15. படித்த பெண்களும் இன்று இல்வாழ்க்கையில் முரணாக நடந்து கொண்டு விவாகரத்து கோருகிறார்களே… கல்வியின் நிலை குறித்து தங்கள் பார்வை என்ன?
சோற்றில் உப்பிட்டுவிட்டு பின் கரிப்பதாகக் குற்றம் சொன்னால்; அது போட்டவரின் பழியன்றி வேறென்ன? எதையும் திருந்தச் செய்யும் பழக்கமொழிந்துப் போனோம். அடிப்படையில் இருந்து வரவேண்டிய ஒழுக்கங்களை எல்லாம் பாதியாக வைத்துக் கொண்டு மேலுக்கு அடிக்கும் வெள்ளையை மட்டும் பளிச்சென்று அடித்த வீட்டைப் போன்றே நமது எண்ணற்ற செயல்பாடுகள் இன்றுண்டு. நல்ல திறமையாக வளர்க்கும் குழந்தைகளை அறிவோடும் தெளிவோடும் வளர்க்க அத்தனை நாம் முழுமையான பிரயத்தனம் செய்வதில்லை. இதைக் கத்துக்கோ அதை கத்துக்கோ முதலா இரு வாழ்க்கையை ஜெயி அளவா சாப்பிடு வாக்கிங் போன்னு சொல்லும்போதே பண்பைக் கற்றுத் தரவும், அன்பைப் பகிர்ந்து பிள்ளைகளை ஈர்ப்போடு வளர்க்கவும் இன்று எத்தனைப் பெற்றோர்கள் நாம் நமது நேரத்தை குழந்தைகளுக்காகவும் அவர்களின் எதிர்காலம் நன்னடத்தைகளோடு அமையவும் அக்கறைக் கொண்டிருக்கிறோம். அதற்காக நான் ஒட்டுமொத்த பெற்றோரையும் குறை சொல்லவோ எல்லோருமே குற்றவாளி என்றோ கூற வரவில்லை. நமது வாழ்க்கை முறை அங்ஙனம் ஆகிப் போகிறது. நாம் தான் நம் பிள்ளைகளை வளர்க்கிறோம். நாம் தான் அவர்களுக்கு உலகத்தைக் காட்டுகிறோம். நாம் தான் அவர்களுக்கான அத்தனையையும் செய்கிறோம். இன்றையப் பிள்ளைகளும் சரி நமது வீடுகளும் சரி நாடும் சரி நம்மால் செய்யப்பட்டது. எனவே நமக்கான அத்தனை அநீதி கொடுமைகளுக்கும் நாமே பொறுப்பு என்பதையே முன்வைக்க எண்ணுகிறேன். எனவே நம் சமுதாயக் கேடுகளுக்கான நல்மாற்றத்தையும் நமது பிள்ளைகளின் வழியே, பின்னான நமது நடத்தையின் மூலமுமே நம்மால் சரிசெய்துக்கொள்ள முடியும்..
