9. சாதியை இன்றைய அரசியல் கட்சிகள் வளர்தெடுப்பதாகத் தோன்றுகிறது… சாதியின் நன்மை, தீமை என்ன?
சாதியின் நன்மை என்று பெரிதாக சொல்வதற்கில்லை. இந்தத் தொழிலைச் சார்ந்தவர் இவரென்பதைத் தான் இந்தச் சாதி குறிப்பிட முற்படுகிறது எனில், அதாவது இவர் இந்த வகையினர், இவரை இங்ஙனம் அணுகலாம், இவர்கள் வாழ்க்கைமுறை பெசுமுறை நடத்தைகள் இங்ஙனம் அவர்களின் வழக்கம் சார்ந்து தொழில்முறை சார்ந்து இருக்கும் என்பதைத் தான் சாதி குறிக்குமெனில், அது மீண்டும் பின்னாளில் அவரவர் திறமைக்கொப்ப மற்றும் வாழ்வாதார மாற்றத்திற்கிணங்க மாறியும் போகுமெனில் அதில் ஒருவரைப் புரிந்து அவரின் நன்மைக்கு ஏற்பவோ அதோடு அவரின் மனம் கோணாது அவருடன் புழங்கவோ மட்டும் இந்தப் பிரிவுமுறை அதாவது ஜாதிமுறை உதவலாம்.
மற்றபடி, இதன் புரிந்துணர்வைக் கூட சரிவர கொள்ளாது, மாட்டுத் தொட்டியில் புண்ணாக்கை வைத்தாலும் ஓடி, கழிவுநீரை கொட்டினாலும் ஓடி எது நமக்குக் கொடுக்கப் படுகிறதேன்றே தெளிவுகொள்ள இயலாமல் முண்டியடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டுப் போகும் கால்நடைகளைப் போல நடந்துக் கொண்டு, தொட்டிக்கு அருகே சென்றதுமே, ச்சே இவண் வேறென்னவோ கொடுத்துள்ளானே என்று மூக்கைக் கூட நுழைக்காமல் வந்தவேகத்திலேயே தூரம் விலகி நிற்கும் மாடுகளுக்கு இணைத்த திறன் கூட இல்லாது அரசியல்வாதி கைகாட்டும் இடமெல்லாம் விழுந்து வீணாய்ப் போகும் பள்ளங்களாகவே ஜாதி இருப்பதும். நம் கண்களை தனது வெட்டி கௌரவம் கொண்டு மூட சாதிகளைப் பயன்படுத்திக் கொள்வதும், ஒரு இயலாமைக் கடந்து எங்களால் இனைந்து அனுசரித்து வாழ்ந்துக்கொள்ள முடியும் என்று கெஞ்சும் மனங்களைக் கூட சாதிக் கத்தி வைத்து அறுப்பதும், எல்லாவற்றிற்கும் மேலாக, அன்று இந்த சாதி எனில் அவர் இதைச் செய்பவராகத் தான் இருந்தார், அன்று மனிதரை கீழுள்ளோர் மேலுல்லோர் என்று மனிதம் மழுங்கி கத்தி கொண்டு அறுத்து வைத்திருந்தோம் மனிதர்களை, இன்று அதையெல்லாம் கடந்துவிட்டோம், இன்று சாதி வெறும் சொல்லிக்கொள்ளவும், மறக்கையில் நினைவுபடுத்திக் கொள்ளவுமே இருக்கிறது. பின்னர் அதைக் கொண்டு நம்மால் மனங்களையோ மனிதர்களையோ துளைக்க முடியுமெனில் சாதியை தொலைத்துவிட்டுப் போ; அது ஒரு வெறி, அதொரு கண்மூடித் தனம்.
