8. காதலில் விட்டுக்கொடுத்துவிட்டு பிரிவதும் பின்னர் வருந்தவதும் ஏற்புடையதா?
ஏற்க இலகுவானதல்ல. விட்டுக்கொடுப்பது என்பது அப்போதைய சூழலில் ஏற்படும் புரிந்துணர்விற்கு ஏற்ப தனது ஆசைகளை எதிர்பார்ப்புக்களை கனவுகளை விட்டுதறிவிடுவது. பின்னர் காதலை எண்ணி வருந்துவது என்பது இயல்பிற்குட்பட்டது. அடிபட்டாலென்ன அல்லது தானே அடித்துக் கொண்டாலென்ன வலிகொண்ட மனசு வருந்தத் தானே செய்யும்..?
ஆனால் இதற்கொரு பொதுத் தீர்வினை நல்லதொரு நட்பு நிறையும் சூழலாலோ அல்லது மனதைப் புரிந்து நமை நல்வழிப்படுத்தும் குடும்பத்து உறவுகலாளோ தர இயலும்.
முதலில் எந்த நமது காரியத்திலும் உள்ளடக்கமாக உள்ள காரணிகளைப் புரிந்து அதன் விரிவுத் தன்மைகளை ஆராயவேண்டும். ஒரு செயல் மனதைப் பாதிக்கிறது எனில் ஏன் எப்படி எதனால் எனும் ம்ப்ப்லாதரக் கேள்விகளைத் தொடுத்து பதில்கள் நியாயத்தின் புறம் இருக்கையில் பிறகு வருத்தப்படுவது தவறென உணர்கையில் வருத்தம் தானே விலக வாய்ப்புள்ளது.
ஆயினும், குறிப்பாக, காதல் போன்ற விவகாரங்களில் இந்த விட்டுக்கொடுத்தல் என்பது ஒரு கழிவிரக்கத்தின் முதலெழுத்தாகவும் இருப்பதை இளைஞர்கள் தவிர்க்கவேண்டும். கல்லூரியின் வாசலில் தாடியோடு வரவும், காதல் தோல்வியில் எழுதப்படும் கவிதைகளை மெச்சுவதாலும் அதன் நீட்சியை விரும்பும் மனசு காதலின் எதிர்கால வலி தெரியாமல் போலித்தனமான விட்டுக்கொடுத்தல்களுக்கு ஆட்பட்டு விடுகிறது. ஏதோ நானும் காதலிக்கிறேன் என்று காதலிப்பதும், பின் வீட்டிற்காக விட்டுக்கொடுத்து மகாத்மா ஆவதுமென இதில் கழிவிரக்க வகைகள் நீள்கின்றன.
முதலில் விட்டுக்கொடுத்தல் என்பது புரிய காதல் புரியவேண்டும். காதலின் ஆக்கப்பூர்வமான வலிமையினை எடுத்துரைக்கும் பாங்கில் பெற்றோரின் அரவணைப்பு எடுத்துரைப்பு என எல்லாம் சரிவர இருக்கவேண்டும். அதையெல்லாம் மீறி காதலில் விட்டுக்கொடுப்பதும் நேரும் எனில்; வருத்தமும் இருக்கத் தான் செய்யும். சாதாரண சதைகளாலான வலிக்கும் மனசுதான் காதளுள் புதைந்துப் போகிறது; பிறகேன் வலிக்கும் மனதைக் கேள்விகளால் துளைப்பானேன், ஆதரவாய் கரம் நீட்டுவோம்’ இளைஞர்களின் வலிமையால் வாழ்வின் துயரங்களை எளிதில் போக்குவோம்..
————————————————————————
வித்யாசாகர்