குடிப்பதை புகைப்பதைப்போல
சுவைப்பதும் ஒருவித போதை..
நாக்கிற்கு அடிமையாகும்
உடம்பும் மனசு(ம்)தான்
தோல்வியையும்
ஒழுக்கமின்மையையும் கூட
சிறியதாகவே எண்ணிக்கொள்கிறது..
நெஞ்சுக்குழிவரை சுவைமிகும் உணவு
அளவை மீறினால்
நஞ்சாகி வயிற்றையடைப்பதை
சுவைவிரும்பும் நாக்கோடுச் சேர்ந்து
அறிவுகூட அசைபோடத்தான் செய்கிறது..
பசியைப் போக்கவே சோறுண்ணத்துவங்கி
மனிதரைத் திண்ணவும்
பழகிவிட்ட மனுதனுக்கு
இன்னும் கூடப் புரியவில்லை,
அவனைக் கொல்லும் கோடாரியும்
அந்த நாக்குசுவைதானென்று..
விட்டுக்கொடுப்பதை தின்றதும்
உணவுதான்,
விசால மனதைக் கொன்றதும்
உணவுதான்,
கிடைக்கவில்லையே எனுமிடத்தில்
உழைப்பிற்கு பதிலாக –
பொறாமையையும் வஞ்சத்தையும்
கலவினையும் சேர்த்துக் கற்பித்து – நமை
உயிரோடு சோற்றில் மறைத்துவிட்டதுமிந்த
உணவுதான்,
உணவின் அதி-ருசிதானென்பது – ஓட்ஸ் கஞ்சிக்கும்
ஒரு தட்டு வெந்த அரிசிக்குமே தெரியும்;
உண்மையில்,
மனிதம் சுருங்கியும்
தொப்பைப் பெருத்தும் வாழும் காலத்தை
கோழிவிரல் பக்கோடாவும்
பாஸ்ட்புட் உணவுகளையும் கேட்டால்
கூசாமல் சொல்லும் – இது நமக்குப்
போறாதக் காலமென்று..
வாட்டார் பாட்டில் வாட்டர்க் கேனாகி
கிணற்றை மூடிவிட்டு
குழாயை அடைத்தப்போதுதான்
நமக்கான பள்ளத்தை
நாமே தோண்டினோமென்று – கூண்டில் சிக்கிய
மீன்கள் அறிந்துக்கொண்டது; நமக்குத்தான் புரியவில்லை..
ஆறுகளை தொலைத்து
ஏரிகளை லஞ்சத்தில் மூடியதையும்
சீனா பொருட்களை வாங்கிக் கொண்டு
சிறுதொழில்களை விட்டொழித்தப் போதும்
பணம் வந்தது பசி போனது
அதைப் பற்றிக் கவலையில்லை – ஆனால்
மருந்து வயிற்றை தின்றுத் தின்று
மரணத்தை வாந்தியாக எடுத்தப்போது
மனிதன் செத்திருந்தான் – ஆறறிவில்
விலங்குகளாய் மட்டுமே நாம்
பேருக்கு நடமாடினோம்;
இன்று பாருங்கள் –
எங்கும் குளமில்லை
காய்கறி பறிக்கத் தோட்டமில்லை
வெந்ததைப் பகிர்ந்துண்ண மனசுமில்லை
மதுக்களால் விடியும் பொழுது
மெல்ல மெல்ல சாய்ந்துவருகையில்
ஆல்கஹால் வாசத்தை மறைப்பதற்கு
மீன்செதில் குருமாவும்
கோழிநகம் பக்கோடாவும் தேவைப்படுகிறது,
செய்யுங்கள் செய்யுங்கள்
இன்னும் எத்தனைக் காலத்திற்கு
இப்படிச் செய்வீர்கள் ?
ஓடுங்கள் ஓடுங்கள்’
ஓடும்போது –
சற்றுத் திரும்பிப் பாருங்கள் –
நாளை; கூட இருந்தவர் சிலரின் –
எண்ணிக்கை குறைந்துப் போகலாம்,
மனிதன் கறி – கூறொன்றிற்கு
நாலுரூபாய்க் கூடவிற்கலாம்..,
நாக்கு ருசியில் மனிதம்
தழைய தழைய விழுந்து
பச்சைக் கறிபோல் கசந்துப் போகலாம்..
நமக்கென்ன ?!!
அதலாம் மனிதரின் பிரச்சனை,
உன்னையோ என்னையோ யாரேனும் கேட்டால்
நமக்கொன்றும் தெரியாதென்றுச் சொல்லிவிட்டு
வாருங்கள் நாம் –
நரிக்கரி பிரியாணி செய்ய
கூகுளில்
சமைப்பதெப்படி தேடுவோம்;
இறக்கும் குழந்தையை தின்போரைப்
பற்றி இடையே படித்தால் –
வரிசையில் சென்றுநிற்க வழிகேட்டு
வெளிநாட்டிற்குப் போவோம்;
நாடு இப்போதைக்கு நம்மால்
நாசமாகவே போகட்டும்….
————————————————————
வித்யாசாகர்