“போ.. போ.. போ.. ஓடு ஓடு.. அதோ அந்தப்பக்கம் போறா பார் போ..”
“மச்சான் ஆமாண்டா அதோ போறா தோள் பை மாட்டிக்குனு ஒருத்தி போறா பார் அவளா?”
“ஆமாண்டா; அவளே தான், வெள்ளைநிற பை நீள சுடி..”
“சரி அப்போ நீ அந்தப்பக்கம் வா நான் இப்படி வரேன்”
“இல்லைடா அவ நேரா தான் போவா, போய் அந்த கடைப் பின்னால கீழ இறங்கி சந்தைக்கு வருவா. சந்தை தாண்டி கொஞ்ச தூரம் போனா அவளோட அலுவலகம் வந்துடும். அங்க இப்போ யாரும் இருக்கமாட்டங்க, இவதான் முதல்லை கதவைத் திறப்பா, அப்ப போட்ருவோம்”
“கவலைப்படாதடா.., இதுதான் அவ திறக்குற கடைசி கதவுடா மச்சி. அவ துடிச்சி துடிச்சி சாவனும். இந்தப் பொண்ணுங்களுக்கு இதே வேலை. எவனன்னா பார்க்கிறது யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்குனு., மச்சி போலிசுடா..”
“ஏய் ஆமா ஆமா பாட்ல கீழ போடு ஒன்னும் ஆவாது போடு மச்சி”
அவன் சொல்லியவாறே முன்வந்து எட்டி அந்த அமிலம் நிறைந்த புட்டியை தனது நண்பனின் கையிலிருந்து கீழே மண்ணினுள் புதைய தட்டிவிட்டான். அது பாதி தலைகுத்திக் கீழே கிடக்க தூரத்திலிருந்து ஹீரோ ஹோண்டாவில் வேகமாக வந்த அந்தக் காவலாளி விருட்டென அவர்களை நெருங்கிவந்து நெருங்கியவாறே எதிர்முனையில் திரும்பினார். அவர் இவர்களைப் பார்த்துக்கூட இருக்கவில்லை. அவர்போனதும் அவர் போகும் வண்டிசப்தம் மெல்ல மெல்ல அவர்களின் காதுகளுக்குள் குறைய ஆரம்பித்ததும், அந்த பாட்டிலுக்கு மேலே செருப்பவிழ்த்துவிட்டு அமர்ந்திருந்த நண்பன் எழுந்து பாட்டிலை அவசரமவசரமாக மண்தட்டி விட்டுக்கொண்டே சுற்றி நான்குப்புறமும் பார்த்தான். உள்ளே ஏதோ மண்ணெண்ணெய் ஊற்றி வைத்ததைப் போல் ஊற்றப் பட்டிருந்தது அவளின் முகமெரிக்க்ப் போகுமந்த அமிலம்.
“மச்சான் போலீசு போயிருப்பானோ ? மூதேவி எந்த நேரத்துல வந்து காரியத்தைக் கெடுத்தான் டா” அந்த நண்பன் கேட்டான்
“இல்லடா இப்பவும் ஒன்னும் ஆகலை வேகமாப் போனா போயிடலாம். எப்படியும் வேறு ஆட்கள் வர அரைமணி நேரமாவது ஆகும், இவதான் அங்க முதல்ல போவா”
“அப்போ வா சீக்கிரம் ஒடு முதல்ல எங்க வரையும் போயிருக்கான்னு பார்க்கலாம் போ”
“ம்ம் நீ அந்த தெருவுல போ நா இப்படி சுத்தி வரேன்..”
இருவரும் ஓடி ஓடி வேறு தெருக்கள் சுற்றி ஓரிடத்தில் வந்து மூச்சிரைக்க நின்றார்கள். சப்தம் கேட்டு அவர்களுக்கு சற்று தூரத்தில் போன அவள் திரும்பிப் பார்த்தாள். அழகு முகம். நிலவு பூத்த பொலிவு.. கொடி அசைந்து அசைந்து நகர்வதைப்போல் ஒரு நடை. மருந்திற்குக் கூட முகத்தில் விரக்தியோ பயமோ கோபமோ ஒன்றிமில்லாது கழுத்து வரை மறைத்த காலர் வைத்த சுடியில் அண்ணன்கள் மதிக்கக் கூடியவள் போலிருந்தாள் அவள்..
“டேய் மச்சான் பார்க்கிறாடா.. இங்கயே ஊத்தவா ?
“எப்படிடா?!!”
“யாரும் இல்ல மச்சி சொல்லு முடிச்சிடலாம்”
“இல்ல மச்சான்”
“இன்னாடா சொனங்குற, ஊத்த தானே வந்த? பார்ட்டியை கண்டுட்டல்ல’ சும்மா சலக்குனு ஊத்த வேணா??”
“ஆமாண்டா ஆனா… அவளை…”
“என்னடா ஆனா, இல்லனா உடு அவ இப்படியே இன்னும் நாளு பேர ஏமாத்துவா, தாடி வெச்சிக்குனு கூட்டமா சுத்துவோம்..”
