1
நீ எனைப் பெயரிட்டு
வெங்கட்டப்பா என்று அழைப்பாய்
நானுன்னை –
எனைப் பெற்றவளைப் போல
வாழ்வின் –
கேள்விகளையெல்லாம் மறந்துபோய் பார்ப்பேன்!!
———————————————–
2
நீ போ நா க்கா..
பேச்சாட்டன்” என்பாய்
நான் சிரிப்பேன்
நீ மீண்டும் மீண்டும் நா(ன்) க்கா க்கா என்று
சொல்லிக்கொண்டே ஏதேதோ பேசுவாய்’
நீ பேசப் பேச நான்
வாழ்வைப் பெரிதாகயெண்ணி
வாழ்ந்துகொண்டிருப்பேன்!!
———————————————–
3
நீ அப்பா அப்பா என்று
வாஞ்சையோடு காட்டி எனது
புகைப்படத்திற்கு முத்தமிடுவாய்
அப்பா அப்பா என்றுப் பூரிப்போடு அதைத்
தொட்டு தொட்டுப் பார்ப்பாய்
கொஞ்சுவாய்
நான் பிறந்ததன் பயனை
உன் கையிலிருக்குமந்த –
புகைப்படத்தின் வழியே அடைந்துவிடுவேன்!!
———————————————–
4
நீ உனக்கு ஊட்டியச் சோற்றை
கையில் திரும்ப துப்பி
ஹே..காரமென்றுச் சொல்லி
எனது தட்டில் போட்டுவிடுவாய்
எனக்குக் காராதந்த ஒரு பிடிச் சோற்றில்
இனி வாழவேண்டிய
நாட்களையெல்லாம்
உனக்காய்ச் சேமித்துக்கொள்வேன்!!
———————————————–
5
கையில் படுத்துக் கொள்வாய்
கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்குவாய்
தூங்கும் முன் நிறைய முத்தமிடுவாய்
அப்பா புயிக்கும் ஹொம்பப் புயிக்குமென்பாய்
நான் பூரிப்பில் பூத்துப் போவேன்,
நீ மீண்டும்
அப்பா அப்பா என்று எனைக் கொஞ்சுவாய்
நான் படுத்துக் கொண்டிருக்கும் கட்டிலை
என் தாய்மடியாக எண்ணிப் படுத்துகொண்டிருப்பேன்!!
———————————————–
6
நீ தூங்கிக் கொண்டிருக்கையில்
திடீரென எழுந்து
அப்பா அப்பாயென்று அழுவாய்
நான்.. இதோ அப்பா’ இதோ அப்பா’ என்று உனது
கையை எடுத்து என்னைத் தொட்டுக்காட்டுவேன்
நீ எனது முகத்தை கண்மூடிக்கொண்டே தடவி
பின் மீசையைத் தொட்டுப்பார்தவுடன்
ஆம் அப்பாதான் என்றெண்ணிக்கொண்டு
உறங்கிப்போவாய்’
நான் அதுபோன்ற நாட்களிலிருந்துதான்
எனது உறங்காத விழிகளுள் கூட
உனையே வைத்து பார்த்துக்கொள்ளத் துவங்கினேன்!!
———————————————–
7
நடந்து எங்கேனும் செல்கையில் நீ
அப்பா ஹூக்கு ஹூக்கு என்பாய்
நான்கூட கால்வலிக்குமோ என்று எண்ணி
குழந்தை பாவமாயிற்றே என்றுத்
தூக்கி உனை தோள்மீதுப் போட்டுக்கொள்வேன்
நீ தோளுக்கு வந்ததும்
சந்தோசத்தில் குதிப்பாய்,
தோளை அழுந்தப் பிடித்துக் கொள்வாய்
திடீரென கன்னத்தில் முத்தமிடுவாய்..
நீ இப்படி நினைத்து நினைத்து எனை
அன்பில் நனைப்பாய்; நான்
நனைந்து நனைந்து உன்னுள்
கரைந்துக் கொண்டேயிருப்பேன்..
ஒருவேளை
பின் –
காலத்தில் ஒரு புள்ளியாகவேனும்
நான் மிச்சப்படுவேன் எனில்
அது உனது நினைவாக மட்டுமே மிச்சப்பட்டிருப்பேன்!!
———————————————–
8
பட்டினியில் இருப்பவனுக்குக் கிடைத்த
பலகாரத்தைப் போல
நீ எனைப் பார்க்கும் போதெல்லாம்
பரவசமாவாய்,
நானும்
சுவாசிப்பதைக் காட்டிலும் உனது
சிரித்த முகம் பார்ப்பதையே
முக்கியமென நினைத்திருப்பேன்,
ஆயினும்
ஒருநாள்
நீயும் பெரியவள் ஆவாய்
உனக்கும் திருமணம் நடக்கும்
நானும் சற்று –
தூரமாக்கப் படுவேன்
நம் தூரத்துள் அடைபடும் நாட்கள்
எனது வாழ்நாளிலிருந்து வெகுவாய்
குறைந்தும் போய்விடும்..
———————————————–
வித்யாசாகர்
தேவதைகள் மகளாகப் பிறந்தால் வாழ்வின் கேள்விகள் வாழ்த்துக்களாகும் !
பிள்ளைகள் கா…விடும்போது அவர்களின் முகச்சினுக்கம் நம் வாழ்வின் வயதைக்
குறைக்கலாம்..! பழம்….விட்டச் சிரிப்பு நமக்கு சாகா வரங்கள் ஆகலாம்..!
LikeLike