிதறியும்,
ஒரு கைப்பிடியோ அல்லது
ஒரு தட்டுச் சோறோ அவ்வப்பொழுது மீந்து
அதைக் கொட்டியும்விடும் பொழுதுகளில் –

நமக்குத் தெரிவதில்லை
நாம் ஒரு தேசத்தின் வறுமைக்கு
பலரின் பட்டினிக்கு
காரணமாகிவிடுகிறோமென்று..
———————————————–

6
கு
ழந்தை –
ஒரு சாக்கலேட்டினை எடுத்து
நமக்குத் தெரியாமல் தின்றுவிட்டாலோ,
பருப்பு டப்பாய்க்கருகில் இருக்கும்
பிஸ்கட் பொட்டலம் திறந்து அதுவாகவே
இரண்டு பிஸ்கட்டை எடுத்துக்கொண்டாலோ,

அல்லது யாருமில்லா நேரம்பார்த்து
ஒரு கைப்பிடிச் சர்க்கரையை வாரி
வாயில் கொட்டிக்கொண்டாலோ
பிடித்து அடிக்கிறோம்;

கேட்டால் திருட்டைக் கற்றுக்கொள்ளும்
என்று பயம்;

அதே குழந்தைக்கு முன்
நாம் என்னென்னவோ பேசுகிறோம்
ஏதேதோ செய்கிறோம்;
குழந்தைகள் அங்கிருந்தும்
நடத்தையில் தவறுவதை நாம்
நிறையவே அறியவேண்டியுள்ளது..
———————————————–

7
தொ
லைகாட்சியை
சத்தம் கூட்டி வைக்காதே,

சோப்பினை அளவிற்கு மீறி
கரைக்காதே,

எரியும் விளக்கின் மின்சாரமோ
மின்விசிறியின் காற்றோ
ஒரு சொட்டுத் தண்ணீரோ வீணாக வேண்டாம்,

சோறாயினும்
அளவோடு உண்,

சட்டைத் துணியைக் கூட
போதுமானதை உடுத்து,

யாரையும் அதட்டியோ
பிறர் அதிரவோ அவசியமின்றிப் பேசாதே,

தெருவில் விழுந்துக்கிடந்தாலும் அது
தனதில்லையெனில் அதைத்
தானெடுக்க விரும்பாதே,

தங்கத் தாலியோ
மஞ்சள் கட்டியக் கயிறோ
இருப்பதில் உடுத்துவதில் உண்பதில் இன்பம் காண்
நல்லவனாய் இரு, வாழ் என்றெல்லாம்

சொல்லிக்கொடுப்பதைக் காட்டிலும்
வாழ்ந்துக் காட்டுங்கள்;
குழந்தைகள் அதைப்பார்த்து
தானே நன்கு வளரும்..
———————————————–

8
பூ
மியின் அடர் இருட்டில்
பேயிருக்கிறதென்று பயந்தோம்,
வானத்தின் வெளிச்சத்தில்
சாமியுண்டென்று நம்பினோம்,
காற்றின் வேகத்தில்
குளத்தின் ஆழத்தில்
எரியும் நெருப்பிலெல்லாம் மனிதர்களைத்
தொலைத்தோம்,
மனிதர்களை இப்படிப் பெறுவதும்
தொலைப்பதுவுமாய்
சாமியை நம்புவதும் பேயிடம்
பயம் கொள்வதுமாய் மாறி மாறி
மாறி எங்கோ வந்துநிற்கிறது வாழ்க்கை;

வெறும் தன்னை
யாரென்று அறியவோ
நிருபிக்கவோ திராணியில்லாமை நமது
படிப்படியான கண்மூடித் தனத்தையும்
அதன் மீதான அசட்டு வெற்றியையுமே காட்டுகிறது;

இருந்தும் எப்படியோ நாம் மரிக்கையில்
நமதுக் கல்லறையின்மீது மட்டும்
நம்மை யாரோ என்று
தெரிந்தாற்போல் எழுதிக் கொள்கிறது உலகம்,

உண்மையில் நாம் யார்? ஏன் பிறந்தோம்
எங்கிருந்துத் துவங்கினோம்?
யார் வழிகாட்டி?

கேள்விகள் போதும்
கேள்விகளுள் சாவதைக் காட்டிலும்
தனது பிறப்பை அறிய
தானே யெண்ணியப் படி வாழ்வோம்; எங்கோ

நமது எண்ணங்களின் ஓரிடத்தில்
நாம் பிறந்ததன் காரணம்
நாம் வாழவேண்டியதன் அவசியத்தைச் சொல்லித்தரும்;

சொன்ன இடத்தில நிற்பதற்காக நாம்
பிறப்பைத் தீர்க்கலாம்
மீண்டும் பிறக்கலாம்
பிறப்பை யொழிக்கலாம்..