“இல்லடா மச்சி ஊத்தனும்டா! அவ ஒழியனும்டா! எனக்குக் கிடைக்காதவ இனி யாருக்கும்..”
“ஷ்…… உணர்ச்சிவசப் படாத. கத்தி ஏன் பேசுற? சத்தம் போடாம அவ பக்கத்துல போ.., எப்படி போறா பார்; நீ முன்னாடி போய் மடக்கு போ, நான் பின்னால வந்து கையை கெட்டியாப் புடிச்சி இறுக்கி ம்ன உடனே சடார்னு ஊத்தணும். நான் கீழ உக்காந்ததும் முகத்தைப் பார்த்து ஊத்து’ சரியா ?”
“சரிடா.. ” அவனுக்கு முகமெல்லாம் வியர்த்தது. அவனுக்கு அவள்மேல் நிறையக் காதல் இருந்தது. கோபமும் இருந்தது. புரியாதக் கோபம். மூடத்தனமான அறிவு இது. பெண்களைப் புரியாத அறிவு. அவள் பாவம் ஒரு முடியும் கவிதையைப் போல் நடந்துபோனாள். திரும்பி இவர்களைப் பார்த்ததும் சற்று கலவரம் ஆனாலும், இனி என்ன அதான் சொல்லிட்டோமே அவனை விரும்பவில்லை என்று, இனி என்ன செய்யப் போகிறான், நமக்கு அப்பா பார்த்த மாப்பிள்ளை போதும். அண்ணனுங்க கூட இருந்துட்டு அவுங்க மனசு நோகாம நடந்துக்கொண்டால் அது போதும். அவர்கள் நடத்துவார்கள். ஊரே வியப்பதுபோல் நடத்துவார்கள். அப்படி நடத்தறது தானே அவர்களுக்குப் பெருமை. என் அண்ணன்கள் எனக்கு முக்கியம். அவனுங்க இந்த மண்ணுல தலை நிமிர்ந்து நிக்கணும். நேசம்னா என்னன்னுப் புரியாத இந்த மண்ணுல காதல் கீதல்னு எல்லாம் நாமும் பேசி மாட்டக்கூடாது. மனதை அடக்கித்தான் வைத்துக்கொள்ளவேண்டும்.
ஒருவேளை இன்னொரு முறை வந்து பேசினாலும் இவனுக்கு எடுத்துச் சொல்லலாம். ஆனா அதெப்படிப் பேசுவான், அதான் மாப்ள பார்த்தாச்சுன்னுதான் சொல்லிட்டோமே, இனியென்ன, வேணும்னா அடுத்த மாதம் கல்யாணம்னு கூட சொல்லலாம். வந்துட்டுப் போகட்டும். எனக்குத்தான் கொஞ்சம் வலிக்கும், வலித்தாலென்ன என் அப்பாவின் மதிப்பெனக்கு முக்கியம். எப்படியெல்லாம் ஆசையா வளர்த்திருப்பார். பாவம் அப்பா..” அவள் ஏதேதோ யோசித்துக் கொண்டே நடந்துவந்துக் கொண்டிருந்தாள். மனசுக்கு என்னவோப் போலிருக்க பின்னால் வரும் அவனைப் பார்க்கத் திரும்பினாள். சாதாரணமாக முன்பு நடந்துவந்துக் கொண்டிருந்தவன் இப்போது சற்று ஓடிவர ஆரம்பித்தான்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன்.. இவன் ஏன் இப்படி ஓடி வருகிறான். அதும் யாரையோ துரத்துவதுபோல். அவன் அதற்குள் அவளை முறைத்துக்கொண்டே ஓடிவர, அவளுக்கு கலவரம் கூடியது. ஒருவேளை நம்மைத் தான் துரத்தி வருகிறானா? இங்குமங்குமாய் சுற்றும்முற்றும் பார்த்தாள். அதற்குள் அவனுடைய நண்பனும் ஏதோ வெறியில் பிதற்றுபவனைப் போல் நெருங்கி அருகில் வர அவளுக்கு ஏதோ பதற்றம் உடம்பெல்லாம் பரவி ஓடு ஓடு என்றது. அதற்குள் அவன் உள்ளே சட்டைப்பையினுளிருந்து ஒரு நீள வெள்ளைக் குப்பியை எடுத்து குலுக்கிக்கொண்டே ஓடிவந்தான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை, பதறி ஓடி என்னசெய்வதென்று யோசிப்பதற்குள் அவன் எட்டி அவளுக்கருகில் வந்து அந்த அமிலக் குப்பியை திறந்து அவள்மேல் எட்டி ஊற்றிவிடுவதுபோல் ஓடிவர, இன்னொருவன் அவளுடையக் கைகளைப் பிடித்துக்கொள்ள நெருங்கிவர அவள் இனி சுதாரித்து என்னசெய்ய, என்றாலும் உயிராயிற்றே, கொல்ல வருவதுபோல் வருகிறார்களே ஓடாமல் என்ன செய்ய, ஓடினாள். சற்று எகுறி விழுந்து எழுந்து சால்வையையெடுத்து மேலே போட்டுக்கொண்டு போகும்வழி விட்டு வேறு திசையில் ஓடினாள். எதிரே ரயில் தண்டவாளம் தெரிய ஓடி அதைக் கடந்து விடும் எண்ணத்தில் அவள் ஓட அவர்களும் அவளை விடாது துரத்த, ஒரு அதிவேக ரயிலொன்று விர்ரென்று வேகமாக வந்துக்கொண்டிருந்தது.
