எல்லோரும் தற்கொலை செய்துகொள்ளுங்கள்..

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்)
—————————————————————————————

(1)
தற்கொலை செய்துகொள்ளுங்கள். கொலை என்பது கொல்வது எனில், சாக நினைக்கும் அத்தனைப் பேரும் முதலில் தன்னைத் தானே கொன்றுகொள்ளுங்கள். தானெனும் செருக்கு, தனது எனும் ஆசை, தன்னாலெனும் வருத்தம், தனக்கென்னும் சுயநலம், தனக்கான ஏக்கம் தனக்கான வலி, தன்னாலான தோல்வியெ என்று நினைப்பதன் பாரம் என அந்த தனது எனும் இடத்திலுள்ள அத்தனையயும் கொன்றுவிடுங்கள்; எஞ்சிய உடல்கட்டை மிஞ்சட்டும், அதுபோன்ற உடல் கட்டை நாளை பிறருக்கென வாழ்ந்த தெரசாவாகவோ, அல்லது விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோரை மீட்டு நல்வாழ்வு அளிக்கும் அனுராதா கொய்ராலா அம்மையாராகவோ, அல்லது எல்லாவற்றையும் வெறுத்துவிட்டு பிறர் நோய்கண்டு ஒதுங்கி ஞானத்தை அடைந்த புத்தராகவோ உங்களை மாற்ற வாய்ப்பிருக்கிறது.
—————————————————————————————

(2)
பயம் உள்ளவரால் சாகமுடிவதில்லை, சாகுமளவு தைரியம் கொண்டோர் நாளைய எதையும் சாதிக்கத்தக்க தீரத்தையும் கொண்டவர் என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள். புரிதல் என்னிலையையும் மாற்றிவிடும், புரிய அவகாசம் கொடுக்காத இடத்தில் தான் விரக்தி ஏற்படுகிறது. விரக்தி தான் மேலும் சிந்திக்க விடாது மரணப் பள்ளத்துள் நமை தள்ளுகிறது.

சாவதெனில் என்ன அதனால் உடனே அந்தப் பிரச்சனையிலிருந்து அகன்று விடுகிறோமா? இல்லையே, அதனால் மேலும் பலப் பிரச்சனைக்குக் காரணமாகத் தானே ஆகிறோம். பிணம்வீழ்ந்த வீடு நினைவிலிருக்கா? ஒரு மரணம் எத்தனைக் கொடிது தெரியுமா? ஒரு கொலை ஒரு வீட்டை அழிக்கிறது. பத்து கொலை ஒரு ஊரையே அழிக்கும். நூறு கொலை விழும் நாட்டின் நிலையென்ன யோசித்துப் பாருங்கள் தோழர்களே.
—————————————————————————————

(3)
தற்காலிக தகவல் ஒன்றைப் படித்தேன். சென்ற ஆண்டின் புள்ளிவிவரக் கணக்குப்படி இந்தியாவிலேயே அதிக தற்கொலை நடந்த இடம் தமிழகமாம். பதினாறாயிரம் பேர் ஒரு வருடத்திற்கு தற்கொலை செய்துகொள்கிறார்களாம். கேட்க கேட்க வலிக்கிறது. யார் மாள்வது, உலகத்திற்கு வாழப் போதித்த ஆதி இனம் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வது என்பது எப்பேற்பட்ட அவலம்?

அது போகட்டும், பொது கணக்கு வேண்டாம், ஒரு சுய கணக்கில் பேசுவோம், அம்மாவைப் பிரிவது எத்தனைப் பெரிய கனம் ? அப்பா இல்லாதிருப்பது எப்படிப் பட்ட வலி? அண்ணனோ தம்பியோ இறப்பது எப்பேற்பட்ட துயரம்? அக்காளோ தங்கையோ இறப்பது எதற்கீடான சுமை? அன்பு மனைவியோ’ கணவனோ’ குழந்தையோ’ காதலியோ’ நண்பனோ’ பகைவனோ யாராயினும் இருக்கட்டும், யாரை இழந்தாலும் இழப்பு இழப்பு தானே? வலி வலிதானே? மரணமென்பது மீண்டும் மாற்ற இயலா தண்டனை தானே என்பதைப் பற்றி யோசியுங்கள். மரணம் என்பது சாவது மட்டுமல்ல; பிறரைச் சாகடிப்பதும் என்று புரியுங்கள்.
—————————————————————————————