அதுபோல் விவாகரத்து ஒன்றும் தொட்டும் ஒட்டிக்கொள்ளும் தீது ஒன்றுமல்ல. அது ஒரு இருட்டின் கதவுகளைத் திறந்து புது வாழ்வின் வெளிச்சத்தைக் காட்டும் வழி. திருந்தாத ஜென்மங்கள் இருபாலரிடையேயும் நிறைய உண்டு. எனக்குத் தெரிந்து ஒரு தங்கையை அப்படி நயமாகப் பேசிக் கட்டிச் சென்ற ஒருவன் இன்று செய்யும் கொடுமைகளுக்கு அளவேயில்லை. திரும்பினால் குற்றம் நின்றால் குற்றம் எழுந்தால் குற்றமென அத்தனைக் குற்றம் சாற்றும் அவன் குடிக்காத நாளில்லை அவளை அடிக்காத நாளில்லை. இப்போது அவள் எங்களை யாரையுமே வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு அவன் மட்டும் போதுமென்று வாழ்கிறான். அவளின் நன்மைக்கென்று எண்ணி நாங்களும் அதை சம்மதிக்கிறோம். அவன் அவனின் குடும்பத்தொரு உறவுகளோடு இருக்கிறான். தங்கை மட்டுமொரு தனிக்காட்டில் எங்களின் வார்த்தைகளைச் சுமந்துக் கொண்டு பிரிவில் தவிக்கிறாள். எனக்குக் கோபம் அவன் மீதல்ல. அவனின் பின்னாலிருக்கும் நாம் கட்டிவைத்திருக்கும் அடிமைத்தன மூட்டை மீதுதான் எனக்குக் கோபம். அவன் சரியாக இருப்பதாகவும் அவளும் சரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு ஆணுக்கு மத்தியில் அவனுக்குத் துணையாக இருக்கும் அவனின் அம்மா அக்காள் உறவுகள் எனும் பெண்களுக்கு மத்தியில் எது நாளிடறிக் கிடக்கிறது? நம் சமூகம் தானே? அந்த சமூகச் சாக்கடைமீது காரி உமிழ ஒரு ஆயுதம் அந்த அபலைப் பெண்ணிற்குத் தேவையிருக்கிறது. அதுபோன்ற பெண்களுக்கும் அப்படிசில் வேறு கோணத்தில் சிக்கித் தவிக்கும் ஆண்களுக்கும் ஒரு ஆயுதமாக இந்த விவாகரத்து இருப்பது ஏற்புடைய ஒன்றேயொழிய முழு மருப்பினைக் கொண்டதல்ல.
ஆனால், இங்கு பிரச்சனை என்னவென்றால், உறவுகளை ஒரு வார்த்தைக்குள் முறித்துக் கொள்வதே பிரச்சனை. கத்தி மரம் வெட்டவெனில் அதையேடுத்து செடி கொடிகளை எல்லாம் சீவிப் போடும் சிறுவர்களைப் போல இந்த விவாகரத்தைப் பயன்படுத்துவது நாளைக்குப் பின் வேறொரு கொடூர நாகரிகத்தை வளர்த்துவிட வாய்ப்புள்ளது.
பிரச்சனைகளை அனுசரிக்கவும், பிரச்சனை குறித்து தெளிவுற சிந்திக்கவும், பிரச்சனை பிரச்சனை என்று உறவுகளை அறுத்துக் கொள்ளாதிருக்கவும், எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த இரு ஆண் பெண் உறவுகளில் பல வேறுபாடுகள் கருத்துமாற்றங்கள் வரவேச் செய்யும் அதை ஸ்நேகத்தால் அணுகி ஒருவருக்கொருவர் வலிக்காமல் வாழ்க்கையை இருபாலருக்கும் இரு வீட்டாருக்கும் பிடித்தமானதாக அமைத்துக்கொள்ளவும் நாம் தான் நம் பிள்ளைகளுக்கு சுதந்திர மனப்பான்மையோடு வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு நகர்தல் குறித்து சொல்லித்தரவேண்டும்.
அதிலும் காய்ந்த மண்ணில் வந்துவிழும் நீரை மண் வெகுவேகமாக உரிந்துக்கொள்வதைப் போல, அடங்கியே இருந்துப் பழக்கப்பட்டப் பெண்கள், ஒடுங்கியேக் கிடந்து வலித்துப் போன மனங்கள் இன்று தனித்துப் பறக்கப் பழகிக் கொண்டுள்ளன. எங்கும் சிறகடிக்கத் தக்கவாறு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளன. ஏய் என்றால் ஏனென்று சிந்திப்பதற்கும் முன் ஏய்ய்ய்.. என்று வீரியத்தோடு கத்துவதையே சரி என்று எண்ணிக்கொள்ளும் அளவிற்கு முதுகில் வாங்கிய அடிகள் ஏராளமாய் அவர்களுக்கு வலிக்கிறது. என்றாலும், இது ஒரு மரத்தை வெட்டி எதிர்ப்பக்கத்தில் சாய்ந்துக் கிடக்க அதையேடுத்து மீண்டும் மறுபக்கம் சைப்பதர்குச் சமமாகவே இருந்தாலும் குறைந்தபட்சம் அவர்கள் எழுந்தேனும் நிர்கட்டுமே பிறகு யாருக்கு வலிக்கிறது என்று பார்பபோமென்றே பொது நியாயமொன்று உள்ளத்துள் எழுகிறது.