“மச்சான் பார்த்துட்டாடா இனி விடக்கூடாது ஓடு.. ஓடு..”
“டேய் எதிர்க்க ரயில் வருதுடா”
“வந்தா வரட்டும் அப்படியே அவ தலைமுட்டி சாவட்டும்..”
“இல்லடா இடிச்சா செத்துட மாட்டா ?”
“சாவட்டும் மச்சி நம்ம வேலை முடியும், ஒன்னு அமிலம் ஊத்துறோம், இல்லை ரயில்ல சாவா ரெண்டுல எதனா ஒன்னு போ சீக்கிரம் போ..”
அவர்கள் இருவரும் விரட்டும் அளவிற்கு அவளால் ஓட இயலவில்லை. என்றாலும் ஏதோ அமிலம் போல அவளுக்குப் புரிந்துவிட தனை எப்படியேனும் காப்பாற்றிக்கொள்ளவேண்டி மூச்சிரைக்க மூச்சிரைக்க நிற்காது ஓடினாள். இடையே யார் யாரையோ தூரத்தில் செல்பவர்களையெல்லாம் கைகாட்டிக் கத்தினாள், அவர்கள் விரட்டி விரட்டி அருகில் வந்துவிட உயிர்பயத்தில் வெள்ளைப் பையினை தூக்கி அவர்கள் மீது எறிந்துவிட்டு தலைதெறிக்க ஓடினாள். பை ஒருவனின் முகத்தில் பட அதன் கைப்பிடிசென்று அவனின் கண்களில் பளீரென்று அடிக்க அவன் ஆவென்று அலறிக்கொண்டே பாட்டிலை இடமறியாது வீசிவிட்டு கண்களைப் பொத்திக் கொண்டான். சடாரென இவன் எட்டி அமிலம் கீழ்விழுந்து உடையாதவாறு எட்டிப் பிடித்துக்கொண்டு அவனை கைபிடித்து தூக்கப்போக அதற்குள் அவன் “நீ போ என்னை விடு அவளை விடாதே சிறுக்கி இன்னைக்கு சாவனும் போ இனி நீ விட்டாலும் நான் விடமாட்டேன் போ போ..” என்று வெறியில் கத்தினான். அவன் அதற்கு ஏதோ சொல்லவருவதற்குள் “கொடு அமிலத்தை, என்னிடம் தா’ நான் போடுறேன் அவளை” என்று கோபத்தில் சீறி அந்தக் குப்பியை அவனிடமிருந்து பறிக்கவர, அதற்குள் அவன் “இல்லடா நீ வேணாம் நானே ஊத்துறேன் அவளுக்கு எது நடந்தாலும் என் கையிலதான் நடக்கனும் வா” வென்றுக் கொட்டிக்கொண்டு இருவரும் மீண்டும் ஓட அவள் அதற்குள் ரயில் தண்டவாளம் நெருங்கியிருக்க எதிரே தூரத்தில் வந்துக்கொண்டிருந்த அந்த அதிவேக ரயில் ப்ப்ப்ப்பேம்ம்ம்ம்ம்ம்ம்… என்று சப்தத்தோடு பத்து யானைக் கூட்டத்தின் வேகத்தில் பிளிறுவதுபோல் அருகில் வர அவள் பாவம் செய்வதறியாது தயங்கி நெருங்கி அவஸ்தையோடு ஓடினாள்.
ஆனால் ஒன்றைமட்டும் உறுதியாக்கிக் கொண்டால், கையிலிருப்பது அமிலம் என்றுத் தெரிந்ததும் ரயிலில் விழுந்து இறந்தாலும் பரவாயில்லை அவர்களிடம் மட்டும் மாட்டக்கூடாது என்று எண்ணிக்கொண்டே ஓடினாள். சற்று தூரத்தில் எமனைப் போல் அலறிக்கொண்டு வந்தது ரயில். எப்படியும் அடுத்த ஓரிரு நிமிடத்திற்குள் தான் இறந்துப் போவோம் என்று எண்ணிக்கொண்டாள். அழை கோபம் பயம் எல்லாம் ஒருசேர வந்தது. அவர்கள் வேறு அருகில் வந்துக் கொண்டிருந்தனர். வேறு வழியில்லை தப்பித்தால் தப்பிப்போம் இல்லையெனில் இல்லை என்று எண்ணிக்கொண்டாள். அம்மாவின் முகம் திடீரென எதிரே வந்துநின்றது. அப்பாவை அண்ணன்களையெல்லாம் நினைத்துக் கொண்டாள். அவன் ஆரம்பத்தில் பேசியது, பழகியது, காதலைச் சொன்னது, மறுத்ததும் கட்டாயப் படுத்தியது என எல்லாம் நினைவில் வந்துவந்துப்போனது.