குலமறிந்து பிச்சையெடு; கோத்திரமறிந்துப் பெண் கட்டு” என்பார்கள் அதை நான் ஏற்கிறேன். எனக்கு கடவுளில் பாகுபாடில்லை. கடவுள் பற்றிய எல்லாம் தேடலும் ஒரேயிடத்திற்கான பாதைகள் தான். ஆனால் என்னைப் போல் என் குடும்பமோ எனது சுற்றமோ இந்த உலகோ முற்றிலுமாய் அந்நேர மாற்றத்தை ஏற்றோ மாற்றத்தின் அவசியத்தைப் புரிந்தோ இருப்பதில் யார் மனமும் நோகாது இன்பமடையத் தயாராகயில்லை. இன்றைய வாழ்க்கை முறையில் மகிழ்ச்சி என்பதே உறவுகளின் கூடல் தான், உறவுகளின் அரவணைப்பு, அவர்களின் ஆம் இல்லை தான். ஆக அந்த உறவுகளின் கூடு இருக்கிறதில்லையா அதில் மகிழ்ச்சி என்பதே மிக சாதாரண சின்ன சின்ன விஷயங்களாகவேயுள்ளன. உன்னைப் பார்த்து அழகு என்பதும், எனக்கு உன்னை மிகப் பிடிக்கும் என்பது, உனக்காக வாங்கினேன் என்பது உனக்காக வாழ்கிறேன் என்பதும், ஆக கூட்டாகப் பகிர்ந்து புரிந்து விட்டுக்கொடுத்து விட்டு விலகி வாழ்வதில் ஒரு ஒற்றுமை ஏற்பட்டு விடுகிறது. அன்பு மனதிற்குள் ஆழமாக முளைவிட்டுப் பதிகிறது. அப்படி இங்குமங்குமாய் விட்டுக்கொடுத்து இணங்கி நெருங்கியிருக்க அந்த பிடித்தல்கள், எதிர்பார்ப்புகள், நாக்கு ருசி, உடுத்தும் முறை, புழங்கும் வகை கொஞ்சமேனும் ஒத்துப் போக வேண்டியுள்ளது. எங்கனா வெளிநாட்டிற்கு போறோம், ஒரு இந்தியனைக் கண்டால், ஒ என் நாட்டுக் காரனென்று எண்ணவில்லையா ? ஒரு அவசர வேலை சம்மந்தமாக வடநாட்டிற்குச் செல்கிறோம், அங்கு பேசும் மொழி புரியவில்லை, வாழும் முறையில் ஏற்பில்லை, உண்ணும உணவில் உடன்படவே முடியவில்லை அப்போது அங்கே நம் முறைகளோடு வாழுமொரு தமிழரைக் கண்டால் ஒரு பெருமூச்சு வெளிவருகிறது இல்லையா அப்படி, என் ஊரில் இருந்து அடுத்த ஊர் செல்கையில் அங்கே தன்னுடைய ஊர் காறனைக் கண்டதும் கைகுலுக்கும் மனதின் சந்தோசத்தைப் போல, ஒரு எங்கோ பிறக்கும் இருவர் சேர்ந்து வாழ இணை பொருத்தம் பார்க்கையில் பார்க்கலாம், இவர் எந்த வழிபாட்டினைக் கொண்டவர், எந்த வாழ்க்கைமுறையக் கொண்டவர், எந்த மொழியைச் சார்ந்தவர் என்று சிலதை வாழ்க்கைக்கு உதவுமெனில் பார்க்கலாம். அதுபோல் உன்னுகையில் பார்க்கலாம்; எது நமக்குப் பொருந்தும் வெறும் தேங்காய் போட்டால் பிடிக்குமா? அல்லது மிளகாய் மட்டும் வைத்து அரைத்தால் ஆச்சா? எண்ணெயில் கடுகெண்ணெய் ஊற்றி சமைத்தால் உள்ளிறங்குமா? இறங்காதெனில் இதுபோன்ற உண்ணுமிடத்தில் வகைகளைப் பார்க்கலாம்.
குலமறிந்து பிச்சையெடு; கோத்திரமறிந்துப் பெண் கட்டு” என்பதை நான் இந்தளவில் போதுமானதகப் பார்க்கிறேன். அந்தளவில் மட்டுமே அந்தக் கருத்தோடு ஒத்துப் போகிறேன். அதே நேரம் நாளை என் மகன் வந்து ‘அப்பா நான் ஒரு இஸ்லாமியப் பெண்ணை விரும்புகிறேன், அவள் அரபு மொழியைச் சார்ந்தவள், வேறு நாட்டுப் பெண், ஆனால் புரிந்து வாழ்வோம், இங்ஙனம் எங்கள் வாழ்க்கையை நலமாக அமைத்துக் கொள்வோம். இதனால் எதிர்காலத்தில் எங்கள் குடும்பம் தளர்ந்துப் போகாது நம்பிக்கையோடு கைகோர்கிறோம் என்று சொல்வானெனில்; அதில் இடைமறித்து நெஞ்சு நிமிர்தவும் எனக்கு எந்த சாதி வெறியும் அவசியமும் கூட இல்லை.
