எனக்கு அப்பாயில்லை..
எல்லோரையும் போல நான்
அப்பாவின் தோளில்
அடிக்கடி சாய்ந்துக்கொண்டதில்லை..
சாப்பிடும்போது ஒரு உருண்டை சோறூட்டவோ
சாய்ந்தத் தோளில் ஏறி விளையாடவோ நான்
அப்பாவை தேடவில்லை; மனசு வலிக்கையில்
அப்பாவையுமெண்ணித்தான் நோகிறது மனசு..
அப்பா பாசத்தில் வாசம் மிக்கவர்
பார்க்க அழகும்
பறிக்க எளிதாகவும் கிடைப்பவர்
அதனால்தானோ என்னவோ – சொற்பத்தில்
வாடியும் போனார்..
அப்பா இன்றி எழுவதும்
அப்பா இன்றி உறங்குவதும்
கண்ணீரின் மீதுறங்கும் தூக்கமென்று
என் அப்பாவைத் தேடுமென்
கனவுகளுக்கேத் தெரியும்;
யாரேனும் அடித்தால் அப்பாவிடம் சொல்லவும்,
கிழிந்தச் சட்டையை கேட்காமலே தைத்துத் தரவும்,
தின்றப் பொருளுக்கு இனிப்பு சேர்க்கவும்
அப்பாவால் தான் முடியுமென்று நம்பி – நிறைய
இனிப்பு நாட்களை –
அப்பாவிற்காகவே சேர்த்துவைத்திருக்கிறேன்..
யாரையேனும் நான் திட்டினால்
அப்பா திட்டக்கூடாது என்பார்
யாரேனும் ஏதேனும் கேட்கையில்
பாவம் கொடுத்துவிடு என்பார்
சோகத்தை சிரிப்பால் அழிக்கச் சொல்லித்தந்த அப்பா
கண்ணீரைத் தந்ததும்தான் வாழ்வின்பாடம்;
என்றாலும் நான்’
புத்தகம் புதிதாக வாங்குகையில்
நுகர்ந்துவிட்டு மூடிக்கொண்ட நாட்களுள்,
புதுச் சட்டைக்கு மஞ்சள் வைத்து போட்டுவிட்ட
நினைவினுள் –
அப்பாவை பத்திரமாக வைத்திருக்கிறேன்;
காக்கா கடி கடித்துக் கொண்டு
அப்பா வாயில் போட்ட தேன்மிட்டாயைப் போல
எனக்குள் இருக்கும்
அப்பாவின் நினைப்புகள்
அத்தனை இனிப்பானது..
காகம் குத்தும்
குயில் கூவும்
காற்று அடிக்கும்
வானொலியில் செய்தி வரும்
அவருக்குப் பிடித்த பாட்டுச் சப்தம் கேட்கும்
எது நடந்தாலும் எனக்கு
அப்பாவின் நினைவு வரும்;
அப்பாயின்றி நானில்லை
அப்பாவின் நினைவின்றி நான் இருந்ததேயில்லை..
வானத்தைக் காட்டி
மேகத்தினுள் குதிரைப் பார் என்றதும்,
தெருவில் மீன் வாங்குகையில்
பாவம் அவளுக்கு வெய்யில் நோவுமென்று
ஒரு ரூபாய் கூட கொடுத்ததும்,
அம்மாவைக் கொஞ்சுகையில் அவளென்
முதல் குழந்தையென்றுச் சொல்லியதும்,
பள்ளிக்கட்டணம் செலுத்தவேண்டி அவர்
இரவுபகல் உழைத்ததும்,
சாப்பிடுகையில் –
பிள்ளைக்குக் கொடேண்டி என்றுச்சொல்லி
அம்மா அப்புறம் திரும்புகையில்
ஒரு அப்பளமெடுத்து நான் சாப்பிடும் தட்டில் போட்டு
ம்ம்.. சாப்பிடு என்று அவர் சைகைக் காட்டியதும்,
சக்கரைப் பொங்கல் வைக்கையில்
முந்திரியை மட்டுமெடுத்து எனக்கு ஊட்டிச்
சிரித்த அவரது சிரிப்பும்
நான் உள்ளத்துள் கட்டியக் கோவிலில் எனது
தெய்வம் சிரித்தச் சிரிப்பப்பா
எனது தெய்வம் சிரித்தச் சிரிப்பு
———————————————————————————
வித்யாசாகர்
அப்பாவின் நினைவூட்டல் – என்றும்
மறக்க இயலாது!
சிறந்த வரிகளில்
சிந்தனை மூச்சு!
LikeLike