அப்பாதான் தாங்கமாட்டார் துடிதுடித்துப் போவார் என்று நினைத்ததும் நின்று அவர்களைப் பிடித்து இரண்டாகக் கடித்து துப்பினாலென்ன என்பதுபோல் கோபம் வந்தது. ஒரு நொடி நின்றாள். ரயில் மிக அருகில் ப்ப்ப்ப்பேம்ம்ம்ம்ம்ம்ம்… என்றுக் கத்திக்கொண்டே வந்தது. அவர்கள் அதற்குள் மிக அருகில் வந்துவிட்டனர். அந்த கண்ணில் அடிபட்டவன் குப்பியை படாறேனத் திறந்தான். உள்ளிருந்த அமிலம் புகைந்து வெளியே புகையாக வர “ஐயோ கடவுளே அமிலமே தான் அதை என் முகத்தில் வீசி உடம்பு பரவி வெந்துபோய் அழுகிப்போனால் அண்ணன்கள் கதி? ச்ச .. வேண்டாம் அதைவிட ரயிலில் அடிபட்டு ஒருநொடியில் இறந்துவிடாலாம். இவனுங்க கையில்மட்டும் சிக்கக்கூடாது என்று எண்ணிக்கொண்டே அடுத்த அடியை வைப்பதற்குள் அவர்கள் அருகே வர ரயிலும் அருகே வர தண்டவாளம் அதிரும் சப்தமும் காற்றும் முகத்தைக் கிழிக்கும் தூசியுமென ரயில் நெருங்க நெருங்க மிக அருகே வந்துவிட அவனுக்கு பகீரென்றது.
அவளுக்கருகில் சென்று அவளுடைய பதைத்த முகம் பார்த்ததும் பயந்துப்போனான். ஒரு நொடிக்குள் ரயில் இடித்துவிடுமே, அவள் இறந்துப்போவாளே, அவளில்லாவிட்டால் நானென்ன ஆவேன், இதற்கா காதலித்தேன் ஐயோ என்னசெய்வதென்று எண்ணுவதற்குள் அந்த அதிவேக ரயில் சர்ரென்று சீறிக்கொண்டு வந்தேவிட்டது; அவளும் எதிரே ஓடிவிட்டாள், அவனும் அந்த கூடவந்தவனும் வெறிபிடித்தாற்போல் ‘சாவுடி மாவலை..’ என்று கையில் கொண்டுவந்த அமிலத்தை தூக்கி வீசுகிறான்..
அடுத்த நொடி..
அடுத்த நொடியில்.. அவள் தண்டவாளத்தை விட்டு இறங்கவும் ரயில் ஒரு புள்ளியில் அவளை உரசினாற்போல காற்றின் வேகத்தில் அவளைக் கடக்கவும் அந்த அமிலக்குப்பி சென்று ரயிலின் முகப்பில் பட்டு டமாரென வெடித்துச் சிதறி புகைந்துவிழ ரயில் நிற்க இயலா வேகத்தில் கடந்துக் கொண்டேயிருந்தது..
டக்டக்.. டக்டக்.. டக்டக்..கென்று போகப்போக சப்தம் குறைந்து ரயில் வண்டி விலகி விலகி தூரம் போக, மூச்சு வாங்கிக்கொண்டு இருவரும் தலைகுனிந்து முட்டிமேல் கைவைத்து ங்ங.. ங்ஙவென மூச்சிரைத்துக்கொண்டே நிமிர்ந்து எதிரேப் பார்க்க அவள் கீழே விழுந்து கைகால் சிராய்த்துக்கொள்ள சால்வையைக் கூட எடுத்தணியாமல் அங்கிருந்து ஓடி சந்தைக்குப் போகும் தெரு பிடித்து அங்கே திருப்பத்தில் இருக்கும் ஒரு அடிபம்பில் தண்ணீர் அடித்துக் குடித்துக் கொண்டிருந்தாள். அப்போதங்கு ஓரிரு ஆட்கள் வருவதும் போவதுமாய் ஆள் நடமாட்டம் துவங்கியிருந்தது. காலைச் சூரியன் வெளிர்த்துக்கொண்டே வந்து உடம்பு சுட. காகங்கள் ஒன்றிண்டாய் கத்திக்கொண்டு இங்குமங்குமாய் பறக்க இரண்டுசக்கற வாகனங்களும் ஒரு ஆஃப்லாரியும் எதிரெதிர் புறத்தில் போகவர..