எனது அண்ணன் காதலித்தார், திருமணம் செய்து வைத்தோம், எனது இரண்டு தம்பிகள் காதலித்தனர் வீட்டார் பேசி நாங்களே திருமணம் செய்து வைத்தோம், இதுவரை எங்களுக்கு எங்களின் வீட்டு குலவிலக்குகள் பிறந்த சாதி என்னவென்று சரிவரத் தெரியாது. காரணம் அது கேட்கும் பொருளாக எங்களுக்கு மத்தியில் இல்லை.
ஆக, இப்படியொரு வெகு சாதாரண புரிந்துணர்வைக் கொள்ளவேண்டிய இடத்தில் சாதியை, நஞ்சாக ஊற்றுவதும், அமிலகமாகக் கொட்டி எரிப்பதும், கத்திகளாகக் கூர்தீட்டுவதும் முட்டாள்களின் வேலையேயொழிய தெளிந்தவர்களின் தெரிவு அல்ல சாதிவெறி.
குறிப்பாக, இன்றைய நம் நாட்டின் அரசியல் போக்கைப் பார்த்தால், நாமெல்லாம் தன் கையாலேயே தன் கழுத்தை அறுத்துக் கொண்டு செத்துவிடலாம். ஆம் அத்தனைக் கேவலமாக நமது அரசியல் வாதிகளை செயல்படுத்துகிறோம் நாம். அரசியல்வாதி எனில் யார் ? நாம் உருவாக்கியவர்கள், நம்மால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். பிறகு நாமே அவர்களைச் சரியில்லை என்று சொல்லி பயனில்லை, அதனால் தான் நம்மைநாமே அருத்துக்கொள்ள வேண்டும் என்றேன்.
அல்லது அவர்களின் கொட்டத்தை அறுக்கவேண்டும். அதற்கு அரசியல் அறிவு வேண்டும். அரசியலை ஒரு நாட்டின் அதிமுக்கியப் பொறுப்பாகக் கருதி இளைஞர்களுக்குப் போதிக்கவேண்டும். குழந்தை வளரும்போதே கொஞ்சம் மருத்துவம், கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் எந்திரவியல், கொஞ்சம் கலைகள், கொஞ்சம் தற்காப்புக் கலைகள், கொஞ்சம் வீரம், கொஞ்சம் காதல், இவைகளோடு கொஞ்சம் அரசியல் அறிவையும் புகட்டவேண்டும்.
அரசியல் தெரியாததனால் தான் ஆளக் கேட்பவனின் கையிலெல்லாம் கோடாரியைக் கொடுத்துவிட்டு வெட்டுவதற்குத் கழுத்தையையும் காட்டிநிற்கிறோம். ஒரு நாடு வளம்பெற வேண்டும் எனில் அந்நாட்டில் காவலாளிகள் சரியாக இருக்கவேண்டும். காவலாளிகள் பொறுப்பாக இருக்க அரசியல் சட்டம் அத்தனை முனைப்பாக இருத்தல் வேண்டும். அரசியல்சட்டம் திருத்தமாக இயற்றப் பட்டிருக்குமெனில் அதைவைத்து ஆளும் அரசியல்வாதிகளும் மனிதம் மிக்கவர்களாக, நாடு பற்றிய அக்கறை உள்ளவர்களாக, மக்களின் நன்மை குறித்து ஆலோசிப்பவர்களாக, சுயநல போதையறுக்கப் பட்டவர்களாக இருத்தல் எவ்ண்டும். அப்படி இருக்கிறார்களா? நம் அரசியல் வாதிகள்? பிறகு அவர்களுக்கு சாதி அக்கறை மட்டும் வருகிறது எனில் அது எங்கிருந்து வரும்? பிறகு அவர்களின் சுயநல வெறிக்கு கடித்துத் துப்ப நமது தலைகளும், தலையைக் கிள்ளியெறிய வளர்க்கும் அழுக்குபிடித்த நகங்களாக சாதியும் இருக்குமெனில் அதை உடனே வெட்டியெறிய வேண்டியது நம் தலையாயாக் கடமைகளில் ஒன்று என்று புரிவோம்.
சாதியால் வீடு சிரிக்கும் எனில் அதை பேருக்குப் பின்னல்ல முன்னரே கூடப் போட்டுக் கொள்வோம். அதே வீடு சாதியால் ரெண்டு படுமெனில் சாதியொழிப்போம் வீடு சிரிக்கட்டும்..
————————————————————————
வித்யாசாகர்