4. அஃறிணையின்பால் நேயம் கொள்வதின் நோக்கம் என்ன?
நம் வாழ்க்கை என்பது ஒரு சங்கிலிக்குள் முடையப்பட்ட ஒன்று. அதில் ஒரு முடுச்சி அவிழ்ந்துவிட்டாலும் வாழ்தலின் திசைமாறிப் போகும் சாத்தியங்கள் அதிகமாக உண்டு. அப்படி பல இடங்களில் நாம் திசைமாறிப் போனதன் காரணம் தான் இன்று மனிதனை மனிதன் மறித்தப் பிறகும், எரித்தும்கூட எடுத்துத் தின்னப் பழகிப்போயிருக்கிறோம். உண்மையில் மனிதனால் காக்கப்படவேண்டிய உயிர்களே மனிதனால் கொல்லப்படுவதென்பது கொடுந்துயரம்; பெருந்தவறினில் ஒன்றில்லையா.. ?
சாமிக்குச் செய்யும் பூஜையைவிட குழந்தைக்கு ஊட்டும் சோறு முக்கியம் என்பாள் அம்மா. எனில் குழந்தை வேறு தனைக் காத்துக்கொள்ள இயலாது நம்மால் மடியும் விலங்கினம் வேறா? விலங்குகள் காக்கப்டுமெனில் இயற்கைச் சிதைவு குறையும், இயற்கைச் சிதைவு குறையுமெனில் இயற்கையினால் ஏற்படும் சீர்கேடுகளும் பெரும்பாலும் நீங்கும். பின், இயற்கையை காத்தல் வேண்டும் எனில்; இயற்கைச் சீற்றத்தைக் குறைக்க மனிதர் விலங்குகளைக் காத்தலும் கடமையில்லையா ?
உண்மையில் எனக்கு வலிப்பதுண்டு. வலிப்பதையே எழுதுவது என் வழக்கம். அங்ஙனம் எனக்கு இலை பறிக்கையில் வலித்ததையும் மலர் கொய்கையில் நொந்ததையுமே இதுவரை எழுதியுள்ளேன். உண்மையில் விலங்கினம் குறித்த அக்கறையும் மனிதர்க்கு வேண்டும். மனிதம் இருப்பதன் வெளிப்பாடு பிறஉயிர்களினிடத்துச் செய்யும் அன்பும் எல்லோரிடத்தும் இயன்றவரை சமமாகக் காட்டும் பரிவுமாகும்..
கூடுதலாக, ஒரு பொருளை அழிப்பது என்பது எளிது. உருவாக்குவதென்பதே கடினம் என்பது புரிகையில் அனைத்தின் மீதான அக்கறையும் அனைத்துயிரின் மீதான நேசமும் எல்லோரின் மீதும் தானாகவே யெழும். எழுதல் அவசியம்..
————————————————————————
வித்யாசாகர்