பிரிந்தவர்ப் பற்றி, பிரியாதிருக்க..(நிமிடக் கட்டுரைகள் 13)

1

பிரிவு வலிக்கும்நெஞ்சை இரண்டாய்ப் பிளக்கும். பிரிந்த மனதுள் துயரம் புகுத்தி உயிரோடு எரிக்கும். உடல் பொருள் ஆவி அத்தனையையும் அறிந்தே வெறுக்கவைக்கும். கல்நெஞ்சைக் கூட கண்ணீரால் உடைக்கும். கால இடைவெளிக்குள் புகுந்து அன்பைப் பெருக்கவும், அத்தனை துரோகத்தையும் மறக்கச்செய்யவும், மனிதரை ஒழிக்கச் செய்யவும், மனிதரின் முகத்தை மனிதர்க்கு மனிதராகவே காட்டவும்கூடச் செய்யும். ஏன், நம் நிலையாமையை நமக்கு உணர்த்தவும் பிரிவால் மட்டுமே முடிகிறது!

2)

யிர் முடுச்சிகள் அவிழும் வலி தெரியுமா? தெரியவேண்டுமெனில் பிரிந்துப்பாருங்கள். வாழ்தலின் அவஸ்தையை உணரவேண்டுமா? உணரவேண்டுமெனில் பிரிந்துப்பாருங்கள். விழியில் நீர்தேக்கி உடலை சுமக்கும் உயிர்ச்சுமையை எத்தனைக் கொடிதென்று அறியவேண்டுமா பிரிந்துப்பாருங்கள். பேசக் கசப்பதும் சிரிக்க வெறுப்பதும் எளிதாய் நடக்கும்,  உண்ண மறுப்பதும் வெய்யில் சுடாததும் சாசுவதம் ஆகும், பிரிந்துப்பாருங்கள்!

3)

ரு தாயைப் பிரிவது பெருவலி என்று எண்ணும் அதே மனது பிள்ளையையும் மனைவியையும் கணவனைப் பிரிகையிலும் கூட பெரிதாய் கனக்கும். பிரிவின் ரணம் அத்தனைக் கொடிது. வயிறு வலிக்கையில் வயிற்று வலி பெரிதாய் தெரிவதைப் போல, பல் வலிக்கையில் பல் வலி பெரிதாய் தெரிவதைப் போல, தலை வலிக்கையில் தலைவலி பெரிதாய் தெரிவதைப் போல; பிரிவும் யார் பிரிகையிலும் அவரையே பெரிதாய்க் காட்டுகிறது. வாழ்வின் அர்த்தத்தை வெறுமைக்குள் திணிப்பதென்பது பிரிவாலேயே அதிகம் நிகழ்கிறது.

அதிலும் பொதுவில் எல்லோருக்குமே அடிக்கடி வலிக்கும் தாளா ரணமெனில் அது நட்புறவுகளைப் பிரிகையில் நோகும் ரணமொன்றே. பழகும் நண்பன் விட்டுச் செல்கையில் வலிப்பதைக் காட்டிலும் வேறு விரிச்சோடி நிலை உறவில் இல்லை எனலாம். எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து உயிர்விடும் கடைசி மூச்சு வரை நமை இதயத்தில் சுமக்கும் காதலியைப் போல மனைவியைப் போல வாழ்வின் பயணமெங்கும் நமைச் சுமந்தே வருவது நட்புறவு!

4)

ன்றாலும், விழுந்தால் அழுது, நடந்தால் சிரித்து, உண்டால் மகிழ்ந்து, பார்த்து பார்த்து, பயந்து பயந்து, ஒவ்வொரு கனத்தையும் நம்மைச் சுமந்தே கடக்கும் தாய் தந்தைக்கு ஈடு வேறெந்த சாமி சேரும்?