(4)
ஒரு மகள் தற்கொலை செய்துகொண்ட வீட்டின் இருண்ட நிலை என்பது ‘பிறக்கும் முன் சுமந்த கருவறை பிரிவுத் தீயில் கருகுவதற்குச் சமமில்லையா? கொலை ஒரு மூர்க்கத்தனம் எனில், தற்கொலை அதனிலும் மூர்க்கம். சுயநலத்தின் உச்சம். அப்படி தன்னை மட்டும் ஒருவர் வாழ்விலிருந்து விடுவித்துக்கொள்வதற்கா பத்து மாதம் வயிற்றில் கிடந்தோம்? யாரோ பார்த்து பிணம் என்று சொல்வதற்கா பெற்றோர் அத்தனைச் சிரமம் தாங்கி வளர்த்தார் நம்மை?

ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து, பெற்றெடுத்து, வாயடக்கி வயிறு பொத்தி, ரத்தம் வார்த்து, சோர்வு தாங்கி, உறக்கமில்லா கண்களில் வைத்துக் காத்து, நெஞ்சிலும் நினைவிலும் எதிர்காலம் வரைக்குமான கனவுகளைச் சுமந்து வளர்த்து ஒரு ஆளாக ஆக்குவது எத்தனைப் பெரிய தவம்?
—————————————————————————————

(5)
ஒரு பிள்ளையை வளர்ப்பது என்பது தனது வாழ்வைத் தொலைப்பதற்கும் சமமென்று எண்ணிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பெற்றோரும் தனது ஆசைகளை கனவுகளை வெற்றிகளை இழந்துதான் தனதுப் பிள்ளைகளின் ஆசைகளைச் சுமக்கின்றனர். ஒரு காதலி காதலனைப் பிரியும் வலி, ஒரு அண்ணன் தம்பி அக்காத் தங்கை நண்பனைப் பிரியும் வலி, ஏன் அம்மா அப்பாவை விட ஒரு குழந்தயைப் பிரியும் வலியெனில் என்னவென்று தன் பிள்ளைகளைப் பறிகொடுக்கும் ஒவ்வொரு தாயையும் தகப்பனையும் கேட்டால் அது எத்தகையதென்றுச் சொல்வர்.

ஒரு கூலிக்குப் போகும் ஏழையிடம் கேளுங்கள், அல்லது காடுகளை விற்கும் நிலாந்தாரைக் கேளுங்கள்; உங்களுக்கு பணம் பெருசா நிலம் பெருசா பெற்ற குழந்தைப் பெருசா என்று ? நிலத்தையும் உயிரையும் அப்படியே விடுவர்; குழந்தையே உள்ளத்தில் சுமப்பர் பெற்றோர். அப்படிப்பட்ட ஒரு குழந்தையை சாகவிடுவதென்பது எத்தனைக் கொடிது? அதைத் தானாகவே தேடிக்கொள்ளும் தற்கொலை எத்தகையக் குற்றம்(?)!!
—————————————————————————————

(6)
உண்மையைச் சொன்னால் தன்னைத் தானே ஈன்றுக்கொள்ள முடியாத நாம் நம்மை சாகடித்துக்கொள்ளவும் உரிமையற்றவர்கள்தான். உயிர்போகும் கடைசி நொடிவரை வாழ்வதற்கான தகுதி எப்பேற்பட்டோருக்கும் உண்டு. காதலைப் பிரிவதும் காதலைப் பிரிவதும் மட்டுமே வாழ்வின் பெரிய சோகமெனில் நம்மை முதன் முதலில் பெற்ற ஒரு தாயோ தந்தையோ அன்றே தன்னை மாய்த்துக் கொண்டுவிட்டிருக்கலாம்.

ஆனால் வாழ்க்கை வெறும் காதலோடு முடிவதில்லை, பிறப்பென்பது பல புனிதங்களைக் கொண்டது. பிறருக்காக வாழ்வது ஒரு சுகம், தன்னலம் விடுவதே உலகில் இலகுவாகக் கிடைக்கும் பெரிய நிம்மதி. பெற்று அனுபவிக்கத் தான் மனம் வேண்டும், அப்படி விட்டுக்கொடுட்டு ஒதுங்குவதில் இன்பமடையக் கிடைத்த இந்த ஒரு பிறப்பே நமக்கான பெருந்தவமாகும்.

