உறவுகளுக்கு வணக்கம், தமிழர் காதுகளில் அன்று தூர்தசன் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பின் வழியாக ஒலித்துக்கொண்டிருந்த அந்தக் குரல், திரு. செந்தமிழரசு ஐயா எனும் குவைத் தமிழரிடையே பெருத்த மதிப்பினைக் கொண்ட அந்தக் குரல், காதினிக்கப் பாடி அறிவு செறிவுபெற பேசுமந்தக் குரல் குவைத்தைவிட்டு மீண்டும் தமிழகத்தை நோக்கிச் செல்ல இருக்கையில் அதற்கு பிரிவுபச்சார விழா எடுத்து, வாலியின் பிரிவின் ரணமாற்றி பெருமைப் பல பேசி, தமிழ்ச் சான்றோர்களான தமிழ்த்திரு. சேவியர் தனிநாயகம் அடிகளார், தமிழ்த்திரு. திரு.வி.காலியாண சுந்தரனார், தமிழ்த்திரு. நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை என மூவரையும் நினைவுக்கூர்ந்து அவர்களின் தமிழ்ச்சேவைப் பற்றி பேசி, விடுதலை நாளிற்கான கவிதைப் படித்து கருத்தரங்கம் நடத்தி இந்தியாவின் வளர்ச்சியையும் தளர்ச்சியையும் ஆராய்ந்து இனி நாம் ஆற்றவேண்டிய கடமைகள் என்னென உண்டென்பதைப் பற்றியெல்லாம் எதிரும் புதிருமாய்ப் பேசி ஒரு சிறப்பான ஐம்பெரும் விழாவினை எடுத்துநடத்தி ஐயா வாலியின் நினைவரங்கத்தில் வைத்து மிகச்சிறப்பாகக் கொண்டாடியது குவைத் தமிழோசை கவிஞர் மன்றம்.
அதோடு முதல் அமர்வாக நடந்த இப்தார் விருந்து உபசரிப்பில் இறையருளைக் கூட எல்லோருக்கும் பகிர்ந்தே அனைவருக்கும் அளிக்கும் பெருந்தன்மையும் பூரிப்பு நிறைந்ததாகவே இருந்ததென்பதையும் நன்றிகளோடு இங்கே நினைவுக்கூர்ந்து, அத்தகைய மாபெரும் நன்றியுணர்வு விழாவிற்கு நான் முழு நிகழ்வையும் தொகுத்து வழங்கியதைப் பெருமையாக கருதிக்கொண்டு, இத்தனைப் பேர் இவ்வளவு திறனாக அர்ப்பணிப்பாக இங்கே கவிதைக்கும் தமிழுக்குமென உழைப்பதோடு இனப்பற்றுக்கொண்டே வாழ்ந்துவருகிறார்கள் என்பதை பதிவுசெய்யும்பொருட்டாக மொத்த குவைத்வாழ் தமிழர்வாழ்வின் ஒரு துளி உதாரணமாக, அங்கே பேசியதை மற்றும் பேச தயார்செய்து வைத்திருந்த எனது தொகுப்புரைப் பதிவுகளில் சிலதையிங்கே உங்களோடும் பகிர்ந்துகொள்கிறேன்..
தொடர்ந்து எனது எழுத்தோடு பயணிக்கும் நட்புறவுகளுக்கு மிக்க நன்றியும் பெருமதிப்பும்..
——————————————————
சந்தம் பல கொண்டு உனை
சந்த தமிழ் உண்டு உனை
சந்த கவி தந்து உனை
உயிரற்று போகும் வரை பாட;
சங்கம் பல வெல்லுமுனை
சொந்தம் பல கொண்ட உனை
சங்கின் நிறம் கொண்ட உளம்
நின் புகழுக்கு நிகரென்று பாட;
பிஞ்சு மனம் பொங்கு தமிழ்
வெள்ளை மனம் ஓங்கு தமிழ்
கள்ளமது அற்ற தமிழ்
உயிர் தமிழென்று தமிழென்று பாட;
இப்படி பாட பாட இனிக்கும் தமிழுக்கும்,
சகோதர சகோதரிகளுக்கும், வந்தமர்ந்திருக்கும்
என் உறவுகள் கூடிய இந்த அவைக்குமென் முதல் வணக்கம்!
