11. மரணம் குறித்த தங்களின் அகவயப் பார்வையை விளங்குங்களேன்?
மரணத்தோடு பிறப்பவர்கள் நாம். மரணத்தை மறுப்பதற்கில்லை. ஏற்பதற்கும் ஆனதில்லை. இறக்க தயாராக இருத்தல் என்பது ஒரு நிறைவு. அந்த நிறைவை அடைய வாழ்வை சீராக்கிக் கொள்ளுதல் அவசியம். வாழும் தருணத்தை சுயநலமின்றி வாழ்பவருக்கு வாழப் பழகிக் கொள்வோருக்கு மரணம் ஒரு இடைநிறுத்தம் என்பதே என் எண்ணம். எனவே பொதுநல வாதிகள் யாரும் முழுமையாக இறப்பதில்லை மீண்டும் பிறப்பார்கள் என்பதல்ல இதனர்த்தம்.
சுயநலம் பாராதோரின் வாழ்க்கையும் கனவுகளும் அவரோடு முடிவதில்லை, அது இன்னொரு விதையாகவும் முளைத்து விடுகிறது. நல்லதை விதைத்துச் செல்பவருக்கான மரணம் அவரின் உடலை மட்டுமே எரிக்கவோ புதைக்கவோ செய்கிறதேயொழிய அவரின் எண்ணங்களையோ அவரெடுத்த முயற்சிகளையோ அழிப்பதில்லை.
மரணத்தின் பூரணத்துவம் என்பது மீண்டும் பிறப்பது. மீண்டும் மீண்டும் இருப்பது. எக்காலத்தும் நிலைப்பது. அப்படி நிலைக்க வாழுங்காலத்தில் நன்மையை விதைப்போர் மரணத்தை வெல்லத் தக்கோராவர்.
இதலாம் கடந்து மரணம் இன்னொரு முகத்தைக் கொண்டுள்ளது, அது நினைவுகளுள் முற்களாய்ப் பிறக்கும் முகம். ஒரு தட்டில் உண்டு ஒரு படுக்கையில் உறங்கி ஒரு இதயத்துள் ஒன்றாய் நிறைந்து வாழ்வோர் பிரியும் வலி மரணத்தைக் காட்டிலும் கொடிது. அதை மறுப்பதற்கில்லை. எங்கு வந்தோம் எப்படிச் செல்கிறோம் என்றேதுமே அறியாமல் உயிரின்றிப் பிணமாய் கிடக்கும் ஒரு உறவு நட்பானாலென்ன, உடன்பிறந்தாலென்ன, உடன்வாழத்தான் வந்தாலென்ன எதுவாயினும் மரணமென்பது எத்தனை தனக்கான நிறைவோ அத்தனை பிறருக்கான தீரா வலியும்..
————————————————————————
வித்யாசாகர்