உண்ணும் உணவிலிருந்து கொடுக்கும் பொருள்வரை எல்லாமே கேட்டதும் கொடுக்க வல்லது, நினைத்ததும் பெற முடிந்தது. ஆனால் உயிர் மட்டுமே கொடுக்கவோ பெறவோ இயலாதது உறவுகளே.. உயிர் ஒரு பிச்சை. வாழக் கிடைத்தது ஒரு வாய்ப்பு!
—————————————————————————————

(7)
ஒரு குழந்தைக்கு பிறந்ததும் இதயத்தில் ஓட்டை இருப்பது தெரியவந்து மருத்துவம் பார்ப்பதற்கிடையில் மேலும் பல கோளாறுகள் ஏற்பட்டு குழந்தை நோய்வாய்க்குள்ளாகி சாகக் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. பிறகெப்படியோ படாதப் பாடுபட்டு அந்தக் குழந்தையின் பெற்றோர் அதை காப்பாற்றி விடுகின்றனர். பின்னொரு கட்டத்தில் விளையாடிக் கொண்டே ஓடி ஒரு கிணற்றுக்குள் விழுகிறது அந்தக் குழந்தை. அப்போதும் அதைப் போராடி காத்துவிடுகின்றனர். பின்னொரு நாள் இரண்டுச்சக்கர வாகனம் மோதி தலையில் அடிபட்டுவிடுகிறது. அந்தக் குழந்தை தனது சுயநினைவை இழக்கிறான்.
அப்போதும் போராடி தனது சொத்தையெல்லாம் விற்று அந்தக் குழந்தையைக் காப்பாற்றுகின்றனர் பெற்றோர். பின் வளர்ந்து வருகையில் அம்மா நோய்வாய்ப் பட்டு இறந்துப்போகிறார். பின் அதே கவலையில் அப்பாவும் கொஞ்ச நாளில் இறக்கிறார். அநாதையான அந்தப் பிள்ளைக்கு ஒரு காதலி வருகிறாள், இருவருக்கும் திருமணம் ஆகிறது. பின் அவர்களுக்கு ஒரு குழந்தைப் பிறக்கிறது. குழந்தை இரத்த வாந்தி எடுக்கிறது, மருத்துவமனை தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். அங்கு தான் தெரியவருகிறது; முன்பே தனது மனைவிக்கும் கேன்சர் இருந்திருக்கிறது என்று. ஆறாத வலியில் வீடெல்லாம் ரத்த வாந்தி நிறைய நிறைய இருவரும் இரும்பி இரும்பி சாகிறார்கள். மீண்டும் தனிமரமாய் நிற்கிறான் அந்த இளைஞன்.

வாழ்க்கை வெகுண்டுப் போன ஒரு பிறவி, யாரை நினைத்தழுவான் அவன்? எங்கு திரும்பினாலும் மரணவாசனை, யாரை நேசித்தாலும் பிரிவின் அச்சம். பிறந்ததிலிருந்தே சாகக் கிடந்தவன் இப்போது வாழமுடியாமல் தவிக்கிறான்.
தனிமை கொல்லும் வதையில் சிக்கித் தவிப்பவனுக்கு ஒரேயொரு தெளிவிருந்தது. அதுதான் தான் எப்பொருட்டும் வாழவேண்டுமென்பது. இதலாம்தான் வாழ்க்கை, இதையெல்லாம் நாம் அனுபவித்தே தீரவேண்டும் எனில் தாங்கியும் ஆகவேண்டும், வாழ்வெனில் எல்லாம் நேரும், எல்லாம் கடக்கும், எதுவாயினும் அனுபவம் கொள்ளவேண்டுமென்பதை அவன் அறிந்திருந்தான்.

என் அம்மா சுமந்தாள், என் அப்பா வளர்த்தார், இந்த உயிர் அவர்கள் தந்த பிச்சை. இந்த உயிர் நான் நம்பும் தெய்வங்கள் தந்த வரம். அந்த வரத்தை பிறருக்கும் நான் வரமாகவே தரவேண்டும் என்றுப் போராடினான். உழைத்தான். எல்லோருக்கும் உதவினான். ஒரு சின்ன கடை வைத்தான், கடை பெரிய கடை ஆனது. பெரியக்கடை இரண்டாக மூன்றாகப் பெருகியது. மூன்று முப்பதாக மாறி எங்கும் அவன் பெயர் எல்லாம் அவனது ஆட்சி, யாதும் அவனுக்குச் சொந்தம் என்று ஊரெல்லாம் அவனுடையப் பெயர் பரவிவந்தது.