அண்ணன் என்பது ஒரு சுகம், தம்பி என்பது ஒரு பலம், அக்கா என்பதொரு புனிதம், தங்கை என்றொரு இதம்; பிள்ளைகள் என்று பல அர்த்தமாய் நீண்டு வாழ்வை இனிப்பாக்கும் அம்சங்கள் உறவுகள் மட்டுமே எனில் மறுப்பதற்கில்லை. அத்தகைய உறவுகளைப் பிரிவது உயிரோடு இறப்பதற்குச் சமம்..

5)

னக்கு எப்பொழுதுமே பிரிவு பெரிதாய் வலிக்கும். யாருடனும் பழக நான் அஞ்சுவதே பிரிவை தாங்க இயலாது என்பதன் பொருட்டுதான். எனது சிறு வயதில் என்னோடு சுற்றித் திரிந்த செல்லப்பிராணி ஜூலியை இதுவரை மறக்க முடிந்ததில்லை. அது நக்கி தொட்டு எகுறி தாவி மடியில் குதித்த தருணங்கள் ஏக்கங்களாய் உள்ளே அடைப்பட்டுக் கிடக்கிறது.

நாயென்றாலும், நானும் ஜூலியும் மனதால் மிக நெருக்கமாக இருந்தோம். நான் வீட்டிற்குள் இருந்தால் அது வீட்டு வாசளுள் படுத்துக்கிடக்கும். வெளியே எங்கிருப்பினும் எனைவிட்டு ஒரு பத்தடி தூரத்திற்குள் எனைப் பார்த்துக் கொண்டே படுத்திருக்கும். வீட்டைவிட்டு தூரம் செல்கையில் ஏன் பின்னாலேயே அந்த நீளத் தெருவின் கடைமுனைவரை மூச்சிரைக்க இரைக்க ஓடிவந்து பின் திரும்பியோடும்.

எத்தனையோ நாட்கள் ஜூலி எங்களூர் பேருந்து நிலையத்தின் பாதி தூரம்வரை வந்து அங்கிருக்கும் வழிப்பறி நாய்களோடு சிக்கிக்கொண்டு அவதியுற்று சண்டைபோட்டு பின் பறிதாமபமாய் திரும்பியோடி இருக்கிறது. அத்தனை ஒரு இணைப் பிரியா அன்பு அதற்கு எங்கள் மேல்!

6)

ஜூலி என்றில்லை, ஜூலியோடு நாங்கள் இருந்த அந்த வீடே பிரிவின் நினைவினுள் கனக்கும் பெருங்கனம் தான். அந்த வீட்டில் தான் எனது பால்யகாலம் கொட்டிக் கிடக்கிறது. எனது இறந்துவிட்ட தங்கை எழுந்தோடி விளையாடியதும் எனது அப்பா எனை மார்பில் போட்டுக் கொஞ்சியதும் அம்மாவின் மடியில் படுத்து காதலிக்காய் அழுததும் அந்த வீட்டில்தான். எங்களின் மொத்தப் பெருந்துயரத்தின் நினைவுக் கூடுகளெல்லாம் சிரிப்புசப்தங்களோடு பிண்ணிப் பிணைந்து அந்தப் பழைய வீட்டில் தான் நிறைந்துக் கிடக்கிறது..

7)

றேழு வயதோ என்னவோ எனக்கு. அப்போது அந்தப் பழைய வீட்டை அங்கே கட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஒரு நூறு வீடு தள்ளி வேறு தெருவில் அப்போது வசித்துவந்தோம், அம்மாவும் அப்பாவும் தங்கை வித்யாவை தூளியில் போட்டுவிட்டு அங்கே வீட்டுப்பணி நடக்கும் இடத்திற்கு அவசர வேலையென்று சென்றிருந்தார்கள்.

நான் வெளியே வந்து தனியே யாரிடமும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்த லல்லி அக்காவைக் கண்டதும் அன்போடு ஓடி கட்டிக் கொண்டேன். அவ்வளவு தான் உடனே அவள் திருடனைக் கண்ட காவலாளியைப் போல விருட்டென எழுந்து எனை கூண்டாகப் பிடித்து எனது மேல்சட்டை கால்சட்டையை எல்லாம் கழற்றிக்கொண்டு நிர்வாணமாகப் போவென்று சொல்லி விட்டுவிட்டாள்.

