1
கணினி வாசத்தில்
காய்கறி விற்றாள்
கைகளில் ஒரு ஊசி
கூடுதலாய் போடப்பட்டது..
2
சில்லறை கொடுத்தேன்
கைதொட்டு வாங்கினாள்
காதல் மின்சாரம் தாக்கியதில்
கண்கள் வெளிச்சமானது..
3
நாங்கள்
நடந்துவரும் தெரு அதில்
காதலைச் சொன்னது; சுவரொட்டி..
4
ஜல் ஜல் ஜல்..
ஜல் ஜல் ஜல்..
என் உறக்கத்தை
மிதித்துக்கொண்டே நடந்தாள்; கனவில்..
5
மாதத்தில்
ஐந்தாறு நாட்கள்
அருகே செல்லவில்லை அவள்
வருத்தப்பட்டது சாமி;
மடியவேயில்லை மூடதனம்!
6
சேரியில் சிறுநீர் கழிக்கும்
சிறுவனுக்குத் தெரியும்
தன்மேல் திணிக்கப்பட்டும்
அடிமைத்தனத்தையும்
ஜாதியின் கொடூர முகத்தையும்..
7
மாத்திரைகள்
கொட்டிவைக்கப்படும்
டப்பாக்களில்
எண்ணிவைக்கப் பட்டுள்ளது
மனிதரின் வாழ்வும்..
8
அதென்ன
அத்தனைக் கோபம்
காதலின்மேல்;
சோற்றில் விசமிட்டாலாம் தாய்..
9
நிர்வாணத்தைக் கண்டால்
அப்படியொரு நடுக்கம்
காமம் படிக்காத மேதைகளுக்கு!!
10
சோறு போட மனசுண்டு
உண்ண வயிறுண்டு
கொடுப்பதையும் பெறுவதையும்
இன்னும் படிக்காதவர்கள் நாம்!
11
சிட்டெறும்புகள்
மிதிபடும் பாதங்களில்
மண் ஒட்டியது;
ஒட்டவேயில்லை அதன் உயிரின் ஈரம்..
12
இலைகள் உதிர்ந்தது
கூட்டுகிறாள்
அவளின் வியர்வையையும்..
13
பூங்காவினுள்
யாரார் பிள்ளைகளோ விளையாடினர்
அவள் வயிற்றில் பாவம்
பசி மட்டுமேயிருந்தது..
14
தெருவோரம்
தண்ணீர் தீர்ந்த புட்டிகள்
எட்டி எட்டி உதைத்தன
தாகமெடுத்தப் பிள்ளைகள்..
15
வீசும் காற்றோடுப் பறந்தன
சில சிட்டுக்குருவிகளும்
சில கவிதைத் தாள்களும்..
16
தபால்பெட்டிக்குள்
கைவிட்டு விட்டுப் பார்க்கிறான் சிறுவன்
அம்மாயில்லை அவனுக்குக் கடிதமெழுத..
17
செருப்புக் கடையோரம்
நடந்தன கால்கள்
புண்பட்டு புண்பட்டு..
18
ஐஸ்க்ரீம் பார்
குச்சிகளை மட்டுமே சேகரித்தன
சில குழந்தைகள்..
19
துளிர் இலை ஆடியது..
சருகு ஆடியது..
காற்றிடம் பாகுபாடில்லை..
20
கொசுவினை
தட்டிடத் தெரியவில்லை குழந்தைக்கு
கொசுவிற்கும் தெரியவில்லை அது
குழந்தையென்று!
21
விளையாடும் பிள்ளைகள்
சேர்ந்து எட்டி எட்டி உதைத்தன
பந்தையும்
மதத்தையும்..
22
சிரிக்கிறாள்
பார்க்கிறாள்
மறுக்கிறாள்
மறுக்கமுடியவில்லை இறக்கிறேன்..
———————————————
வித்யாசாகர்
வணக்கம்
அண்ணா
மனதை கவர்ந்த கவிதை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLike
மிக்க நன்றிப்பா…
நீங்களெல்லாம் வருவதில் மகிழ்ந்து
எழுத்துக்களாய்ப் பூக்கிறேன் வேறென்ன..
வணக்கமும் அன்பும் ரூபன்..
LikeLike