சூழ்ச்சுமம் உடைய உடைய
கற்றல் பெருகப் பெருக – நீளும் காலம்
நமைப் பற்றி அறிய நமக்கு உதவலாம்;

வார்த்தைகள் புரியப் புரிய உள்ளூறும்
சொற்களின் உச்சத்தைப் போல
வாழ்க்கை எதுவென்று அறிய அறிய – அந்த
இடத்தின் நிர்வாண நிமிடமோ வருடமோ
எல்லையற்று விரியலாம்;
நாம் ஓரிடத்திலில்லாததையும் உணர்த்தலாம்,

எதுவாயினும் –
ஞானமென்பது அறிதல் மட்டுமே,
அறிய முற்படுவோம்..
———————————————–

9
வி
டிகாலைப் பனிதுளியைப் போல்
அதில் பட்டுத் தெறிக்கும்
வெய்யிற் கதிர்களைப் போல்
வெப்பத்தைக் குடிக்கும் வெள்ளிநிலாப் போல்
நிலவை விழுங்கிய இருட்டைப் போல்
இருட்டிலிருந்து உதிக்கும் –
சூரியனைப் போல் பனிச் சாரல்களைப் போல்,

பிறக்கும் மனிதனுக்கும்
இறக்கும் மனிதனுக்குமிடையே
வாழவதற்கென எல்லாம் கொடுத்துவைக்கவேப்
பட்டிருக்கும்;

எடுத்துக் கொண்டோமா ? இல்லையா
என்பதை யறியவே –
மரணம் தேவைப்படுகிறது;

மரணம் பேசுகிறது
ஒவ்வொருவரின் மரணமும்
பேசுகிறது,
அவருக்குப் பின் அவர் வாழ்ந்ததைப் பேசுகிறது,
வாழ்ந்தவரின் மகத்துவத்தைப் பேசும்
மரணத்தின் புள்ளிக்கு முன் – ஒரு
பெரியக் கதையிருக்கும்;

அந்தப் பெரியக் கதையில்
நன்மைகள் நிறைந்திருக்க
அரியதைப் பற்றிச் சிந்தியுங்கள்..

சிந்தனையின் ஆழத்தில்தான் நம் வாழ்வின்
ரகசியங்கள் உடைகிறது,
மரணம் கூட
ஒரு நிகழ்வாகவே அங்கு நிகழ்கிறது..
———————————————–

10
ர்போர்ட்
புதிதாகக் கட்டிவிட்டோம்
நட்சத்திர ஓட்டல்கள்
நிறைய வந்துவிட்டன
கிளப்கள் பெருகும் அளவிற்கு
நாகரிகம் வளர்ந்துவருகிறது
பீரும் பிராந்தியும்
கண்ணீருடனும் சிரிப்புடனும் சேர்ந்தே
பாட்டில்களில் அடைக்கப்படுகிறது
முழுச் சட்டை புல் ஹேன்ட் சர்ட்டாகவும்
கால்சட்டை பேண்டாகவும்
கொட்டாங்குச்சித் தண்ணீர் வாட்டர் பாட்டிலாகவும்
மாறிவிட்டது,

எப்படியோ – நம்
ஆசைகளை கூரைவீட்டிலிருந்து இடித்து
மாடிவீடுகளுக்கு மாற்றிக்கொண்டோம்
சுவற்றில் அடிக்கும் வெள்ளையைக் கூட
பல்லிளிக்கும் இளஞ்சிவப்பாகவோ
பச்சையாகவோ
மஞ்சளாகவோ பூசிக்கொள்கிறோம்,

மாறியதன் முழுமை புரிவதற்குள்
மாற்றமில்லையேல் வாழ்க்கையில்லை என்று
வசனம் வேறு..,

எல்லாம் சரி –
மனிதராய்
நாமின்று எங்கு நிற்கிறோம்?

நாம் யார்?

நாம் பிறந்ததன்
அர்த்தம் தானென்ன?

நம்மைப் போல் நாம்
எத்தனைப் பேரை நன்றாக
வாழவைத்திருக்கிறோம்?

ப்ச்…
அது கெடக்கு விடுங்க
என்னப் பெரிய்ய்ய்ய்ய வாழ்க்கை (?)!!!

நான் கவிதையை முடிச்சிட்டு
இங்குட்டுப் போறேன், நீங்க படிச்சிட்டு
அங்குட்டுப் போங்க..
நாம போன தெருவிற்குப் பெயர்
நாசமாப் போன தெருவாக யிருக்கட்டும்…’

என்று
விட்டுவிடலாமா?

இல்லை
விடக்கூடாது
வாழ்வது ரசமானது,
வாழ்க்கையை ரசமாக அமைத்துக்கொள்ளமுடியும்
பிறருக்காக வாழும் வாழ்க்கை
இனிமையானது,
அதை செதுக்கும் உளி
நம்மிடமே இருக்கிறது; செதுக்கிக் கொள்ளுங்கள்..
———————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காற்றாடி விட்ட காலம்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to தெருவில் கிடக்கும் வார்த்தைகள்..

  1. மணிகண்டன் துரை சொல்கிறார்:

    கவி அருமை sir…..

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s