அவன் ச்ச… என்று தரையில் குத்தினான். நண்பனின் கோபத்தை அவன் கண்டுக்கொள்ளவேயில்லை. அவள் பிழைத்துக் கொண்டாள் என்றதும் ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட்டான். அவனுக்கென்னவோ ரயில் அவன்மீதேறி அவனைமட்டும் கொல்லாமல் விட்டுச்சென்றதைப் போலிருந்தது. அப்பாடா என்று அவளைப் பார்த்துக்கொண்டே முடிகளைக் கோதியவாறு கீழே அமர்ந்தான்.
“மச்சி அவ புழச்ச்சிடா வாடா போலாம்..” நண்பன் அழைத்தான்
“இல்லடா..”
“என்ன இல்லடா என்ன இல்லடான்ன; நான் கேட்டேனா? நீதானே கேட்ட? உன்னை மோசம் பன்னால்ல? உன்னைப் பார்த்துட்டு இன்னொருத்தனைக் கட்டிக்கப் போரால்ல, அவளை சும்மா விடலாமா?
“இல்லடா விடக் கூடாதுடா..”
“பின்ன..?!!! காதலிச்சல்ல..?”
“ம்ம்..”
“அவளும் காதலிச்சால்ல..?”
“ம்ம்..”
“அப்புறம்!!? ஏமாத்துவா விட்டுடலாம்றியா ? அப்போ நீ மட்டும் பாத்திருப்ப”
“இல்லடா, அவளும் பார்த்தா, சிரிச்சா.. சைகை காட்டி காட்டி பேசினா, கைகோர்த்து நடந்தா.. ஆனா ஏன்னுத் தெரியலை கட்டிக்க மாட்டாளாம்”
“அப்ப ஏன் விடுற தோ என்கிட்டே தண்ணி கலக்காம வேற ஒன்னு ராவா இருக்கு வா.. ஊத்தலாம்.. மூஞ்சைப் பார்த்து ஊத்தலாம் வா..”
அவனுக்கு பக்கென்றது. உண்மையில் அவனுக்கு அவளை கொள்ளும் நோக்கமோ வஞ்சிக்கும் எண்ணமோ இல்லை. அது ஒரு மூடத்தனமான கோபம். என்னசெய்வதென்றுத் தெரியாமல் தலைக்கேற்றிக்கொண்ட பித்து. தாள முடியாத ஏமாற்றம் நெஞ்சு முழுக்க எரித்ததை அவனால் சீரணிக்க முடியாமல் தவித்தான்.
அதற்கு யார் காரணம்? அவனே அவளை காதலித்துக் கொண்டமைக்கு அவளென்ன செய்வாளெனும் எந்தப் புரிதலுக்கும் போகவிடாதவாறு குறுக்குத்தனமான அறிவை அவனுக்குப் புகட்டியமைக்கு யார் காரணம்? வேறு யார் இந்தச் சமூகமாகிய நாம் தானே? காதல்னா தற்கொலை செய்துக்கொள்வது அல்லது அமிலம் ஊற்றிக் கொல்வதும் தானே நமைச் சுற்றி நடக்கிறது. எது நடந்தாலும் ஒரு செய்தியாக எடுத்துக்கொண்டு கடந்துவிடுகிறோமே; எப்படி இதையெல்லாம் அனுமதிக்கப் பழகிப்போனோம்??? போகட்டும், அவனுக்கு அந்தப் புத்திதான் மூளையைக் குடைந்தது. நம் சமூகம் கற்றுத்தந்த பாடங்கள் மட்டுமே முன்வந்து முன்வந்து நின்றது அவனுக்கு. உடன் சேர்ந்து அவனும் கூட அடியாளாக வந்தவனும் உசுப்பேற்றி உசுப்பேற்றி அவனை அழைத்துக் கொண்டு தண்டவாளம் கடந்து ஓடிவந்துக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் அந்த அவள் நிற்கும் தெருவை பிடித்துவிட, சுற்றிமுற்றிப் பார்த்தனர். அங்கே ஆள்நடமாட்டம் நிறைய இருந்தமையால் சாதாரணமாக நடந்துப் போவதைப்போல் இருவரும் போக, அவர்களைக் கண்டதும் அவள் சுட்டெரிப்பதைப் போல் பார்த்தாள். அப்படியே அந்த அடிபம்பைப் பிடுங்கி இருவரையும் அடித்தே கொண்றுவிடனும் போலிருந்தது அவளுக்கு.
அதற்குள் அவன் ஏதோ சொல்லி வேறு புறம் கைகாட்டி ஒருவர் இடதும் வலதுமாக திரும்ப அவள் இங்குமங்குமாய் நான்கு புறமும் தேடிப் பார்த்தாள். தலை களைந்து முகமெல்லாம் மரணபயம் கொப்பளிக்க சிவந்துப் போயிருந்தது. அங்கங்கு சிராய்ப்புகள் வேறு. தெருவில் சென்றவர்கள் அவளை என்னவோ ஏதோ என்றுப் பார்த்துக்கொண்டே போனார்கள். அவளால் ஒன்றும் முடியவில்லை. சற்று அங்கேயே குத்துக் காலிட்டு அமர்ந்தாள். ஆட்கள் இங்குமங்குமாய் விலகிப் போனார்கள். அதிகாலைக் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக் கொண்டேயிருந்தது. அவரவர் வேலையை ஆவரவர் பார்த்துக்கொண்டு விரைந்தனர்.