நான் என்னக்கா என்று அழுததற்கு, லல்லி அக்காவின் அம்மா கற்பக அத்தை இடையேப் புகுந்து “நீ ஏன்டா அவளைத் தொட்டே? அவ வீட்டுக்கு தூரமா இருக்கா அவளை தொடக்கூடாதில்ல?” என்றாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவளே மீண்டும் போ.. போய் குளிச்சிட்டு பிறகு வேற துணி போட்டுக்கோ, இனி இப்படி இருக்கையில தொடாத போ..’ என்றாள்.

நான் அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தேன். வந்தால் வீட்டில் அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை, அப்படியே முடங்கி ஒரு ஓரம் அமர்ந்துக்கொண்டேன். சற்று நேரத்தில் தூளியிலிருந்த தங்கை வித்யா ஒரு வயதுக் குழந்தை. ஒரே கத்தல், வீல் என்று அலறினாள். நான் தூக்கி சமாதானம் செய்துப் பார்த்தேன் அழையையவள் நிறுத்தவேயில்லை. அவளின் அழையை மேலும் தாங்கிக்கொள்ள முடியாமல் உடம்பில் பொட்டுத் துணி இல்லாமல் அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டு அம்மா இருக்கும் அடுத்த தெருவிற்கு அப்படியே நிர்வாணமாகவே நடந்துவந்தேன்.

நானிப்படி வருவதைப் பார்த்து அம்மாவும் அப்பாவும் பதட்டமாக ஓடிவந்து விசாரிக்க, ‘வித்யா அழுதது அதான் தூக்கிக்கொண்டு வந்தேன்’ என்றுச் சொல்லிக் கொடுத்துவிட்டு லல்லி அக்கா இங்ஙனம் செய்துவிட்டது என்றேன். அதற்கு அம்மாவும் எல்லாவற்றையும்  கேட்டுவிட்டு, அது அப்படித்தான், நீ ஏன் அவளைத் தொட்டே என்றாள். எனக்கு ஒன்றுமேப் புரியவில்லை, என் தங்கை மட்டும் புரிந்திருந்தாள். தங்கை என்றாள் எனக்கு உயிர். அவளின்றி இந்த வாழ்வை நான் கடப்பேன் என்று அன்றெல்லாம் நம்பவேயில்லை.

8)

ப்பொழுதெல்லாம் என் தங்கைக்காக மட்டுமே வாழ்ந்த ஒரு ஜீவன் நான். எங்கு நாளை அவளுக்குத் திருமணம் நடந்து கனவன் தவறாக வந்துவிடுவானோ என்று பயந்து அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைவதற்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டு அவள் வயதுக்குவந்த நாளிலிருந்து இறந்துப்போன நாள்வரை எல்லா வெள்ளிக்கிழமையிலும் காலையிலிருந்து மாலைவரை உணவு உண்டதில்லை, வேறொன்றும் கூட அருந்தியதில்லை. வயிறு பசிக்க பசிக்க, பசி வலிக்க வலிக்க அப்படியே வேலையும் செய்வேன். அதெல்லாம் வெல்டிங் அடித்த காலம். இரும்பு உருக்க உருக்க வயிறு பசியில் பிசையும். உடம்பு அசதியில் சுருங்கும். இருந்தும் என் தங்கையின் வாழ்க்கையை எண்ணி அந்தப் பசிநெருப்பையும் மிதித்துக் கடந்தேன்..

9)

ன்றும் மாதத்தில் இரு முழுதினங்களும் எனது தங்கையின் ஆத்மாவிற்கு அமைதி கிடைக்க விரதமாக மட்டுமே அவளின் நினைவை சுவாசித்து வாழ்கையைக் கடக்கிறேன். நான் என்றில்லை எனது தம்பிகள் அண்ணன் அம்மா அண்ணிகள் தங்கைகள் நாங்கள் எல்லோருமே இந்த ஒரு இழப்பினால் சாபத்துள் தள்ளப் பட்டவர்களாக ஆகிப்போனோம்.