பின்பொரு மருத்துவமனையைக் கட்டினான். நோய்வாய்ப் பட்டோரையெல்லாம் காப்பாற்றினான். கேன்சர் வந்தால் காப்பற்ற ஆய்வு மையம் அமைத்தான். அவனுடைய அம்மாப்பா இறந்த இடத்தில் நூறு அம்மா அப்பா பிழைத்தார்கள். அவனுடைய மனைவி குழந்தை இறந்த இடத்திலிருந்து ஆயிரம் குழந்தையும் பெண்களும் காப்பாற்றப் பட்டனர். அவனின் ஒரு உயிர் பல உயிரைக் காப்பாற்றியது. அவன் இறக்கையில் எத்தனையோப் பேரை வாழவைத்துச் சென்றான். அவனின் கல்லறையில் தற்கொலை செய்துக் கொள்ளுங்கள் என்று எழுதிவைக்கப்பட்டது!
—————————————————————————————

(8)
ஆம்; தற்கொலை செய்துக் கொள்ளுங்கள். தன்னை தனது ஆசையை, தனது வலியை, தனது கோபத்தை, தனது சுயனலத்தைக் கொன்றுவிடுங்கள். பிறகு மட்டுமே உங்களால் பிறரைப் பற்றி யோசிக்க முடியும். பிறர்நலம் பற்றி சிந்திக்க இயலும். ஒரு தெரசா, ஒரு காந்தி, ஒரு கலாம், ஒரு காமராஜர் இன்னும் ஒரு ஒரு என்று எத்தனை நாளைக்கு அவர்களையே உதாரணமாய் காட்டப் போகிறோம்? நம்மையங்கே உதரணமாக ஆக்குங்கள். ஒரு வைரமுத்து போதாது, ஒரு பாலகுமாரன் சுஜாதா போதாது எல்லோரும் எழுதுங்கள். ஒலிவியாக்கள், கல்பனாசாவ்லாக்கள், பிரேமாக்கள், கிரண்பேடிகள் இன்னும் நிறைய தேவை நமக்கு. அவர்களை எல்லாம் எங்கிருந்து எடுக்கப் போகிறோம்? தனக்குள் தேடுங்கள். ஒரு சூப்பர்ஸ்டார் போனால் அடுத்த சூப்பர்ஸ்டாரை உருவாக்கிக் கொள்கிறோம், ஒரு காமராஜர் போனார் அடுத்த காமராஜர் ஏன் வரவில்லை ?
—————————————————————————————

(9)
அசிங்கமில்லை, சினிமா அசிங்கமில்லை, சினிமா நல்லதையும் சொல்லித் தருகிறது, கதைகள் நமக்குள் உதாரணப் புருஷர்களை வளர்கிறது. வரலாறு ஒரு கதையாகையில் முன்னோடிகள் நமக்கு மறைமுகமாய் வாழக் கற்றுத் தருகிறார்கள். ஆனால் எங்கே வாழ்கிறோம் நாம்? எங்கே முன்னேற்றம் கண்டோம் நாம்? அரசியல் மாறவேண்டும், இலக்கியம் மீள வேண்டும், சமுதாயம் திருந்தவேண்டும், சங்கெங்கும் முழங்க ஒவ்வொரு இளைஞனும் சாதிக்கவேண்டும்? சாதித்தோமா ???
ஒரு சூர்யாவால் முடிகிறது, அறுநூறு ஏழை மாணவர்களை தேடி எடுத்து அற்புத சாதனையாளர்களாக்க முடிகிறது. ஒரு நாளேடு விற்ற மாணவனால் தன்னை ஒரு நாட்டிற்கே விஞ்ஞானியாக ஆக்கிக்கொள்ள முடிகிறது. ஏன் ஒரு தேசத்திற்கே தன்னை ஜனதிபதியாக்கிக் கொள்ளமுடிகிறது. தன்னை கதற கதற கற்பழித்த அதே மண்ணில் தன்னை அந்த மண்ணிற்கே முதல்வராக ஆக்கிக் கொண்டாரே மாயாவதி, அவர்களை எல்லாம் நாம் ஏன் உற்றுப் பார்ப்பதில்லை?
—————————————————————————————

