13. பொதுவாக… வாழ்க்கை தத்துவமாக எதனை குறிப்பிட விரும்புகிறீர்கள்?
உண்மையே நமக்கான ஒளிவட்டம். ஒருவன் உண்மையாக இருப்பதை கடைபிடிக்கத் துவங்கிவிட்டால் எவ்விடத்தும் பொய் கூறவோ தவறை மறைக்கவோ இயலாது. உண்மைப் பேசுபவன் தவறிற்கும் பிற உயிர்களை வருத்தும் செயலுக்கும் அஞ்சி முறையாக இருக்கும் இடத்தின் மேன்மைக்குத் தக சிறந்தே வாழ முற்படுவான்.
ஒருவேளை அவனையும் மீறி சூழ்நிலைக் குறித்து தவறே நேர்ந்தாலும் அதை மறைக்காமல் ஒப்புக் கொள்ளும் மனநிலை உண்மையாக வாழ்பவருக்கு ஏற்படும். அங்ஙனம் தன் தவறை மறைக்காமையால் அடுத்து அந்த தவறு நிகழாமல் நடக்கப் பக்குவப்படுவதோடு நடந்த தவறுக்கு ஏற்ப நன்மையை செய்தாற்றுவது பற்றியும் ஆலோசிக்க எண்ணம் ஏதுவாகும். ஆக நாள்பட நாள்பட கண்ணியமும் நேர்மையும் ஒழுக்கமும் உண்மையின் கண் ஒருவருக்கு வாய்க்க ஞானவொளி கண்களில் பரவும். உண்மை ஒளிவட்டமாக இருந்து எங்கு செல்லினும் அவரைக் காக்கும்..
அவர் காக்கப்படுதல் கண்டு அங்ஙனம் வாழ பிறருக்கும் ஆசை வரும். ஒருவரால் நான்குப் பேர் மாற, நால்வரால் நூறுபேர் மாறுவர், நூறு ஆயிரம் ஆகும் ஆயிரம் கோடியில் கூடி உண்மையின் கண்ணியத்தை உலகெங்கும் பரப்பி நாளையை நல்வழிபடுத்த இன்றிலிருந்தே இப்போதிலிருந்தே உண்மையாக வாழப் பக்குவப் படுங்கள். உண்மையாக இருத்தலே நம் வாழ்வினைச் சிறப்பிக்கும் எளிய தத்துவமாகும்..
————————————————————————
வித்யாசாகர்