காரணம், எங்கள் வீட்டின் வெளிச்சம் எங்கள் வித்யாவாக மட்டுமே இருந்தாள். இன்றும் அவள் அழைக்கும் அண்ணா அண்ணா சப்தம் தான் எங்களுக்கான உயிர்ப்பை பிடித்துநிறுத்தி வைத்துள்ளது. ஒரு நாள் ஒரு கனவு கண்டேன்.

அதி பயங்கரமான கனவு அது. வேறொன்றுமில்லை, எங்கள் தங்கைக்கு திருமணம் நடந்து அவள் எங்களை விட்டு கனவன் வீட்டிற்குச் செல்லப் போகிறாள். முன் நாள் ‘ஐயோ நாளைக்கு திருமணம் முடிந்துவிட்டால் வித்யா போய்விடுவாளே போய்விடுவாளே என்று வீடெல்லாம் தொட்டுத் தொட்டுப் பார்த்து நான் அழுவது போன்ற கனவு அது.

கனவுதான் என்றாலும், மனதின் அழுத்தத்தைக் கூட்டுவதாக இருந்ததால் அழுது அழுது தாங்க முடியாமல் தேம்பியவாறே கண்விழித்துப் பார்த்ததும் தான் உண்மைப் புரிந்தது. தங்கை என்னருகில் எனது கைமேல் தலைவைத்துப் படுத்திருந்தாள். எப்போதும் என் தங்கை தலையணையில் படுத்ததில்லை, அவளுக்கென்றே உடற்பயிற்சி செய்து புஜங்களைப் பெரிதாக ஏற்றி வைத்திருத்தேன். அத்தகைய தங்கை பிரிவதென்பது இதயத்தில் ரத்தம் வடியும் வலியில்லையா?

10)

ன் தங்கை வீட்டை விட்டு திருமணமாகிச் செல்லப்போகிறாள் என்பதையே தாங்காத மனசு இது. இன்றும் எப்படியோ அவளைப் பிரிந்தும், அவள் இவ்வுலகைவிட்டே போனபிறகும் சாகாமல் கிடக்கிறது.

வாழ்க்கையென்றால் இப்படித் தான் புதிய புதிய கற்பிதங்களை வலிக்கும் நிகழ்வுகளினூடே வைத்துக் கற்பிக்கிறது. வலிப்பதும் கசப்பதும் மரணத்தை வெல்ல கடக்கும்வழியே வரும் சோதனைகள்தான் என்றாலும் அங்குதான் வீழ்வதோடு இல்லாமல் மீண்டெழுவதற்கான பாடமும் நிறைத்துவைக்கப் பட்டிருக்கிறது.

பாழும் தெய்வங்கள் கண்மூடிக் கொள்ளும் தடங்கள் இப்படி வாழ்வெங்கும் நெடிந்துக் கிடக்கையில் முட்களை மிதித்துக்கொண்டுதான் சாகும்வரை நடக்கவேண்டியுள்ளது என்பதை பிரிவு உணர்த்தும் வலி மிகக் கொடிது!

11)

ப்படி பிரிவைப் பற்றி எழுதினால் கண்ணீர் சிந்தியே இந்தக் காலம் கடப்பதுபோல் ஈரப்பட்டே ஏடுகள் பல கடந்துப் போகும் என்பதையறிவேன்.

நோய்ப் பட்டு இறப்பதைக் காட்டிலும் பிரிவுபட்டு வலிப்பது நெடிய மரணம் என்பதை பிரிவை உணர்ந்தோர் நன்கறிவர். எனவே பிரிவு யாருக்கும் நேராதிருக்கட்டும். பிரிவு எல்லோருக்கும் உரியதாய் பாடமாய் போதுமனவரை மட்டுமே நிகழட்டும்.