(10)
ஒரு மரணம் தன்னை கொல்லும்; தன்னோடுள்ளவரை நினைவிலேயே கொல்லும். ஆனால் ஒரு உயிர் நினைத்தால் கோடி பேரை வாழவைக்கும். செருப்பு தைத்த ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாகும் போது, இந்தியாவில் பிறந்த ரத்தன் டாட்டா ரேஞ் ரோவர் கம்பெனியை இங்கிலாந்து சென்று வாங்க இயலும்போது, ஒரு பில்கேட்சால் உலக பணக்கார வரிசையில் முதலிடத்தைப் பிடிக்க இயலும்போது, நம்மூர் ஸ்ரீதர் சென்று அமெரிக்காவில் ப்ளூம்பாக்ஸ் காட்டி எல்லோரையும் தனக்குப் பின்னால் வரவைக்கும் போது; நம்மையெல்லாம் படிக்கவைத்து பட்டதாரியாக்கி நல்ல பேரெடுத்து பெரிய ஆளாகப் பார்க்க வளர்த்த நம் தாய் தந்தைக்கு நாமொரு தற்கொலையை ஏற்றிடாத வீரனாகவேனும் வாழ்ந்துக் காட்டவேண்டாமா?
வாழும் காலந்தோறும் மனதைக் கோவிலாக்கி அதில் அவர்களை தெய்வமாக வைத்து பூஜித்திடல் வேண்டாமா?
—————————————————————————————

(11)
உண்மையில் பெற்றோரைக் காட்டிலும் பெரிய தெய்வமில்லை. அவர்களுக்கான கோவிலையுள்ளே கட்டவேனும் தற்கொலையை நிராகரிப்போம். அங்ஙனம் பெற்றோரை மதிக்கும் ஒவ்வொருவரும் மனதுள் அவர்கள் ஈன்று கொடுத்த தன்னையும் மதித்தல் வேண்டும். காரணம், உயிர் பெரிது. வாழ்வது சுகம். வளர்ந்து வாழ்ந்துகாட்டுவது பெருமை. பெருமையோடு வாழ்வது என்பது பிறப்பை வெல்வதற்குச் சமம். வெல்வது என்பது நிலைப்பதும் ஆகும். நிலைப்பதென்பது மனிதற்கே வாய்க்கத் தக்கது. எனவே மனிதராய்ப் பிறந்த ஒவ்வொரும் நிலைக்க முயற்சி செய்யுங்கள். நிலைத்துக் காட்டுங்கள்.
—————————————————————————————

(12)
நம் கண்ணெதிரே அமிலம் ஊற்றப்பட்டு, மாதக் கணக்கில் சிதைந்த உடலாக வலியெல்லாம் தாங்கி, முகம் போனால் பரவாயில்லை, தான் அழகில்லை என்றாலும் பரவாயில்லை, நடக்கவோ பார்க்கவோ இயலாவிட்டாலும் கூடப் பரவாயில்லை, என்னை ஒரு பிண்டமாக வைத்திருந்தாலும் சரி’ உயிரோடு மட்டும் வைத்திருங்கள் போதும் என்று கேட்டாளே வினோதினி நினைவிலிருக்கா?

எப்படியேனும் என்னைக் காப்பாற்றி விடுங்கள், நான் எனது அப்பாவைக் காப்பற்றவேண்டும் என்று வலிக்க வலிக்க கெஞ்சினாளே அந்த அப்பாவிப் பெண் வினோதினி, ஆனால் கிடைக்கவில்லையே அவள், விட்டுவிட்டோமே நாம் துடிக்கத் துடிக்க அவளை.
அந்த ஒரு உயிரை நம்மால் நிறுத்த முடியவில்லையே. ஆனால் அதுபோல், விலைமதிக்க முடியாததொரு உயிரைத் தானே நாமெல்லோரும் நமக்குள் வைத்திருக்கிறோம்? அவளுக்கு கிடைத்திடாதந்த உயிர்தானே நம்மிடம் இருக்கிறது. அப்படிப்பட்ட உயிரை ஒரு நொடியில் விடுவதைக் காட்டிலும் ஒருத்தருக்காகவாவது வாழ்வது உத்தமம் இல்லையா?
—————————————————————————————

(13)
சாவென்பது பெரிய வேலையில்லை, சற்று மூச்சு பிடித்தால் ஜீவன் போகும். அதே மூச்சை உள்ளே பிடித்துக்கொள்ளுங்கள். வலியை பொறுத்துகொள்ளுங்கள். சாக நினைக்கும் கனத்தை விட்டொதுக்குங்கள். சாக மாட்டேன், சாக மாட்டேன், சாக மட்டும் கூடாது, வாழனும், வாழனும், வாழ்வதற்கென்ன வழி என்று யோசியுங்கள்.

