10. முதிர்கன்னிகள் குறித்து தாங்கள் அதிகம் சிந்திக்கக் காரணங்கள் என்ன? அவர்களுக்கான மறுவாழ்வு குறித்து தங்கள் கருத்து என்ன?
வீட்டுக்கூரை விரிசல் கண்டுள்ளதெனில் அதை மாற்றி வீட்டைக் காப்பது எனது கடமையில்லையா? பசி குறித்து எழுத முடிகையில், ருசி குறித்துப் பேச முடிகையில், உடல் குறித்து அழுமொரு முகத்தைக் காண அச்சப்பட வேண்டியுள்ளதும் அவசியமில்லையா? வளைய வளைய வளைக்குமொரு சமுதாயத்தால் கண்முன்னே பல இதயங்கள் தனது பிறப்பை எண்ணி அழுகிறதெனில் அதனால் பெருகும் கண்ணீரைத் துடைக்கும் கரமாக எனது எழுத்து நீள்வது அவசியமெனில்; அவர்களைப் பற்றி எழுதுவதையும் எனது கடமைகளில் ஒன்றென்றேக் கருதுகிறேன்.
வாசல்பிடித்து ஏங்கி நிற்கும் பார்வையின் வலியினுடைய கனத்தை காலம் கடந்தும் தாங்க மறுக்கிறேன். பார்த்து பார்த்து வளர்த்த மகள் தனது பாரமாக இளமையைத் தாங்கி நிற்கிறாள் எனில் அதை எண்ணிப் பதறவேண்டியக் கடமை எனக்கும் முதலாவதாக இருப்பதில் பெருங்கருணை யொன்றும் தென்பட்டுவிடவில்லை. அதற்குமாறாக நாம் நம் சமுதாயத்தை இத்தனை இழிவாக மனிதமற்று சமைத்துவைத்துள்ளோமே எனும் கவலையே பெருகி நிற்கிறது. அப்படிப் பெருகிய இடங்களில் முதிர்க்கன்னிகளுக்கான கவிதைகளும் பிறந்திருக்கலாம்..
அப்படிப்பட்ட முதிர்கன்னிகளின் நல்வாழ்விற்க்கான மனமாற்றத்தை இளைஞர்களிடமிருந்தே எதிர்ப்பார்க்கிறேன். இன்றிருக்கும் முதிர்கன்னிகளை இளைஞர்களே மணந்துக் கொள்ளுங்கள் அல்லது இளைஞர்களே வரதட்சணை வாங்காதீர்கள் என்று சொல்லிப் பயனில்லை. அவர்களின் வாழ்வின் தீர்வுகள் நேற்றைய இளைஞர்களின் கைக்குள் அடக்கமகிவிட்டது. அவர்களை வலைக்கிறேன் என்று சொல்லி உடைத்துவிடுவதைக் காட்டிலும் நாளையப் பெற்றோரை மாற்றிவிடுவதன் மூலம் எதிர்காலம் முதிர்கன்னிகளை மறந்துப்போய்விடக் கூடும் என்று எண்ணுகிறேன்.
அதுதவிர, மீண்டும் மீண்டும் எங்கு சுற்றினாலும் மருந்து அன்பிடமிருந்தே கிடைக்கத் துவங்குகிறது. அன்பிருப்பின் கருணை வரும் கருணையுள்ளம் காசு பார்க்காது காசுபணம் பெரிதில்லை மனசு பெரிது, மனது வலிக்காமலிருத்தல் பெரிது என்றுப் புரிந்துவிட்டால் இக்காலத்திலும் சரி எக்காலத்திலும்; திருமணமாகாமல் வலிக்கும் பெண் மனதும் புரிந்துப் போகும் அதைத் தாங்கமுடியாமல் தவிக்கும் பெறோரின் வலியும் புரிந்துப் போகும். எனவே எங்கும் நிறைந்த சம அன்பினை மனிதர்கள் மனதுள் தேக்கி வைத்திருத்தல் ஒரு மறைமுக நர்சூழலை எவ்விடத்தும் ஏற்படுத்தும் என்பதும் எனது நம்பிக்கை..
தவிர, முதிர்கன்னிகள் பெருகுவதற்கு, வரதட்சணை, திருமணம் கட்டித் தர வசதியின்மை, பிற குலம் பற்றிய இழிவானப் பார்வை, தன் மகள் வாழாவிட்டாலென்ன என் கௌரவம் முக்கியம் எனும் மனப்போக்கு, இதெல்லாம் கடந்து வீட்டில் பெண் மரம்போல வளர்ந்திருக்க ஊர்சுற்றும் மாடுபோல பலர் குடித்துக்கொண்டும் வெட்டிக் கதை பேசிக்கொண்டும் ஊர்வாயைப் பார்த்து நடந்தும் தெரிகிறார்கள். அவர்களுக்கெல்லாம் தனது மகள் பற்றிய கவலையும் ஒரு பொதுவான பெண்மகள் குறித்த அவஸ்தையும் மனதுருத்த வேண்டும்.
சில வீடுகளில் ஆண்களும் சரி பெண்களும் சரி ஏதோ ஒரு குறிக்கோளினைக் கையிலெடுத்துக் கொண்டு அதை செய்துமுடிக்கும்வரை ஓயமாட்டேன், திருமணமெல்லாம் எனது லட்சியம் நிறைவேறியப் பின்புதான், நான் ஒரு தகுதிக்கு வந்தப்பிறகே எனக்கு திருமணம் நடக்கும் என்றெல்லாம் இருக்கிறார்கள். என்னைக் கேட்டால் திருமணம் என்பது ஒரு சாபம்மெனும் எண்ணம் முதலில் மாறவேண்டும்.
திருமணம் என்பது’ தெருவில் செருப்பின்றி நடக்கும் ஒருவனுக்கு செருப்பாக நடக்க தனது கைகளை நீட்டும் ஒருத்தியை, ஒரு துணையை ஒரு பலத்தை அடைவதற்கு சமமென்றுப் புரியவேண்டும்.
வாழ்க்கைத்துணை என்பது சாதாரண உறவல்ல. கொஞ்சம் தாய்மை இன்னும் கொஞ்சம் தந்தையின் பற்று, சகோதரர்களின் பலம், சகோதரிகளின் அன்பு, தோழியின் சினுங்கள், காதலியின் கோபம், குழந்தையின் சிநேகம், மூத்தோரின் அரவணைப்பு, கோவிலின் பக்தி, கொஞ்சம் மிருகம், நிறைய மனிதமென கேட்கக்கேட்க கிடைக்கத்தகும் வாழ்வின்’ வெற்றியின்’ மகிழ்ச்சியின்’ ஆரவாரத்தின்’ அடிநாதமும் உச்சமும் ஆகும். அதை தவிர்த்தலில் லாபமென்ன? எங்கோ திருமணம் முடிந்து வாழவேண்டிய ஒரு பெண்ணோ ஆணோ தனித்து தாகத்தில் கிடப்பதைத் தவிர வேறு பெரிய நிகழ்வொன்றும் நிகழப் போவதில்லை. ஆனால் –
பிரம்மச்சரியம் என்பது வேறு. அது தோட்டத்திலிருந்துக் கொண்டு கணியுண்ணாதவருக்கின்னும் எளிதாகக் கைவசப் பட்டுவிடுகிறது..
————————————————————————
வித்யாசாகர்