திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திற்காக “வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம்” என்ற தலைப்பில் ஆய்வுசெய்து சகோதரி ரா. மகாலஷ்மி ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். ஆய்வுநிறைவின்போது வித்யாசாகரிடம் கேட்கப்பட்ட நேர்காணலின் கேள்விபதில்கள் பின்வருமாறு:-
1. இன்றைய குடும்ப அமைப்புகளில் பெருகிவரும் பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்து? தீர்வு எதுவாக இருக்க முடியும்?
வீட்டுக்கூரையில் பற்றியுள்ள சிறு தீக் குறித்து வருந்துவதன்றி வேறென்ன செய்ய. எனினும் அதில் நீரூற்றி அணைக்கும் வித்தைஎனில் அது அன்பு ஒன்றே. அன்பைப் பகிர்தல் என்பது குடும்பத்தின் ஒற்றுமைக்கான ஒட்டுதலுக்கான உயிர்நாடி போன்றது. அன்பு இல்லாத வறண்ட இல்லங்களே வெடித்துப் போகிறது. அன்பு இருப்பின் அக்கறைக் கூடும், அக்கறைக் கூடின் பரிவு பாசம் வெளிப்படும், பரிவின்பால் பரஸ்பர நெருக்கம் கூடும் நெருக்கத்தின் பொருட்டு விரிசல் குறையும். அன்பொன்றே குடும்பத்தின் உயிர்நாடி. அன்பிருக்கும் வீட்டின் பிரச்சனைகள் நீற்குமிழிகளைப் போல வரும் வேகத்திலேயே இருக்கும் இடமறியாது போய்விடுகிறது. அங்கே புரிதல் மிகுதியாகவும், சில இடங்களில் புரிதலே இன்றி கண்மூடிக் கொள்ளவும், மன்னிக்கவும் விட்டுத் தரவும் அன்பு வழியை சமைத்துத் தருகிறது. குறிப்பாக அன்புள்ள வீடுகளில் எழும் பிரச்சனைகள் தெருவிற்கு வருவதில்லை..
————————————————————————
வித்யாசாகர்