——————————————————
தலைநிமிர்ந்த தமிழர்களும்
உலக நிலம் செழிக்க உழைத்த மனிதர்களும்
மனித வளம் நிலைக்க பாடுபட்டோரும் பிறந்த
நமது மண்ணின்பெருமையைப் போற்றுமிந்த மாமன்றம் என்மதிப்பில் என்றும் உயர்ந்தே நிற்கிறதென்பதை நன்றியோடு இங்கே பதிவுசெய்துகொண்டு இந்த அரபுமண்ணின் ஐம்பெரும் விழாவின் இரண்டாவது அமர்வினைத் துவங்குகிறேன்..
மின்சாரத்திற்கு ப்ளூம்பாக்ஸ் கண்டுபிடித்து அமெரிக்கரை தன்பின்னே சுற்றவைத்த திரு. ஸ்ரீதர் ஐயா, மற்றும் மின்னஞ்சலின் இன்றையக் கட்டமைப்பினை கண்டுபிடித்து உருவாக்கிய திரு சிவா ஐயா மற்றும் நம் இந்தியதேசத்திலேயே சாட்டட் அக்கவுண்டில் முதல் மதிப்பெண் எடுத்த பிரேமா போல ஒரு பக்கம் நாம் எங்கோ வீழினும் மறுபக்கம் உலத்தின் பார்வையில் எப்போதுமே ஏதோ ஒன்றில் ஒய்யாரமாய் எழுந்து உயர்ந்தே நின்றுக்கொண்டிருக்கும் தமிழரை பெருமைசெய்வதன் பொருட்டாக இன்று நாம் நினைவில் வைத்திராத உயர்ந்தோரையெல்லாம் தேடி தேடி நினைவுகூறும் இந்த நம் தமிழோசையின் புதிய நிர்வாகிகளுக்கும் வளமைதாங்கும் தலைமைக்கும் எனது நன்றிகளை உரித்தாக்கி.. நிகழ்ச்சியினைத் துவங்குகிறேன்..
முதல் நிகழ்வாக ..
——————————————————
திரு. கலிபுல்லா
ஐயா என்று
இவரைக் கண்டாலே மதிக்கலாம்
கைகுலுக்கும் நட்பில் இதயத்தைப் புதைக்கலாம்
இவர் கால்பட்ட இடத்தில்கூட ஒரு புன்னைகை பூத்துக்கொள்ளும்
இவர் பாட வந்ததுமே நாகூர் ஹனிப்பாவை இவர் குரல் நினைவு கூறும்..
ஐயா கலிபுல்லா அவர்களை ஈகைப் பெருநாளின் பாடலொன்றைப் பாட மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
திரு.கூனிமேடு முபாரக்
கவிதையின் பித்தன்
கல்லூரியைக்கூட கவிதையில் காணும் பாவண்ணன்
கடக்கும் நாட்களைப் போல
கவிக் கூடுகளின் சுமையறியாது மொழிக்குள் சுமக்கும் படைப்பாளி
நாவலாசிரியர் திரு. முபாரக் அவர்களை முதல் கவிதைப் படிக்க மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
திரு.குமார்
கொட்டும் மழையில் நனைவது போல் இவர் பாடினால் நனையலாம்..
கெட்டிக்காரப் பேச்சென்று இவர் பேசினால் நன்றி கூறலாம்..
பட்டிமன்றம் பேச்சரங்கம் எதுவாயினும் இவர் மேடையேறினால் சிரிக்கலாம்..
இவர் நிர்வகிக்கும் தலைமைக்கு
நாம் எந்தச் சங்கமாயினும் – இங்கே கூடிநின்று கைதட்டலாம்.. அத்தகைய நம் பெருமைக்குரிய தலைவரான முனைவர் ஐயா குமார் அவர்களை தமிழ்ச் சான்றோர் பற்றிய சிறப்புரையாற்ற மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
அடுத்து வாலியின் நினைவாஞ்சலி இனி கவியாஞ்சலியாகவும் இசையாஞ்சலியாகவும் ஒலிக்கவுள்ளது..
