16. திரைப்படம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இன்று மக்களிடம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?
ஊடகங்களுக்கும் நமக்குமிடையே ஆர்வமென்னும் ஆசையென்னும் ஆடம்பரமெனும் இயல்பிற்கு முழுதும் ஏற்புடையதாக இல்லாத கண்ணாடித் துண்டுகள் பல கொட்டிக் கிடக்கிறது. அந்தக் கண்ணாடிகளின் வழியே அவர்கள் அவர்களைப் பார்க்கிறார்கள், நம்மைப் பார்த்ததாக எண்ணி எதையோ செய்கிறார்கள். நாமும் மீண்டும் அதே கண்ணாடிகளைப் பார்க்கிறோம், அது மீண்டும் நம்மையே அவர்களின் முகத்தோடு சேர்த்துக் காட்டுகிறது, நாமும் அதை நம் முகமேன்று நம்பி அதன்பின் போகிறோம். இப்படி நாமென்று நம்பி அவர்களும் அவர்களைக் கண்டுவிட்டு நம் முகத்தைக் கண்டதாக நாமும் இன்று இங்குமங்குமாய் நிறைய மாறிப் போய்க் கிடப்பதே ஊடகம் செய்த பெரிய புரட்சியின் பலன்.
உண்மையில் இன்றைய திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் ஏற்படுத்தியுள்ள முதல் பாதிப்பு நேரவிரயம். இரண்டாவது உணர்சிவயப்படல். மூன்றாவது ஒரேயடியாக கொதித்தடங்கி வீழ்தல். மீண்டும் நமை உசுப்ப இன்னொரு திரைப்படமோ தொலைக்காட்சியோ வசனமோ வரும்வரை முடங்கிக் கிடத்தல். குறிப்பாக காதலைக் கற்குமளவிற்கு வேறெதையும் எளிதாக கற்க இயலாதவர்களாக நமை மாற்றிக் கொண்டுவரும் அபாயம் இந்த இரண்டுத் திரைக்குள்ளும் பதுக்கப் படுகிறது.
லஞ்சத்தை எதிர்க்கச் சொல்லித் தருவது என்றாலும் திரைப்படம் வழியாகத் தான் சொல்லவேண்டும். நூறு புத்தகம் எழுதி சொன்னது போகாத இடத்தில் ஒரு பாட்டு சென்று அமர்ந்துக் கொள்ளும் அளவிற்கு திரைப்படங்களால் மோகித்துப் போயிருத்தல் அத்தனை நல்ல சூழலில்லை. எதைக் காணினும் கேட்பினும் படிப்பினும் செய்பவர்கள் நாமாக இருத்தல் வேண்டும். அதற்கு நம் வாழ்க்கையை நாம் முழுமையாக நமது பிறப்போடு சேர்ந்த உரிமையோடு வாழ்தல் அவசியமாக இருக்கிறது.
இருக்கு என்று சொன்னால் ஆம் என்று சொல்ல ஒரு குழுவும், இல்லை என்று சொன்னால் ‘இல்லையா’ ஆம் இல்லை இல்லை என்று சொல்ல ஒரு குழுவாகவும் நாம் பிரிதல் ஆபத்து. ஆனால் அந்தப் பிரிதலில் உள்ளூறும் குழு மனப்பான்மையை ஊடகங்கள் நிறையத் தருகிறது. ஒரே ஒரு மணி நேரத்திற்குள் ஒரே ஒரு தொலைக் காட்சிக்குள் ஒரே ஒரு நிகழ்ச்சியின் ஊடாக பத்து தேயிலைத் தூளும் இருபது உடம்புத் தேய்த்துக் குளிக்க சோப்பும் தரமாக உள்ளதாக காசுக்கு ஏற்ப விளம்பரம் செய்யும் ஊடகத்து தொழில் தர்மத்தை அங்கீகரிக்கும் மக்களாக நம்மை மாற்றியது யார்? அந்த மாற்றத்தை சுவையுற ஒரு ஊடகம் செய்கிறது எனில் அதை விட்டுவிலகாத அல்லது ஒரு மாற்றத்தையேனுமங்கே ஏற்படுத்தாத நாம் என்ன ஒரு சமநிலைப் புரிதலை அந்த ஊடகங்கள் வழியே நமக்குள் ஏற்படுத்திக் கொள்ளப் போகிறோம்?
வெறும் உழைப்பதும் சலிப்பதும் அல்ல வாழ்க்கை. பொழுதுபோக்கு வேண்டும். ஆனால் அது ஆடற் கலையின் வழியும், பாடல் கலையின் வழியும், சித்திரக் கலையாகவும், தற்காப்புக் கலையாகவும், விளையாட்டாகவும் உடற்பயிற்சியகவும் மூளையையும் திறமையையும் தனக்குள் தோன்றியதைக் கொண்டுவருவதாகவும் இருத்தல் வேண்டும். இடையே நாம் நம்மை முகம் பார்த்துக் கொள்ள ஊடகங்களை வைத்துக் கொள்ளலாம். நாம் செய்வதைப் பகிர்ந்துக் கொள்ள ஊடகங்கள் உதவலாம். நாம் என்னவாக இருக்கிறோமோ அதை அதை மட்டுமே ஊடகங்கள் காட்டலாம். லட்சியமென்பது இமையமலையின் மீது ஏறுவதாக இருத்தல் வேண்டும். அதைக் காட்டுவதே கற்பனையாக அமைதல் வேண்டும். இமையமலையை எட்டித் தொடுவதாக காண்பிப்பதும் எண்ணுவதும் அத்தனைச் சரியான கற்பிதமோ கற்பனையோ அல்ல..
அதற்காக இந்நிலை உடனே, ஒன்றை நிறுத்திவிட்டு இன்னொன்றை ஏற்றிவைத்துவிடக் கூடிய விளக்கைப் போன்று அணைந்தோ எரிந்தோவிடும் நிலையல்ல. இது அதுவாக மாறிய காலப்போக்கு. இனி அதுவாக மாறும். மாறுகையில் நல்ல மாற்றத்தோடு நம் சமூகம் மாறக்கருதி நாமெல்லோரும் நமக்குள் நன்மைகளை விதைத்துக் கொள்ளல் நலம் தரும்..
ஆய்விற்கு பரிந்துரை செய்த அன்புச் சகோதரர் கவிஞர் திரு. ம. ரமேஷ் (PhD) அவர்களுக்கு நன்றி!!
————————————————————————
வித்யாசாகர்