3. மனித நேயம் இன்று வளர்ந்துள்ளதா? குறைந்து வருகின்றதா? மனித நேயத்தின் தேவை என்ன?
மனிதநேயம் பொதுவாக வளர்ந்துள்ளது, என்றாலும் மனிதநேயத்தின் மகத்துவம் புரிந்தோர் குறைந்துப்போயுள்ளனர் என்பதும் உண்மை. மனிதநேயம் என்பது கையில் அடிபட்டதும் உடுத்திய சேலை கிழித்து கட்டிவிடுவதல்ல; இது பேசினால் இவருக்கு வலிக்குமென்றுப் புரிவது, இது செய்தால் அங்கே உயிர்கள் மடியுமோ என்று அஞ்சுவது, எதன் பொருட்டு எவ்வுயிரையும் வருத்தாது காப்போமோயென அனைவரின் நன்மையினைக் குறித்தும் சிந்திப்பதும் பின் அதன்வழி நடத்தலுமே மனிதநேயம்.
ஒரு பூனைக்கு ஒரு மீன் கிடைத்தால் அது மீனை உயிர்போக அடித்தோ அல்லது தலைகிள்ளியோ தின்னும். அது அதன் இயல்பு. மனிதனுக்குக் கிடைத்தால் அதன் துள்ளலை ரசிப்பான், வண்ணம் கண்டு வர்ணிப்பான், நீந்துவதைப் பார்த்து கப்பல் செய்வான், மேலும் அதன் நன்மைக் கருதியே தனது வாழ்வை அமைப்பான். சற்று அதன் தோள் அறுபட்டாலோ துடுப்புகள் ஓடிந்துவிட்டாலோ ஐயோ பாவமென்று வருந்துவான். வருந்துவதே மனிதநேயம். பிறர்சார்ந்து சிந்தித்தலும், பிறரின் நன்மை குறித்து தனது வாழ்க்கைதனைக் கட்டமைத்துக் கொள்பவனுமே மனிதனுமாவான்..
————————————————————————
வித்யாசாகர்