காற்றில் ஒலிப்பாய் வாலி..
வாலி என்றதுமே வயோதிகம் மறக்கும்
வாலி என்றாலே வாலிபம் வரும்
வாலி என்பதை வரலாறு நினைக்கும்
வாலிக்கு அஞ்சலி என்றதுதான் இன்றைக்கு வலிக்கும் துக்கம்!
ஒடியும் சிறகுகளைப் பாட்டினால் கட்டியவர்
பாட்டோடு மட்டுமே மூச்சையும் விட்டவர்
காற்றின் அசைவிலும் காதினிக்கும் பாடல்களைத் தந்தவர்
பதினைந்தாயிரம் பாடல்களுக்குப் பின்னே’ கண்களை மூடியவர்;
பாடியத் தெருவெங்கும் பிறர் பெயரை ஏற்றவர்
நாட்டு எல்லையைவிட்டு பாட்டாலே போனவர்
நாட்டாமை செய்யாது பாட்டால் ஆண்டவர்
ஏட்டிலும் எழுத்திலும் இசையாய் கலந்தவர்;
கட்டுமரக் கடலென்றாலும் சரி
கட்டழகு பெண் அசைவென்றாலும் சரி
கற்பத்தில் சுமந்த அன்னைப் பாட்டென்றாலும் சரி
மூன்றுத் தலைமுறைக்குப்பின்னும் மூப்பின்றி எழுதியவர்;
இவருக்கு நரை கூடியப் பின்னும் வரிகள் கூடின
பல் கொட்டியப் பின்னரும் சொல் கொட்டின
கால் தடுமாறினாலும் கவியரங்கம் தாங்கின; பாண்டவர்பூமியும்
கிருஷ்ணவிஜயமும் இவரால் கவிதையில் ஆயின;
கேள்வி கேட்க பாட்டில் சொன்னவர்
எதிர்நீச்சலைப் போட என்றோ எழுதியவர்
காற்று வாங்கப் போய் கவிதை வாங்கிவந்தவர்
கல்லைமட்டும் கண்டார் கடவுளைக் காணவில்லை யென்றுப்
பாட்டால் அழுதவர்;
இனி கேட்டாலும் கிடைக்கார்
புதுப் பாட்டிற்கு ஏற்கார்
எமன் வீட்டிற்கே இனி விழிப்பார்..
என்றாலும் –
மரணமவரின் உயிரையே யெடுக்கும்
மண் அவரின் உடம்பையே யரிக்கும்
மக்களவர் பெயரை மறப்பினும்
காலம் அவரை பாட்டாக முனுமுனுக்கும்..
——————————————————
திரு.கங்கேஷ்
கட்டுகளை பாட்டுகளால் உடைப்பார்
பாட்டின் வழி இதயக்கதவு திறப்பார்
கூட்டமது கூடும் இடத்தில்
முழு நட்சத்திரமாய் மினுப்பார் திரு கங்கேஷ்.. அவர்களை இசையாஞ்சலி கொடுக்க மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
திரு.ஆனந்தரவி
இருட்டின் வெண்ணிலவு
மனதின் கதகதப்பு
நட்பின் பெருவெளி
கவிதையின் பேரருவி அன்புக்கவி ஆனந்தரவி அவர்களை மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
வாழ்த்துரை திரு. முத்துராமன்
தமிழகத்தின் தேடல்
வீரமறவரின் வாசம்
ஆண்டத் தமிழரின் கம்பீரம்கொண்ட ஐயா திரு. வைகோ அவர்களின் புகழ்மணக்கும் “குவைத், தமிழர் மறுமலர்ச்சிப் பேரவையின் ஆலோசகர் திரு. முத்துராமன் அவர்களை வாழ்த்துரை வழங்க மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
திரு.யாகூப் அலி
ஒரு சொல்போரிது
ஒரு பொதுக்கூட்டத்தின் பண்பாடிது
ஒரு கவிதையின் அழகிய வரியின் உச்சம்
நாட்டியமாடும் குழந்தையின் பூஞ்சிரிப்பு திரு. கவிஞர் யாகூப் அலி அவர்களை ரமலான் சிறப்புக்கவிதை மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
