5. இயற்கை சார்ந்த தங்களின் அழகுணர்வு குறித்துச் சொல்லுங்களேன்?
இயற்கையில் எது அழகில்லை? பார்க்கும் பார்வைச் சற்று நகர்தலில் மாறுபடுகையில் அழகும் அசிங்கமும் வெவ்வேறு இடத்துள் அங்கம் வகித்துவிடுகிறது என்பது உண்மை என்றாலும் கூட, கொட்டும் மழையும், கூடும் பறவைகளும், நகரும் மேகக் கூட்டமும், நெற்றியில் சுழலாத பொட்டினைப்போல வட்டமாய் நகரும் நிலவும், காற்று தடவத் தடவ இலைகளோடு அசையும் விலகும் இருட்டும், கண்கூச மூடும் விரல்களின் இடுக்கில் தெரியும் காலை மஞ்சள் வெய்யிலின் கதிரும், காற்றாட ஆட ஆடும் மரங்களும், பேசும் மலர்க் கூட்டமும், வாசம் நோக்கிவரும் மனிதரும், விலங்கினமும், குழந்தையும், குமரியும், வயோதிகரும், மின்னலும், மின்னும் வானமும், வானத்தின் கீழ்வந்து முட்டும் கடலும், கரைமோதும் அலைகளும், அலையிநூடாக கரைவந்து மணல்புகும் கிளிஞ்சளும், மீண்டும்; மீன்களோடு இன்னொரு உலகமாக நீருக்குள் வாழும் எண்ணற்ற உயிர்களும், செடிகளும், மரமும், மீசையும், முதலில் விழும் நரையும், விவேகப் பார்வையும், பளிச்சிடும் கண்களும், செவ்விதழும், பாதி சிரிக்க உதிரும் மெல்லியப் புன்னகையும், சிணுங்கும் மனைவியும், சிங்கார வீட்டுத் தோட்டத்தின் நடுக் கிணறும், நதியும், அருவியும்.., வயல்வெளிகளும்.. ஆஹா; அஹா; எது அழகில்லை? எல்லாவற்றையும் பாட வார்த்தைகளெங்கே வார்த்தைகளெங்கே..(?) இயற்கையை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. வார்தையினைத் தேடினால் கடலலையும் கடக்கும் காலத்தையும் தாண்டும்..
என்றாலும், அதற்கு நாம் நட்ட நவீனப் பற்கள் தான் நம்மை அவ்வப்பொழுது கடித்தும் குதறியும் மென்றும் துப்புகிறதேயொழிய இயற்கை இயல்பில் எரிமலையாகக் கண்டாலும் அழகுதான்..
————————————————————————
வித்யாசாகர்