எனவே எதையும் அலசி சரிபார்த்து மிக எச்சரிக்கையாக இருந்தே நம் சமூகத்தை பட்டைதீட்டும் நிலையில் இருக்கும் நாம் யாரையும் கைகாட்டி நீ குற்றவாளி என்றுப் பெண்ணையோ அல்லது நீதானென்று ஆணையோகைகாட்டி குர்ரப்படுத்தும் சூழலில் இல்லை. நாமெல்லோருமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து நமக்கான ஒரு ஒழுக்கத்தை ஒரு சமதர்மத்தை ஆண் பெண் சார்ந்த வாழ்க்கைக்குள் ஏற்படுத்த வேண்டும். அதற்கெல்லாம் வேகுனாலாகும் என்பதால் இப்போதைக்கு உடனடி மருந்தாக நாம் அன்பு செய்வதன்றி விவாகரத்தைக் குறைக்கவோ குடும்பப் பிரச்சனைகளை ஒழிக்கவோ வேறு அதிக வழியில்லை. அன்பை ஒழுக்கத்தை நற்பண்புகளைத் தரக்கூடிய உண்மை நிலையை யொழித்து வேறு பெரிய ஆயுதங்களில்லை..
குழந்தைக்குச் சோறூட்டும் போதே தாயும் தகப்பனும் ஒரு நல்ல ஆசிரியர்களாகவும், ஆசிரியர்களிடம் வரும் பிள்ளைகளை அவர்கள் தனது பிள்ளைகளைக் காக்கும் பெற்றோரைப் போலவும் வழிநடத்துமொரு கல்வி நம் பிள்ளைகளுக்கு வேண்டும். திறமைகளுக்கு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் கதவுகளை பாதி பங்கிற்கு அடைத்துவிட்டு, அறிவுக்கு வழிகாட்டும் ஆசான்கள் பள்ளிக்கூடங்களில் மீதிப் பங்கிற்காய் வேண்டும். வெறும் ஆங்கிலம் பேசிவிட்டால் பிறமொழிகளைக் கற்றுக் கொண்டால் பாடவும் ஆடவும் தெரிந்துவிட்டால் வாழ்வின் பாதைகள் தெளிவுற புலப்பட்டுவிடுவதில்லை. நற்பண்புகளைக் கற்கவேண்டும். பிறர் மனம் வலிக்காது நடத்தல் உள்ளூர வேண்டும். எதுவாக வேண்டுமோ அதுவாகமுடியுமெனும் நம்பிக்கையை நாம் நம் வருங்காலத்திற்கு ஏற்படுத்தத் தக்கதொரு கல்வி வேண்டும். பாலினம் பற்றி காதல் பற்றி அன்பு பற்றி சமுதாயம் பற்றி ஆன்மிகம் பற்றியெல்லாம் அவர்கள் வளர்ந்துவரும் போதே அறிந்து புரியப் புரிய வளரவேண்டும். இங்ஙனம் ஒரு விதையை ஊன்றும் போதே உரத்தொடு ஊன்றுவதைப் போல ஒரு குழந்தையை வளர்க்கும் போதே முறையாக சரியாக வளர்த்தலின் பொருட்டு மட்டுமே இல்வாழ்க்கையின் முரண்களைக் களைந்து அவசியமற்ற விவாகரத்தினையும் ஆண் பெண் இருபாலரிடத்திருந்தும் முழுமையாக அகற்றிட முடியும், நல்லதொரு மாற்றத்தினை நம் சமூகத்துள் கல்வியைக் கொண்டும் நிகழ்த்திட முடியுமென்பது எனது நம்பிக்கை..
————————————————————————
வித்யாசாகர்