திரு.கணேஷ்
இவனும் பாட்டுக்கு முதலானவன்
எவர்பாட்டுக்கும் எழிலானவன்
பல விருதுக்கேச் சேரும் புகழானவன்
என்றுமே நான் அவனின் ரசிகனென்று எனைச் சொல்லவைத்தவன்
பண்பின் உடைவாள் பெரிய நட்சத்திரம் திரு. கணேஷ் அவர்களை மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
திரு.பட்டுக்கோட்டை சத்யா (இலக்கியம்)
மனிதத் தீஞ்சுவை
மலரின் போர்க்குணம்
மழலை மனவளம்
மரபுப் பெருஞ்சுடர் தோழமை திரு. பட்டுக்கோட்டை சத்யா அவர்களை “சர்க்கரைச் சாறே சங்க இலக்கியம்” எனும் தலைப்பில் சிறு சொற்பொழிவாற்ற மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
திரு.நாகப்பூசனம்
கொடுத்தும் சிவக்காதிருக்கவே குடுத்துவைத்த
அன்னார், கலக்கும் மேடைப் பலதின் வள்ளல்களுள் முன்னேர்
சிலிர்க்கும் சிரிப்பு உதறி
செயலால் சிறக்கும்
இவ்விழாவின் முன்னிலைச் சான்றோர் ஐயா திரு. நாகப்பூசனம் அவர்களை வாழ்த்துரை வழங்க மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
திரு.உ.கு.சி.
நட்பின் நறுமணம்
பண்பின் ஆழக்கடல்
பாவகையில் புதுக்கவிதை
பழகப் பழக இனிக்கும் பெருநட்சத்திரம் ஐயா உ.கு.சி எனும் கவிஞர் உ.கு.சிவகுமார் அவர்களை வாலியாஞ்சலி பாட மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
திருமதி. செல்லம்மா வித்யாசாகர்
எனக்குச் சோறுபோடும் தாய்
கவிதைக்குத் தீணிபோடும் தோழி
என் வீட்டிலேயே படைப்பாளிகளை வளர்க்கும் அம்மா
வீட்டின் தென்றலாக வீசியவளை பாட்டின்
மென்மையாக இங்கேக் கரைய திருமதி. செல்லம்மா வித்யாசாகர் அவர்களை மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
திரு.சம்சுதீன்
பூக்கள் நெய்த வீடென்று சொல்லி மனதை நெய்தவர்
கனவுகளின் ஊர்வலத்தால் காலத்துள் நிலைப்பவர்
படைப்புக்களின் வழியே பாடம் சொல்ல முனைபவர்
பாமாலையை நனைய கண்ணீரில்தோய்த்து ஐயா வாலிக்கு அஞ்சலி செய்ய கவிஞர் திரு சம்சுதீன் அவர்களை மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
திருமதி.பாரதி கண்ணம்மா
பாட்டுக்கொரு பாரதி
நம் குவைத்திற்கொரு கண்ணம்மா
அன்பில் தோழி
பண்பின் தேவதை
சொல்லின் வன்மையில் செந்தூரம் ஏந்தியச் சோதரி
கவிதாயினி திருமதி பாரதிக் கண்ணம்மா அவர்களை கவிதைப்பாட
——————————————————
திரு.சிவசங்கரன்
உணர்ச்சிகளின் பெருந்தீ
உவமைக்கு அணையா கவித் தீபம்
உலகின் பாட்டுக்கு எதிர்பாட்டு
எமக்கென்று இறைவன் தந்தப் பூங்கொத்து ஐயா முனு சிவசங்கரன் அவர்களை மேடைக்கழைக்கிறேன்..
கணேஷ்
மீண்டும் ஒரு கவிஞர் வாலியின் பாடலைப் பாட கணேஷ்..