இச்சமூகத்த்கைப் பற்றியதொரு பெரிய கோபத்தை அவள் த்தூ..வெனக் காரி தெருவில் உமிழ்ந்தாள். அந்தப்புரம் போனவர்கள் அவளை ஒருமாதிரி பார்த்துக்கொண்டே போக, அவர்களைப் பிடித்து வெட்டனும்போலிருந்தது அவளுக்கு. நான் என்ன செய்தேன், என் குடும்பம் இவர்களுக்கு என்ன செய்தது? வந்தவன் போனவனெல்லாம் காதல் என்றால் நானும் காதலிக்கவேண்டுமா? எனில் நான் எத்தனைப் பேரை காதலிதிட முடியும்? பிறகு அதன் பெயர் காதலென்று ஆகுமா? ஏன் எனது சமுதாயத்திற்கு பெண்களைப் புரிவதில்லை. சிரிப்பதும் இளிப்பதும் ஒன்றா? ச்ச.. எனக்கும் படிக்கணும் நானும் வேலைக்குப் போகணும் இயல்பா வாழனும்னு நினைத்து வெளியில் வந்தது தப்பா? முகப்பூச்சு போடுவதில்லை, ஆடம்பரப் பின்னல் இல்லை, இங்கும் அங்கும் உடம்பு தெரியும்போன்ற ஆடையை அணியவில்லை. அதிகம் சிரிப்பது கூட இல்லையே நான்; வேறென்ன தான் செய்து இப்பூமியில் வாழ்வதோ என எண்ணி தலையில் கைவைத்து வெளிறிய கண்களில் கண்ணீர் வடிய தெருவையே பார்த்தாள்.
தெருவில் வண்டியில் போன ஒருவர் ஏன் இங்கே இப்படி ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள் என்பது போல் பார்த்துக்கொண்டேப் போனார். அவளுக்கு ஏதேதோ யோசனைகள். அவர்கள் போய்விட்டதாய் நம்பிக்கொண்டாள். அப்பாவிடம் சொன்னாலும் பதறிப்போவார். அண்ணன்களுக்கு அலைபேசியில் அழைக்கலாமென்று பார்த்தால் பையை தூக்கி அங்கே வீசிவிட்டோம். இப்போ என்ன செய்வது. யோசித்துக்கொண்டே வீராவேசத்தோடு எழுந்தாள். மீண்டும் திரும்ப அங்கேயே போகலாம், போய் பையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்லலாமென்று எண்ணிக்கொண்டே திரும்புவதற்குள் எதிர்புறம் இருந்து இருவரும் ஓடி வந்தார்கள்.
தெருவில் போன வந்தவர்கள் அதிர்ந்து திரும்பினர். அவர்கள் இன்னும் வேகமாக ஓடிவந்தனர். வண்டிகள் எல்லாம் சடார் சடாரென பிரேக் அடித்து நின்றன. அவர்கள் அவளை வெகு வேகமாக தாக்குவதுபோல் நெருங்க, தலையில் கூடை சுமந்துப்போன பெண்மணி கூட கூடையை போட்டுவிட்டு அவர்களை நோக்கி ஓடிவந்தாள். அவள் ஓடிவர, அருகில் இருந்தவர்கள் நீ நான் என்று பதறிவர, எல்லாவற்றையும் கண்டு பதறி செய்வதறியாது அவள் ஸ்தம்பித்துப் போக அடுத்த கணத்திற்குள் அந்தக் கூட வன்தவன் ஓடிவந்து எட்டி அவளுடைய இரு கைகளையும் பின்னால் திருப்பிப் பிடித்துக்கொள்ள; அவன், அந்த அவளைக் காதலித்தவன் தனது கால்சட்டைப் பைக்குள்லிருந்து அந்த சிறியக் குப்பியை எடுக்க எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமென நெருங்கி அவர்களை வருவதற்குள் அந்த அடியாள் கத்தினான்
“ஊத்துடா..”
..
“டேய் சீக்கிரம் ஊத்துடா..”
…
அவனால் முடியவில்லை
“மச்சான் கூட்டம் வருதுடா ஊத்திட்டு ஓடு நான் கையை விட்ருவேன்..”
அவன் கத்தக் கத்த அவள் திமிறினாள் அவனுடைய காலில் பின்னால் எட்டி எட்டி உதைத்தாள். அவனுக்கு முகமெல்லாம் வியர்த்து கண்கள் கலங்கி சிவந்து வாய் கோணி அழுதான். கத்தி கத்தி அழுதான்
“டேய் நாதேறி சீக்கிரம் ஊத்துறியா இல்ல..”
