சாவி திறக்கும் சிறுதுவாரத்தின் வழியே
தெரிகிறதந்த உலகம்;
உலகை ஒரு கண்மூடிக்கொண்டுப் பார்க்கிறேன்
அங்கே தமிழை
ஆங்கிலம் கலந்துப் பேசுவோரையெல்லாம்
முதலாய்ச் சபிக்கிறேன்,
சபித்த மனம் சற்று நடுநடுங்க –
உணர்வூசி வைத்து
இதையமெங்கும் குத்துகிறேன்,
உலகநடப்புகள் சதை அற சதை அற எனைக் கிழித்து
என் முகத்தில் காரி உமிழ்கிறது’
மானங்கெட்ட மனிதனே என்கிறது’
சுயநலவாதி சாவேன்’ வாழ்ந்தென்ன சாதித்தாய் என்கிறது;
ரத்தம் சொறியச் சொறிய –
நெடிகூடிய வார்த்தைகளைப் பொறுக்கிக் கொண்டு
எனக்குள்ளிருக்கும்
கொஞ்சமனிதத்தின் மெச்சுதலில்
மார்பு புடைக்கிறேன்;
“த்தூ,, அடிமை நாயே” என்றொரு குரல்
யாரது என்று கேட்பதற்குள் –
தண்ணீர் மறுப்பவனைத் தட்டிக்கேட்கமுடியாத
அசுரக் கைகள்
அரசின் சாய்ந்தத் தராசுக் கொண்டு
தலையில் அடிக்கிறது
அடியைத் தாளாது விளக்கம் கேட்டால்
தீவிரவாதி என்கிறது சுற்றம்,
யார் நானா ?
தமிழரா தீவிரவாதி என்பதற்குள்
“புறத்துப் போய்க்கோ” என்று நெட்டித்
தள்ளியதின்னொரு கை,
சமாளித்து எழுவதற்குள்
ஜாதியை ஒரு புறமும்
மதத்தையொரு புறமும் கொண்டுவந்து –
எனது முதுகைப் பார்த்துக் குத்தியது என்னினம்,
உரக்க’ அப்போதும் கத்துகிறேன் –
“நான் யார் தெரியுமா(?)” என்கிறேன்
ஹ.. ஹ என்று.. எல்லோரும் எனைச் சுற்றி நின்று
கத்தியவாறே சிரிக்கிறார்கள்,
அவர்களின் வாயையடைக்க
எனக்கு இன்னொரு விதை தேவைப்பட்டது
விதைத் தேடி அலைகிறேன்,
நான் இதோ.. நான் இதோ.. என்கிறார்கள் யார் யாரோ..
யாரைக் கேட்டாலும் மந்திரி
யார் வேண்டுமானாலும் ராஜா
நினைத்தவனெல்லாம் தலைவன்
எது வேண்டுமோ கிடைக்கும் லஞ்சமிருக்கா (?)
என்கிறார்கள்;
லஞ்சமா (?)!!
லஞ்சம் தீதென்கிறேன்
நியாயம் பேசினால் ராஜா மந்திரியெல்லாம்
எப்படி வரும் ?
அரசியலில் எப்படி நிலைப்பது ?
போ’ களவு, பொய், பொறாமையெல்லாம்
கற்று வா என்கிறார்கள்;
இல்லையில்லை நீ
தவறாகப் பேசுகிறாய்
பொய் தீது; பொறாமை விஷம்
களவு செய்பவன் தலைவனானால்
தேசம் மதிப்பாரற்றுப் போகும்’ எனக்கு அதலாம்
வேண்டாம்
ஒழுக்கம் போதும்
உயர்ந்த தேசதிற்கு வழி சமைக்கும்
ஒரு மனிதர் போதுமென்கிறேன்,
அந்தச் சாவிதிறக்கும்
சிறுதுவாரத்தின் வழியேயொரு
மோதிரக் கைவந்து
என் முகத்தில் ஓங்கிக் குத்துகிறது,
உனக்கு ராஜா இல்லை
மந்திரியுமில்லை
நாசமாகப் போ’ என்கிறது அந்தக் கை;
எனக்கு ராஜாக்கள் வேண்டாம்
திருத்தம் போதாத மந்திரிகள் வேண்டாம்
இனி – விதைகளே தேவையென்றேன்..,
விதைகளிட்டால் விளைவதுபோல் பெருகும்
என் இளைஞர்கள் வேண்டுமென்றேன்,
அவர்களுக்கு அதலாம் கேட்டிருக்காது
நானும் கேட்பதை நிறுத்துவதாயில்லை
எனக்கு விதைகளே வேண்டும்;
இன்னுமொரு விதை
இன்னுமொரு விதையென
எனக்கு எனை –
நானாக அறிவிக்கும் அந்தவொரு விதை வேண்டும்
எனது இனத்தை யாரென்று உணர்துமந்த
விதை வேண்டும்;
அந்த விதை ‘புரட்சியோ
‘மாற்றமோ
‘புதுமையோ
எதனால் வேண்டுமோ கிடைக்கட்டும்,
அது கிடைத்தப் பின்’ எனை யாரும்
அடிமையென்று சொல்லாதிருந்தால் அதுப் போதும்..
—————————————————–
வித்யாசாகர்