——————————————————
திரு.விருதை பாரி
நான் பெயர் வைத்தக் குழந்தை
எனக்குப் பெயர் தந்த குழந்தை
மேடையில் வீடுகட்டும் பேச்சாளன்
இனி எல்லோரும் போற்றப்போகும் பாட்டாளன்
வெண்ணிலாவின் தந்தை திரு. கவிஞர் விருதைப் பாரி அவர்களை மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
திரு.கவிசேய்..
சாமிக்கும் மனிதக் காதலுக்கும்
பாத்தொடுக்கத் தெரியும்
இவரின் நாவன்மை கூட
திருநீரு வாசம் வீசும்
அறமது உய்ய தமிழை நாலடியின் வழியே காப்பார்
ஐயா கவிசேய்.. அவர்களை தமிழ்காணல் நடத்த மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
திரு.விட்டுக்கட்டி
சொட்டுசொட்டாய் சேரும் உள்ளங் கடலு
அன்பின் எல்லையில்லா நெஞ்சக்கூடு
பிள்ளைகளின் ஆட்டம்போடும் ஆயி பாரு
பாட்டுக்கட்டி பண்பைக் கூட்டும் ஐயாவிற்கு விட்டுக்கட்டின்னும் பேரு;
வாருங்கள் ஐயா..
——————————————————
திரு.கிருஷ்ணமூர்த்தி
இலக்கியம் என்பது இவரின் பேச்சுக்குத் தான் அழகு
சங்க இலக்கியம் என்பது இவருக்குத் தான் சொற்கிரீடம்
சொல்லும் பொருளும் இவர் பேசத் தான் எல்லோருக்கும் புரியும்..
தேனும் தமிழும் ஒன்றென்றால் நம்ப
இவரைத் தான் பேச மேடைக்கழைக்கவேண்டும்; வாருங்கள் ஐயா திரு. பழமலை கிருஷ்ணமூர்த்தி அவர்களை மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
திரு.அன்பரசு
உண்மைத் தலைவர் இவர்
புரட்சியின் உன்னதப் பேரொலி
சுயநல நீட்சியில்லாத தொண்டன்
இனத்திற்கும் மொழிக்கும் முதல்கொடி ஏந்தும் போராளி திரு. அன்பரசு..அவர்களை மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
திரு.அறிவழகன்
அறிவும் அழகு அவரும் அழகு
பொதுவாக பேசப் பேச முத்து கொட்டும்போல பேசுவார் என்பார்கள்
அனால் இவர் பேச பேச கேட்போருக்கு பற்று வளரும்
நரம்பு கொஞ்சம் புடைத்துக் கொள்ள
தமிழர்மேல் பற்று பெருகும்
நெஞ்சம் நிமிர்த்தி அஞ்சாதிருக்க அறிவு புகட்டும் திரு. அறிவழகன் அவர்களை மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
திரு.அன்வர் பாட்சா
கவிஞர்களை நெஞ்சில் சுமப்பார்
கவிதைகளை பேச்சுள் நுழைப்பார்
கவிதையொரு ஆயுதமென்பார்
கவிஞர்களே காதுகொடுங்கள் கவிஞர் அல்லாதோரும் சேர்ந்து இருங்கள்..
ஐயா அன்வர் பாஷா பேசட்டும் ஒருசில மணித்துளிக்குள் முடிக்கட்டும்..
——————————————————
திரு.பட்டுக்கோட்டை சத்யா (தளர்ச்சியே – கருத்தரங்கம்)
இரண்டாவதாக வந்தாலும் எழுச்சியோடு வருவார்
இந்தியா செல்லும் பாதை தளர்ச்சி என்று மொழிவார்..
நாம் காத்திருக்கும் விடுதலை நாள் சிறப்பின் கருத்தரங்கை ஆரம்பிக்க
மரபுப் பெருஞ்சுடர் கவிஞர் திரு. பட்டுக்கோட்டை சத்யா அவர்களை மீண்டும் மேடைக்கழைக்கிறேன்..