அவன் கத்த, ஆளாளுக்கு விஷயம் அறிந்து அருகில் அருகில் அருகிலென தலைதெறிக்க ஓடி வருவதற்குள், அவள் சிம்பி சிம்பி தனது கைகளை விடுவிக்க இழுத்து எட்டி உதைத்து போராடுவதற்குள் அவன் கத்தியழுதுக்கொண்டே அந்தப் புட்டியை இன்னொரு கால்சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு வேறொரு குப்பியை எடுத்துத் திறந்து சடாரென அவள் முகத்தில் வீசினான்…
கூட்டம் ஸ்தம்பித்துப் போனது. அவள் வீர்ர்ரென உயிர்போகும் கனத்தில் கத்தினாள். அந்த கையைப் பிடித்துக் கொண்டிருந்தவன் குனிந்து வேறுபுறம் திரும்பி அங்கிருந்து ஓடினான். அவன் அந்த காதலித்தவன் அவளையே வெறித்துப் பார்த்தவாறு ங்ங.. ங்ங.. என்று மூச்சுவாங்க அங்கேயே நின்றிருந்தான். மக்கள் சீறிப் பாய்ந்து அதேநேரம் அவன் ஊற்றுவது அமிலம் என்பதால் பயந்து விலகி அவள் அப்பா என்று கத்திக் கொண்டே கண்களைப் பிடித்துக்கொண்டு அமர, அந்த கீரைக் கூடை சுமந்து வந்தவள் கீழிருந்த கற்களை வாரி அவன் மீது எறிய கூட்டம் அவனை சூழ்ந்துக்கொண்டது. நான்கைந்துப்பேர் ஓடியவனை அந்த அடியாளைப் பிடிக்கத் துரத்தினார்கள். வேறுசிலர் ஆணும் பெண்ணுமாய்ச் சேர்ந்து அவனை அடிக்கவர கல்லடியில் மண்டை கிழிந்து ரத்தம் வழிய, அவள் கண்களைத் திறந்தாள்.
அவசரமாக துணி பொத்தி மருத்துவமனைக்கு கொண்டுச்செல்ல எத்தனித்தவர்களை விடுவிக்கச் சொல்லி தனது முகத்தை எல்லாம் தொட்டுப் பார்த்தாள், மேல் கீழ் உடம்பெல்லாம் தொட்டுப் பார்த்தாள், கண் மங்கலாக இருந்தது சிவந்திருந்தது, ஆனால் அமிலம் பட்டிருக்கவில்லை. எல்லோரும் அவளை அறிந்துக்கொண்டு முகத்தை தொட்டு தடவி அது வெறும் பால் என்று தெரியவர ஆச்சர்யத்தில் செய்வதறியாது விழித்தார்கள். அதற்குள் அவள் ஓடிப்போய் அவனை சூழ்ந்து அடிப்போரை விலக்கி எனக்கு ஒன்றுமில்லை என்று சொல்ல, அவன் ரத்தம் வழிந்தக் கண்களோடு அவளைப் பார்த்துப் பேசினான், அவள் கத்திக்கொண்டே சென்று அவனுடைய முகத்தில் அறைந்தாள்.
“ஏன்டா.. ஏன்டா இப்படி இருக்கீங்க? நீ பிறந்தமாதிரியே தானேடா நானும் பிறந்தேன்? உன்னை பெக்கறதுக்கு உன் அம்மாவும் என்னை வளக்க என் அப்பாவும் எப்படி பாடு பட்டிருப்பாங்க? உடம்பு சிதஞ்சிப் போச்சின்னு நினச்சி அலறிப்போனேன். ஏன்டா இப்படி…? அடிவாங்கியது நீயா இருந்தாலும் இப்படி உடம்பெல்லாம் ரத்தம் பார்க்க பார்க்க வலிக்குதுடா.., உன்னை மாதிரி நாளு அண்ணனுங்க இருக்காங்க எனக்கு அவங்களுக்கு ஒரு அடிபட்டா துடிக்கிற அதே மனசுதாண்டா உனக்காகவும் துடிக்குது. ச்சீ.. காதலா மட்டும்தான் பெண்களைப் பார்க்கணுமா..? கடவுளே…” என்று அவள் தலையில் அடித்துக் கொண்டு கதறியழுதவாறே அங்கேயே அமர்ந்தாள்.
அதற்குள் அவளுக்கு ஒன்றுமில்லை என்பதை தெரிந்தக் கூட்டம் அவனை இப்படி அடித்துவிட்டோமே என்பது போல் பார்த்து ‘புடிங்க இவனை மருத்துவமனைக்குக் கூட்டிப் போக்லாம்’ என்று தூக்க அவன் எல்லோர் கையையும் விலக்கி அவனை விடுவிக்கவிட்டான்..வேண்டாம் என்று ரத்தம் வடிய வடிய எல்லோரையும் சைகையினால் மறுத்தான்.. யாரிடமும் ஒன்றும் பேசவில்லை அவன். முகத்தை வழித்துப் போட்டவாறே ஒருமுறை அவளையே ஆழமாகப் பார்த்துவிட்டு எழுந்து தனியாக நடந்தான்.
