2. சமுதாய வளர்ச்சியில் முதியோர் இல்லங்கள் பெருக்கம் என்பது நன்மையா? தீமையா? முதியவர்கள் இன்று நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகக் கருதுகிறீர்களா?
காவல்துறை பெருகுவதன் மறைமுக அர்த்தம் திருடர்கள் கூடுகிறார்கள் என்பதல்லவா? பின் முதியோர் இல்லங்கள் கூடுகிறது என்றாலும் நன்றிகெட்டவர்கள் நாம் பெருகிப் போகிறோம் என்பது தானே அர்த்தம்? நம் தலைக்கு நாமே இடும் கொல்லி எப்படி நன்மையில் சேரும் ? பெற்றோர் பிள்ளைகளை காப்பது எப்படிக் கடமையோ அப்படி பிள்ளைகள் பெற்றோரைக் காப்பதும் தாழாதொரு மனிதத்தின் உச்சபட்ச உதாரணம் தானே?
எனை வளர்த்த கைகளுக்கு நாம் போடும் சோறுமட்டுமே நாளை நமக்கும் கிடைக்கும் என்பதை மறந்தோர் செயலே முதியோரில்லத்தில் தன் பெற்றோரை விடும் செயலுமென்பதை நாம் புரிதல் வேண்டும்.
பொதுவில், முதியோர் இல்லங்கள் பெருகிவருவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று சமுதாயம் குறித்த பொதுநல அக்கறை பரவலாக அதிகப் பேருக்கு வந்துள்ளது;
இரண்டு, குடும்பம் பற்றிய புரிந்துணர்வு வெகுவாகக் குறைந்துப் போகிறது. உண்மையில் நமது வாழ்க்கைமுறையை நாமே வெகுவேகமாக மாற்றிக்கொண்டு நம் கண்ணில் நம் கைவைத்தே குத்திக்கொள்ளும் ஒரு குரூரம்தான் தனைப் பெற்றுவளர்த்த அம்மாவையும் அப்பாவையும் தனித்து எங்கோ ஒரு காட்டில் விடுவதற்குச் சமமாய் வேறொரு வீட்டில் விடுவதும்.
சிந்தித்துப் பாருங்கள்; இன்று அது அவருக்கான இல்லம் அனுசரணை தர மறுத்து வெறும் பெருகும்கருனையைக் காட்ட அனாதை இல்லம் கட்டிக் கொடுக்கிறோம், நாளை அது நமக்கானதாக மாறுகையில், நம் கண்களில் குத்தும் கை நமதாகத் தானே இருக்கிறது?
அதின்றி, முதியோர் இல்லத்தில் அடைபட்டுக் கிடப்பதை அத்தனை நிம்மதி என்று சொல்வதற்கில்லை. சற்று தூரம் கடந்து நம் வீட்டை விட்டு அடுத்தத் தெருவில் ஒரு வாரம் போய் நம்மால் தங்கியிருக்க முடியுமா? நிம்மதி என்பது நம் வீடு. நம் வீட்டில் எனது தோட்டத்தில் அசையும் இலைகளும், எனது வீட்டில் கேட்கும் பால்காரனின் குரலும், வாசலில் வந்துவிழும் தினசரியும் தன் பிள்ளைகள் தனக்குப் போடும் ஒரு உண்டைச் சோறும் தான் நிம்மதி.
பசியை நிறுத்த
எரியும் வயிறு சில்லிட
ஒரு குவளை மோரோ அல்லது கையளவு சோறோ போதும்தான், அதில் அன்பின்றி அது கடமைக்காய் கொடுக்கப்ப்படுமெனில் பின்பு வாழ்வதன் அவசியம் தானென்ன? அதைக் காட்டிலும் மரணம் பெரிய ருசியன்றோ(?)!!
பேருக்குவேண்டுமெனில் சொல்லலாம்; முதியோர் இல்லங்கள் அங்கு வருவோரை நன்றாகப் பார்த்துக்கொள்வதாகவும், நேரத்திற்குச் சோறு தருவதாகவும், சுகாதாரம் காப்பதாகவும் நிறையச் சொல்லலாம், ஆனால் அவைகளால் காக்கப்படும் உடம்பினைக்கொல்லும் பிரிவின் வேதனையை யாரால் தீர்க்கமுடியும்..? பெற்ற பிள்ளைகள் தாராத அன்பைக் காட்டிலும் கொல்லும் தனிமை கொடிதில்லையா?
தான் பெற்ற பிள்ளையோடுச் சேர்த்து வேறொன்றும் பிறந்துவிட்டால் என்ன செய்திருப்போம் நாம், இரட்டைப் பிறப்பென்றுக் கொண்டாடியிருக்கமாட்டோமா? அதைவிடுத்து கழுத்தை நெரித்தா கொன்றுபோட்டிருப்போம்? அப்படி யொரு குழந்தையைப் போலெண்ணி பெற்றோரையும் காத்துக் கொள்வது பிள்ளைகளின் கடமை என்பதைப் புரியச் செய்ய; புரிதலோடு பேசி, பேச்சின் நடுவே அன்பு காட்டி, பரிவோடு, அக்கறையோடு, பாசத்தோடுப் பழகும் குணத்தையும் சிறுவயதிலிருந்தே குழந்தைகளிடத்தில் ஏற்படுத்துவதன் மூலம்; வளர வளர அவர்கள் வைத்திருக்கும் தனது பெறோரின் மீதான அன்பினைக் கொண்டு நாளைய முதியோர் இல்லங்களை வெகுவாகக் குறைத்துவிடலாம். அதுமட்டில் ஆதரவற்றிருக்கும் பெரியோரைக் காக்க பொது அக்கறைக் கொள்ளும் நல்லுள்ளங்கள் மதிக்கத் தக்கவர்கள் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.
————————————————————————
வித்யாசாகர்