——————————————————
திரு.சாதிக் பாட்சா (வளர்ச்சியே – கருத்தரங்கம்)
கவிதையை மடையுடையப் பொழிவார்
களங்கமற தேனுரையாற்றுவார்
அரங்கம் பல அறியுமிவரை
அன்னைத் தமிழ் மன்றங்கள் போற்றுமிவரை,
நெஞ்சில்கவி தீபமேற்றும் ஆச்சாரி
நம் நாட்டு வளர்ச்சியைப் பற்றிப் பேசஅழைக்கிறேன் தமிழ்ப் பூச்சூடி
வாருங்கள் ஐயா திரு. சாதிக்பாட்சா அவர்களே..
——————————————————
திரு.செந்தமிழ் அரசு
நான் பார்த்தே வளர்ந்தத் தமிழ்
நான் வளர்ந்தபோது மகிழ்வோடு பார்த்த தமிழ்
காதில் தேனென ஊறும் தமிழ்
காலம் மறக்காத செந்தமிழ்;
சென்னைத் தமிழ்
சென்னைக்கு வண்ணம் சேர்க்கும் தமிழ்
சிம்மாசனமின்றி மனதுள் நின்றத் தமிழ்
சொல்லாசான் என நெஞ்சு ஏற்ற தமிழ்
காற்று வீச வீச விழிகள் சில்லிடுவதைப் போல
இவர் பேசப் பேச, பாடப் பாட மனது ஜதியிடும்
மௌனம் உடைபடும்
மலைபோல் அவரை அன்போடு
மதிப்போடு ஐயாவென அண்ணாந்துப் பார்க்கிறேன்,
எங்கிருப்பினும் நம்புவதற்கு
எங்களின் நினைவுகளைச் சேர்க்கிறேன்
நாலு வரி தமிழ்க் கொத்தேந்தி நம் கருத்தரங்கு மேடைக்கு அழைக்கிறேன்..
வாருங்கள் ஐயா, தமிழைத் தாருங்கள் ஐயா, எங்கிருப்பினும் தமிழாகவே வாழுங்கள் ஐயா.. எங்களின் வாழ்த்துக்களும் அன்பும் உங்களை தாங்கியே நிற்கும் ஐயா..
————————————————-
நிகழ்ச்சியை நிறைவு செய்ய உள்ளோம்.. இதுவரை அமைதிகாத்து ரசனைக் கூட்டி அமர்ந்திருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைப் பாராட்டி ஒரு விடுதலை நாளின் கவிதையைப் பகிர்ந்து விடைகொள்கிறேன்.. ..
தலைப்பு: இரத்தம் சொட்டச் சொட்ட நனைந்த மண்..
மன்னித்துக்கொள்ளுங்களேன், விடுதளைநாளின் கவிதையை இன்றே ஏன் இடுவானேன்? அதை ஆகஸ்ட் பதினைந்தன்று நன்றியோடு பதிகிறேன். அதுவரை அன்போடு விடைபெற்றுக் கொள்ளும் முன் ஒரு சின்ன செய்தி, இதில் வரவேற்றுள்ள படைப்பாளிகளில் ஒருசிலர் நிகழ்ச்சிக்கு வரவில்லை, அழைப்புக் கொடுத்து இருந்தமையால் எழுதியதை எழுதியப் படி பதிந்துக் கொண்டேன். காரணம் அவர்களின் சிறப்பை சொல்லும் நோக்கு மட்டுமல்ல எப்போதும், உடன் பயனிப்போரைப் பற்றிப் பெருமையாகப் பேச’ அன்பை’ மதிப்பினை வெளிக்காட்ட’ இப்படி ஏதோ ஒருசில இடத்தின் வாய்ப்புக்களே அமைகின்றன. அதற்கான நன்றியும் வணக்கமும் உறவுகளே..
பேரன்புடன்..
வித்யாசாகர்
சிறந்த கருத்துப் பகிர்வு
பிரிவு விருந்து
பகிர்வு எண்ணங்கள்
எல்லாமே சிறப்பு என
பதிவு சுட்டி நிற்கிறதே!
“வாருங்கள் ஐயா, தமிழைத் தாருங்கள் ஐயா, எங்கிருப்பினும் தமிழாகவே வாழுங்கள் ஐயா…” என்ற கருத்தை வரவேற்கிறேன்.
LikeLike