அப்படி வாழவே முடியாத நிலை ஒன்று வருமெனில்; சாகவே துணிந்தப் பிறகு, வாழ்க்கையை வெல்வதற்கு ஏன் துணியக்கூடாது?

மனசு ஒரு கழுதை மாதிரி. பசியெடுத்தால் கத்துவதைப் போல் வலியெடுத்தால் அழும் அவ்வளவுதான். அதற்குக் கொஞ்சம் தீனி போட்டு சுமக்கச் சொல்லுங்கள்; இந்த உலகத்திற்கான அத்தனைச் சுமையையும் ஒருங்கே மனசு சுமக்கும். எனவே மனதை எதிலும் விட்டுவிடாதீர்கள். மனம் சொல்வதைக் கேட்க நேர்கையில் கொஞ்சம் அறிவு சொல்வதையும் கேளுங்கள். சாவது என்பதைத் தவிர மீதியைச் சிந்தியுங்கள்.
—————————————————————————————

(14)
அப்படியொரு வேளை, சாகத்தான்வேண்டும் வாழ்வதற்கென்று இனி ஒன்றுமேயில்லை யென்று தோன்றிவிட்டால், அந்த மனநிலையை ஒரு ஒரு நாளைக்கு மட்டுமேனும் மாற்றி வைத்துவிட்டு, சரி நாளைக்குப் போய் இறந்துவிடுவோம் என்று எண்ணிக்கொண்டு, அந்த முன்னொரு நாளில் எங்கேனும் தெருவில் உதவிக்காக அலையும் ஒரு பத்துபேருக்கு உதவி செய்ய முயற்சித்துப் பாருங்களேன்?

மறுநாள் சாவது எத்தனைப் பெரிய முட்டாள்தனமென்று புரிந்துக் கொள்வீர்கள். அப்படி பல உயிர்கள் பிறரின் உதவிகளை எதிர்நோக்கித் தான் இம்மண்ணில் ஒவ்வொரு ஜீவனும் திரிகிறது.

ஒருவருக்கு ஒருவர், உனக்கு நான் எனக்கு நீ என்று அணைத்துக்கொண்டு வாழும் வாழ்க்கையிது. அருகருகில் நின்று தோளுக்குத் தோள் தந்து நானிருக்கேன் என்று சொல்லும் வார்த்தை யானைபலத்தைத் தரக்கூடியது. அதை ஒருவருக்கு நீங்கள் கொடுக்க முடியுமெனில் நீங்களும் நிச்சயம் வாழவேண்டியவர்!
—————————————————————————————

(15)
அப்படியும் இல்லை, என்னால் யாருக்கும் உதவியில்லை என்று எண்ணினால், அசையும் மரம் யாருக்கென்று அசைகிறது, காய்க்கும் கனி யாருக்கென்று பழுக்கிறது, மலரும் பூக்கள் யாருக்கென்று பூத்து தளர்ந்து வாடி உதிர்கிறது?
மலர்வதும் உதிர்வதும் அதற்கு யதார்த்தமெனில் பிறகு பிறப்பதும் இறப்பதும் கூட நமக்கும் யதார்த்தமாக நிகழவேண்டுமில்லையா? மரங்கள் நிற்கும்’ காய்க்கும்’ காய்ந்துபோகும்; எனக்கு வாழ பொருட்கள் தேவை, வாழ்வதற்கு வழிகள் தேவை என்று எண்ணுவீர்களேயானால், இன்னுமொரு நாள் ஒரு ஊரைச் சுற்றி வாருங்கள்; தெருத் தெருவாய் காய்கறி விற்கும்’ தயிர் மோர் விற்கும்’ மீன் கருவாடு விற்கும்’ மாம்பழம் கீரை விற்கும் வயதானப் பாட்டிகளை தாத்தாக்களைப் பாருங்கள், ஆதரவற்றோரைப் பாருங்கள். ஏழெட்டு வயதில் கிளாஸ் கழுவி இலையெடுத்துப் போட்டு மேஜை துடைத்து தன்னைப் பெற்றவளுக்கு ஒரு நூறு ரூபாயையவது கொண்டுபோய் தரும் சிறுபிள்ளையைப் பாருங்கள். கல்லுடைத்து, கார் தொடைத்து, வீட்டு வேலை செய்து, தெருவில் பொருட்கள் விற்று கிடைக்கும் பணத்தில் தனது வயிற்றையும் கழுவி பெற்றெடுத்த குழந்தைகளையும் காப்பாற்றும் கைம்பெண்களைப் பாருங்கள்; அவர்களுக்கெல்லாம் வாழ வழி கொடுத்த பூமி உங்களுக்குக் கொடுக்காதா?
—————————————————————————————

