6. காதலில் கொலைகள், தற்கொலைகள் குறித்த தங்களின் சமுதாயப் பார்வை என்ன?
காதலில் கொலைக்குக் காரணம் நீங்களும் நானுமான இச்சமூகமே. காதல் என்பது இரு உயிர்களின் இதயமுடுச்சி. அதை அவிழ்ப்பது மரணமகவே இருக்கும். இது புரிகையில் காதலிப்போருக்கும் காதலைத் தடுப்போருக்குமான எச்சரிக்கையுணர்வு தானாக வலுக்கும்..
காதலித்தலை கடைப் பொருளாக்கிய ஊடகம், ஊடகத்தை ஊறு மறந்து வீட்டிற்குள் வரவழைத்துக்கொண்ட நம் வீடுகள், நேரம் மறந்து அதில் கிறங்க வீட்டில் இடமளித்தப் பெற்றோர், வீடுகளில் சக உறவின் தன்மையைப் புரிந்துக்கொள்ளாத, புரிந்துணர்வை அதிகப் படுத்தும் வாழ்வமைப்பை வைத்துக்கொள்ளாது வளர்ந்தப் பிள்ளைகளென நம் அனைவரின் ஒட்டுமொத்த அசாதாரனங்களும், வெகுவேக நாகரீக மாற்றமும், அதிசுலபமாக அல்லது மலிவாகப் பகிர்ந்துக்கொண்ட உணர்வுகளின் கட்டுப்பாடற்றத் தன்மையும், முழுமை ஏற்படாதத் தருணத்துப் புரிதல்களும், அவைகளை எளிதாக இடம் மாற்றித் தந்த தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பமுமென நமது மொத்தப் பங்கும் காதல் கொலைகளுக்குக் காரணம்.
அது மாறவேண்டுமெனில் முதலில் நாம் நம் முகங்களில் பூசிக்கொள்ள விரும்பும் வெட்டி கௌரவத்தை கைவிடவேண்டும். ‘வாழ்தல் சுலபமானது சுகமானது பிறருக்காகவும் வாழ்க்கையில்’ என்பதை எல்லோரும் புரிந்துக் கொண்டால் தனக்கான ஆடம்பர உணர்வு அல்லது அந்த மிகைப் படுத்திக் கொளல் விட்டுப் போகும். மிகைப் படுத்திக் கொள்ளாது இருப்பதில் இன்பம் வருமென்று அறிய முடியுமின் தனக்கானது தனக்குக் கிடைத்தால் போதுமென்று எண்ணம் வரும். தனக்கானது போதும் எனில் தன் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் கூட அவர்களுக்கானவைகளாக இருப்பதையே மனசும் விரும்பும்..
இப்போது காதலை எதிர்ப்பது எது பெற்றோரின் மனசா? இல்லையே, ஐயோ பிறர் என்ன எண்ணுவார்களோ, ஊரெப்படிப் பேசுமோ எனும் பயம் தானே? பெற்றப் பிள்ளையின் ஆசையில் மரணத்தை பரிசாக இடவோ ஏமாற்றத்தை எரியும் மனதுள் நிரைக்கவோ எவருக்கிங்கே விருப்பம்? எல்லாமே அக்கம்பக்கம் குறித்தும் பார்ப்போர் பேசுவதற்கு அஞ்சியும் தானே நடக்கிறது நம் மண்ணில். அவைகளை களையவேண்டும் எனில் தனக்காக முதலில் தான் வாழப் பழக வேண்டும். பழக்கத்தை குழந்தையிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். நல்லதை இப்படி வளையாது நிற்கும் சமூகத்தின் முதுகில் வைத்து இனிப் பயனில்லை. வளரும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவது ஒன்றே வழி.
குறிப்பாக காதல் பொருத்தவரை அது ஈர்ப்பு சார்ந்தது, மனதின் நெருக்கத்தைக் கொண்டது, ஏக்கத்தை ஏற்படுத்தும், எளிதில் கட்டுப்படுத்திக் கொள்ளவோ மறந்துவிடவோ இயலாது, வலி மிகுந்தது, நிதானமாகச் சிந்தித்து புரிதலை ஏற்படுத்திக் கொள்ளும் மனங்களுக்கு ஒத்தது, விட்டுக் கொடுத்தல்’ பழியேற்றல்’ பிறரை வருத்துதல் தனைத் தானே விட்டொழித்தல் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் கொண்டது என்பதை நாம் குழந்தைகளுக்கு புரியுமாறே வளர்த்தல் வேண்டும்.
அதன் மேலும் ஏற்படும் காதலின் சிக்கல்களை எடுத்துச் சொல்லலாம், எதையும் ஏற்கத் தயாரெனில் ஏற்றுக் கொள்ளலாம், எதுவாயினும் இது அவர்கள் சம்மந்தப் பட்ட வாழ்க்கை, எனதோ எனது ஊர்குறித்தோ மானம் குறித்தோ பாதிக்கத் தக்கது அல்ல, பார்த்துப் பார்த்து வளர்த்தக் குழந்தையை தானே கொள்ளல் தீது, தன் பிள்ளையை தானே வருத்துதல் பாவம், தெரிந்தே உயிர்களைப் பிரித்தல் சாபத்தையடையுமென பெரியோர் அறியத் துவங்கிவிட்டால், அடுத்தத் தலைமுறைக்கு காதல் எதுவாக இருக்கிறதோ அதுவாகப் புரியவும் துவங்கும். வாழமுடியுமெனில் வாழவும் வழியில்லா பட்சத்தில் மறுக்கவுமான மனதின் கதவுகள் இளைஞர்களுக்கானதாகவே திறக்கும். அப்படித் திறக்கும் கதவுகளிலிருந்து வெளிப்படும் இளைஞர்களுக்கு காதலும் காதலின் அவசியமும் காதலின் சாசுவதமும் புரியும், காதல் மனதுள் எளிதாக எரியும் தீயென்றும் இயற்கையாக அரும்பும் உணர்வென்றும் புரியப் புரிய மறுப்பு குறையும். மறுப்பு குறைய குறைய அன்பு அதுவாகப் பெருகும், அன்பு நிறையுமிடத்தில் மனிதம் நிலைக்கும், மனிதம் நிலைக்க நிலைக்க ஜாதிகளின் மதங்களின் அவசியம் கூட எதுவரைத் தேவையென்றும் புரிந்துப் போகும் புரிதலில் தான் மரணம் மாயும், தற்கொலை தடைபடும், சாவும் வாழ்வும் காதலால் காதலுக்குப் பின்னேயே யாக மாறும்.. மாறனும்..
————————————————————————
வித்யாசாகர்