14. வரதட்சிணை குறித்து தங்கள் கருத்துகள் என்ன?
வரதட்சணை ஒரு குற்றமல்ல. ஜாதி மதமெல்லாம் எப்படி நமக்குள் நன்மையைப் பயக்கும் என்று ஆரம்பித்துப் பின் மனிதனால் மனிதனைக் கூறுபோட்டுக் கொள்ள ஜாதியும் மதமும் தீராப் பிணியாகிப் போனதோ; அப்படி வரதட்சைனை என்று கேட்டாலே பெண்களைப் பெற்றெடுத்த வயிறுகளிலெல்லாம் விஷம் வார்க்கும் செயலாக வரதட்சனை கொடுத்தல் மாறிப் போனது நிச்சயம் சரிசெய்துக்கொள்ளவேண்டிய ஒரு சம்பிரதாயமாகத் தான் இருக்கிறது..
முதலில் இதையெல்லாம் ஒரு சம்பிராதயமாக; திருமணத்தின் கட்டாயப் பொறுப்புகளுள் ஒன்றாக உள்ளதை மாற்றல் வேண்டும். தன் மகளை கனவன் வீட்டிற்கு அனுப்பும் காலத்தில் அவளை பெருமதிப்பாக அனுப்புவதாக மகிழ்ந்து போகுமிடத்தில் உயர்வாக வாழ்வாள் மகள் என்று நம்பியப் பெற்றோர்கள் தன்னால் இயன்றதைச் செய்தனுப்பியது அக்காலத்தின் திருமண முறைகளுள் ஒன்றாக இருந்தது. இப்போது, பெண்களுள் அதிகமானோர் படித்தும் பட்டங்கள் பலதை வென்றும் விண்வெளியிலிருந்து எந்திர ஆய்வு வரை படையெடுத்தும் நடைபோடத் துவங்கியப் பொழுதில், படிப்பை பாதியில் நிறுத்துவிட்டு மூன்று முடுச்சிகளுள் அடங்கிப் போகும் நிலையும் சிலப் பெண்களுக்கு வாய்க்கமலில்லை.
அதற்கு ஆண் பெண் என இருவரும் எவ்விதத்திலும் குறையாத காரணமாக இருந்தாலும் பொதுவாக பெண்களுக்கு இழைக்கப்படும் பல அநீதிகளை அகற்றி அவர்களை அவர்களின் நிலையில் வாழவிட தனை சரிசெய்துக்கொள்ளும் பல பொறுப்புகள் ஆண்களிடத்தில் அறியப்படாமலேயுண்டு.
ஆண்டாண்டுக் காலமாக கட்டளையிட்டே வாழ்ந்துவிட்ட ஒரு வர்க்கத்தின் நீட்சியாகவே பெண்களின் தற்போதைய பல மாறுதல்களும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களும் நடந்துவருகிறது. அவைகள் மாறி சரிநிகர் பொதுநிலை அமைய இருபாலரிடத்திலும் நட்பு வலுத்து கண்ணியம் பெருகி காதல் ஊற’ காதல் புரிய’ காதல் பெருக’ வாழ்க்கை அவரவர்களுக்கானதாய் அவரவருக்கு சாசுவதப் படலாம். அதற்குப் பின் வரதட்சணை கொடுத்தல் வாங்கலெல்லாம் அவசியமற்றும் போகலாம்..
பொதுவாக தற்போதைய நிலைப்படி உடனடியாக செய்யவேண்டுவது வரதட்சனையை கட்டாயமாக தவிர்த்தல் வேண்டும். சட்டப்படியே அது குற்றம் என்று ஆனபிறகும் வெற்றிலைக்கு கீழ்வைத்து பொருள் மாற்றும் நிகழ்வு போல இது இன்றும் மிக நாகரீகமாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. சிலர் முரணாகப் பேசுவதாக எண்ணிக்கொண்டு அதலாம் அந்தக் காலமுங்க இப்போ எங்கங்க வரதட்சணை கொடுமையெல்லாம்னு பேசுறாங்க. அவர்களுக்குத் தெரியாமல் ஆங்காங்கே எரியும் குடும்பங்கள் எரிந்தும் வாழ்க்கை விடியாப் பெண்கள் முதிர்க்கன்னிகளாகத் திரிந்துக்கொண்டும் தான் இருக்கிறார்கள். அந்நிலை முழுமையாய் மாறவேண்டும்.
தன் மகளுக்கு தான் விரும்பிச் செய்யும் எதையும் தவிர இதைக் கொடுங்கள் இதைப் போடுங்கள் என்று நாக்கூசாமல் கேட்போர் வீட்டில் திருமணத்தையே நிச்சயிக்கக் கூடாது. பத்து வீடு அங்ஙனம் மறுக்கத் துவங்கினாள் அது பற்றியதொரு பெரிய விழிப்பு பொதுவில் ஏற்பட வாய்ப்புண்டு.
நல்ல குணமும், போதிய அழகும், பொருந்தும் பண்பும், தீரா அன்பையும் தவிர வேறெந்த பொருளோ நகையோ பணமோ சொத்தோ ஒரு சிறு புன்னகையைக் கூட மனதால் நகைக்கத் தராது. ஒருவரின் உழைப்பு இன்னொருவரை தாங்குமென்றால் அது உழைத்தவரின் சம்மதத்தோடு மட்டுமே தாங்குவதாக இருத்தல் நலம். அல்லாது அது பாவம், பெருங்குற்றம். குற்றத்தைத் தவிர்ப்போம். நம் குலப் பெண்களை நம்மிடமிருந்து முதலில் காப்போம்..
————————————————————————
வித்யாசாகர்