(16)
வெறும் தோல்வியோ விரக்தியோ கோழைத்தனமோ கொண்டுசென்று விடுவதல்ல நம் உயிர். நம்மால் எல்லாம் முடியும். மனிதனால் மட்டும் எல்லாம் முடிகிறது. எதுவாக ஆகவேண்டுமோ அதுவாக ஆகமுடிந்த பிறப்பு மனிதப் பிறப்பு. தெருவில் தாகத்தோடு அலையும் நோய்வாய்ப்பட்ட நாயிற்கு ஒரு குவளையில் தண்ணீர் ஊற்றிப் பார்த்தால் தெரியும் அது வாஞ்சையாக குடிக்கும் தாகத்தில் வாழ்க்கை எத்தனை ருசியாக உள்ளது என்று.

வாழனுங்க, ஒவ்வொருத்தரும் வாழனும். போட்டியில் பிறரும் வெல்ல மனதையும் திறமையையும் பெருந்தன்மையையும் பெற்று, பொறாமையின்றி விட்டுக் கொடுத்து, அன்பு செய்து, தானம் தந்து, பிறருக்கு உதவி, நன்மையை போதித்து, அனுபவத்தைப் பகிர்ந்து, ஆற்றலை வளர்த்து, மூடத்தை ஒழித்து, தெளிவைப் பெருக்கி; வாழ்தலை ஒரு வரமாக எண்ணி வாழனும்.

இறக்க இருப்பதை யாராலும் தடுத்துவிட முடிவதில்லை, இறப்பு அது வரும்போது வரட்டும். அதுவரை வாழ்ந்துக்கொண்டிருப்போம். வாழும் வரை சாதிக்க முயல்வோம். சாதிப்பதை பிறருக்கும் கொடுப்போம். பிறர் வாழ நாமும் வாழ்வோம்!
—————————————————————————————

(17)
நில் என்றால் நிற்கவும் செல் என்றால் செல்லவும் இயற்கை நமக்கென காத்துக் கிடக்கிறது. அதை புயலாகவும், வெள்ளமாகவும், வெடிக்கும் எரிமலையாகவும், பிளக்கும் பூகம்பமாகவும் மாற்றுவது நாம் தான். நமது ஒழுங்கீனம் தான்.
அதையெல்லாம் முதலில் சரிசெய்துவிட்டு பிறகு சாவதைப் பற்றி யோசியுங்கள். மரணம் நமை கொல்லும்வரை நாம் தற்கொலையையாவது கொன்றுகொண்டிருப்போம். நம் வாழ்தலில் பசுமையாய் பூத்து குலுங்கட்டும் நம் பூமி. பட்டினியின்றி வாழட்டும் நம் பிள்ளைகள், படிப்பறிவோடு வளரட்டும் இச்சமுதாயம், பேராற்றலை நிறைத்துக்கொண்டுள்ள மனிதர்கள் முழுமையாய் தம்மையுணர வாழ்தல் வேண்டும்.
—————————————————————————————

(18)
கடவுள் என்பது யாது, கடவுள் எனில் என்ன, கடவுள் என்றால் அது யார், கடவுளுக்கும் நமக்குமுள்ள இடைவெளி எத்தகையது, கடவுள் வழிபாட்டின் காரணமென்ன, அது எந்தளவில் அவசியம், எவ்வழியில் சாத்தியம், எதற்கது வேண்டும், எதையது சாதிக்கும், எப்படி மனிதருக்கு வலிக்காமல் பிற உயிரை வருத்தாமல் அதை அணுக இயலுமென கண்கள் விரிய விரியக் கிடைக்கும் பெரு அதிசயங்களை காணக் கிடைத்த உடம்பிது. அப்பேற்பட்ட உடம்பை மண்ணில் புதைக்கும் முன் நம் உயிர் ஒரு தெளிவைப் பெற்ற நல்லதொரு உயிரின் உடம்பாக அதைப் புதைப்போம்.