கூட்டம் விலகி ஒருத்தர் ரெண்டுபேர் அவன்பின்னே போயினர். அவள் அவனையே வெறித்துப் பார்த்தவாறு கால்குத்தி அமர்ந்துக்கொண்டாள்.. அந்தக் கீரைக்காரப் பெண்மணி வந்து எழுந்திரு தாயி என்று எழுப்பி அவளை அழைக்க, அவள் அவனைப் பார்த்துக்கொண்டே எழுந்தாள். தூரத்தில் நடந்துப்போன அவன் தனது இன்னொரு கால்சட்டைப் பையிலிருந்த ஒரு அமிலக்குப்பியை எடுத்து தெருவின் ஓரச் சுவற்றில் அடிக்க அது டமாரென வெடித்துப் புகைய, அமிலம் சிதறி அருகே இருந்த மரத்தில் பட்டு கிளைகள் எரிந்துக் கருகியது.
அவன் ஆடி ஆடி நடந்துப்போனான். இருவர் சென்று அவனை தோள் மீது சாய்த்துக் கொண்டார்கள். தூரத்தில் ஒளிந்திருந்து இதலாம் பார்த்த அந்த நண்பன் ஓடிவந்து என்னாடா இது ஏன்டா மாட்டின என்றான், அந்த இரண்டு பேர் அவனை கன்னத்தில் ஒரு அறைவிட்டு ஓடி போ என்றார்கள். அவன் அடியை வாங்கிக்கொண்டு என்னாச்சி மச்சி என்றான். அவனால் தாங்கமுடியவில்லை. கத்தி அழுதான்..
“என்னால முடிலைடா.. எப்படிடா அவளைப் போய் நானே…?!!”
“அதுக்கு என்ன ம..க்கு இதலாம் பண்ண என்னைக் கூப்பிட்ட இவளுங்க இப்படியே..” அவன் பேச்சை நிறுத்துவதற்குள் அவர்கள் இன்னொரு அரைவிட்டு இப்படியே ஓடிப்போயிடு, இல்லை உயிரோடப் போகமாட்ட’ என்றனர். அதற்குள் அவன் அவர்களைப் பார்த்து அவன் வரட்டும், எனக்காகத் தான் வந்தான் எனது நண்பன் என்றான். அதோடு அவனைப் பார்த்து “இல்லடா.. மச்சி என் கையாள எப்படிடா அவளை??? அவளுக்கு என்னை விரும்பப் பிடிக்கலை. அது தெரியாம நான் விரும்பியது அவள் குற்றமா? அவள் பாவம்டா படிப்பு வேலை குடும்பம்னு வாழறவ. எங்கேயோ நல்லா வாழட்டும்னுதான் அமிலத்தை ஊற்ற ஓடிவந்த வழியில ஒரு பால் புட்டியையும் வாங்கிவச்சேன்..
அவன் பேசிக்கொண்டே நடக்க மூவரும் சேர்ந்து அவனைத் தாங்கியவாறு போக…
அவள் அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவளுக்கு அவனைப் புரிந்திருந்தது. அவனால் அவளை கொல்லமுடியவில்லை என்பதைப் புரிந்துகொண்டாள். அவளுடைய அண்ணன்களைப்போல நிறையப் பேர் ஆங்காங்கே ஆண்களிலும் இருக்கிறார்கள் என்பதை கண்ணீர் வழிய உணர்ந்தாள். என்னசெய்வது இவர்களுக்கு காதல்தான் சரியாகச் சொல்லித்தரப்படவில்லை என்று எண்ணிக்கொண்டாள்..
வானம் டமடமவென வெடித்தது.. மின்னல் நான்குப்புறமும் மின்னின.. மழை சோ..வெனப் பெய்தது…
மழையில் நனையும் காதல் இனி நன்னிலங்களில் மலரட்டும்..
————————————————————————————————
வித்யாசாகர்
வணக்கம்
அண்ணா
சிறுகதையின் தொடக்கமும் முடிவும் மிக நன்றாக உள்ளது…சிலபகுதியில் வினாக்களையும் தொடுத்து அருமையாக எழுதியுள்ளிர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLike
ஆம்பா, நம் மண் மீதான அக்கறையும் கோபமும் தான் நமது எழுத்து. அதெல்லாம் ஆங்காங்கே கேள்வியாகவும் கவிதையாகவும் வெளிப்படுகிறது.. தங்களின் கருத்திற்கு நன்றி…
LikeLike
நல்ல கதை… வாழ்த்துக்கள்.
LikeLike
தங்களின் வாழ்த்தில் மகிழ்ந்தேன். நன்றியும் வணக்கமும்..
LikeLike
வணக்கம்!
காதல் பறவைகளின் மோதல் கதையிது!
வேதமென மின்னும் விரிந்து
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
LikeLike
நன்றியும் வணக்கமும் ஐயா.. காதல் ஊறும் தெருக்கள் நாகரிகம் பிறக்குமிடம் எனில்; காதலை காதலாக கற்றுத்தர முனைவோம்..
LikeLike