பிரிவை உணருங்கள். பிரிவை ஏற்று அதன் அடுத்த அடியை பலமாக வைக்க கற்றுக்கொள்ளுங்கள். பிரிவில் நெஞ்சம் நிமிர்த்தி சுவாசியுங்கள். பிரிவில் மீண்டும் தெளிந்து எழுவதற்கான பக்குவத்தோடு எழுந்துநில்லுங்கள். பிரிவில்லா வாழ்க்கையில்லை. பிரியமட்டுமே பிறந்த பிறப்பிது; எனவே பிரிவை சுமக்கப் பழகுவோம். பிரிவை வேறு வழியின்றி ஏற்போம். ஆயினும் சாத்தியக் கூறுகளின் வழியே தற்காலிகப் பிரிவை தவிர்க்கவும் முயல்வோம்!

12)

பிரிந்திருப்போரே உணருங்கள், சேர்ந்த கைகள் தட்டும் சப்தத்தைப் போல சேர்ந்திருப்போரின் வாழ்க்கையே பார்ப்போருக்கும் உயர்வாகத் தெரிகிறது. நன்கு கூட்டாக வாழ்ந்தோரின் கதையே பிறருக்கும் பாடமாகிறது. பிரிவின் தனிமை கொடுமை என்பதைக் காட்டிலும் அதை தாங்கியிருக்கும் சொற்கள் கனமானவை. அவைகளை விட்டு விலகி மகிழ்வோடு வாழ பிரிவை விட்டு விலகியிருங்கள்.

சொந்தங்கள் சேர்ந்திருக்கையில் மட்டுமே குடும்பம் மதிக்கப்படுகிறது. மதிப்பாகப் பேசப்படுகிறது. எனவே பிரிவை ஏற்கும் பக்குவத்தோடு சேரும் பலத்தையும் அறிந்திருங்கள். பிரிவில்லா வாழ்வின் அன்பே நம் எல்லோரின் வாழ்க்கையிலும் அதிகம் இனிக்கட்டும்..

13)

வாழ்வின் பல சூழல்களில் பிரிவு சூடுபட்டே பாதி இறந்துப் போனவன் நான். பிரிவால் தவித்து ஏங்கி கவலையுற்று எனைப் பெற்றோருக்கும் உடன் பிறந்தோருக்குமென கண்ணீராய் மட்டுமே கடக்கும் வாழ்க்கை எங்களது வாழ்க்கை. அது எங்களின் சாபமோ அல்லது நாங்கள் இடறிப் போன வழித் தடம் அப்படியா தெரியவில்லை.

எதுவாயினும் அது பிறருக்கு வாய்க்காதிருக்கவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. சேர்ந்திருக்கும் மனதுள் சர்க்கரையாய் இனிக்கும் வாழ்வே எல்லோருக்கும் அமையட்டும்..

பிரிந்தோருக்கான வருத்தம் மிக்கதொரு வெற்றிடத்தை இங்கே வீட்டுச் செல்பவனாய், அதை நிரப்பும் நல்லிதயங்களே நமக்கான தேவை என்பதை அழுந்தச் சொல்பவனாய் இந்த ஈரமான பக்கத்திலிருந்து விடைகொள்கிறேன்..

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவிதைகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to பிரிந்தவர்ப் பற்றி, பிரியாதிருக்க..(நிமிடக் கட்டுரைகள் 13)

 1. ஸ்ரீவிஜி சொல்கிறார்:

  அற்புதமான பதிவு. அமைதியாக முழுமையாக வாசித்தபோது மனம் அமைதி கொள்வதை உணரமுடிகிறது.

  Like

 2. VASANTHA CAHNDRAN சொல்கிறார்:

  நிஜத்தைப் பதிவு செய்துள்ளீர்கள் .
  சொந்தங்கள் சேர்ந்திருக்கையில் மட்டுமே குடும்பம் மதிக்கப்படுகிறது. மதிப்பாகப் பேசப்படுகிறது. எனவே பிரிவை ஏற்கும் பக்குவத்தோடு சேரும் பலத்தையும் அறிந்திருங்கள். பிரிவில்லா வாழ்வின் அன்பே நம் எல்லோரின் வாழ்க்கையிலும் அதிகம் இனிக்கட்டும்..

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s