நம்மொரு உடலை பல விதைகளுக்கான உரமாகப் புதைப்போம். கண்பார்வையில்லா நிலை, காது கேட்காத கொடுமை, காலூன்றி நிற்காத முடம் என எதையும் திருப்பிப் போட்டுப் பார்ப்போம், அங்கே அதற்கு மாறான ஒரு பெரிய வெற்றியை இயற்கை நமக்காக வைத்து காத்துக் கொண்டிருக்குமென்று நம்புவோம். பிறத்தல் அரிது எனில் இறத்தலும் அரிது தான் அது பிறப்பு வாய்த்ததைப் போலவே வாய்க்கையில் சிரித்துக் கொண்டே கண்மூடுவோம். இருக்கும் வரை இனிப்பும் கசப்புமான வாழ்வை ருசித்து வாழ்வோம்..

வாழ்க்கை நமக்கு இன்னும் நிறையப் பாடங்களைக் கொடுக்கும். நாம் கற்ற பாடம் நம் தலைமுறைக்கு வெளிச்சத்தை ஏற்படுத்தும். வெளிச்சத்தில் எல்லோரின் வாழ்வும் பிரகாசிக்கும். நன்மையின் பிரகாசத்தில் வீசும் காற்று மனிதரைக் கொல்லாது. மனிதன் நீடு வாழ்வான். உயிர்கள் நீடு வாழும். வாழவேண்டும்..

வாழ்வை அறுத்துக் கொள்ளும் மரணம் தீது. தற்கொலை கொடிது. தற்கொலை யாரையும் தனியே கொல்வதில்லை; நம்புங்கள்… வாழ்வதற்கான வழிகள் ஆயிரம் உண்டு. அதில் ஒன்றையேனும் தேட மனது வேண்டும். மனதில் உறுதி வேண்டும். உறுதி நம்பினால் தான் வரும். நம்புங்கள், உங்களையும் உங்களை நம்பி உங்களுக்காய் இருப்போரையும் இந்த உலகையும் இயற்கையையும் நம்புங்கள். நம்பினோருக்கு நான்கு திசையும் அவரவரின் இரு கைகளுள் அடங்கிப்போகும். அடங்கிப்போக வாழ்த்துக்களும்.. வணக்கமும்..
—————————————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்வியல் கட்டுரைகள்! and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to எல்லோரும் தற்கொலை செய்துகொள்ளுங்கள்..

 1. முனு.சிவசங்கரன் சொல்கிறார்:

  ”பயம் உள்ளவரால் சாகமுடிவதில்லை, சாகுமளவு தைரியம் கொண்டோர் நாளைய எதையும்
  சாதிக்கத்தக்க தீரத்தையும் கொண்டவர் என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.”
  ஆம்..தற்கொலைகூட ஒரு வீரமே…! ஆனால் அதன் பலன்….? சார்ந்தவர்க்கு
  துன்பமே…நல்ல கருத்து..!

  Like

 2. முனு.சிவசங்கரன் சொல்கிறார்:

  ”மரணமென்பது மீண்டும் மாற்ற இயலா தண்டனை தானே என்பதைப் பற்றி யோசியுங்கள்.
  மரணம் என்பது சாவது மட்டுமல்ல; பிறரைச் சாகடிப்பதும் என்று புரியுங்கள்.”
  தற்கொலை செய்துகொள்பவர் தன்னலவாதி …என்பதை தெளிவாக உணர்த்தியமைக்கு நன்றி..!

  26 ஜூலை, 2013 12:21 AM அன்று, முனு.சிவசங்கரன்
  எழுதியது:

  > ”பயம் உள்ளவரால் சாகமுடிவதில்லை, சாகுமளவு தைரியம் கொண்டோர் நாளைய எதையும்
  > சாதிக்கத்தக்க தீரத்தையும் கொண்டவர் என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.”
  > ஆம்..தற்கொலைகூட ஒரு வீரமே…! ஆனால் அதன் பலன்….? சார்ந்தவர்க்கு
  > துன்பமே…நல்ல கருத்து..!
  >
  >
  > 22 ஜூலை, 2013 7:23 PM அன்று, “வித்யாசாகரின் எழுத்துப் பயணம்” <

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s