உன் பேச்செல்லாம் என் பேச்சு
உன் நடையெல்லாம் என் நடை
நீ காட்டும் அன்பெல்லாம் என் அன்பு
ஆனா நீமட்டும் போறியேடி..
உன் கனவெல்லாம் என் கனவு
உன் ஆசையெல்லாம் என் வரைக்கும்
நீ நிற்குமிடமெல்லாம் என் கூட
இன்று நீ இல்லாத வீடெங்கும் நானில்லாக் கோலமடி;
நீ தொட்டதெல்லாம் உன் சொந்தம்
கேட்டதெல்லாம் உன் சொத்து
நான் வாங்கன்னு நினச்சதெல்லாம் உனக்காக
இப்போ நீ போகும் பாதையில என் உசிரும் போகுதடி;
நீ சிரிச்சாலே பூக்கும் வீடு
நீ பேசினாதான் நிறையும் மனசு
நீ இல்லைன்னு நினைச்சாலே அழுகிற உறவு
இன்று நீயில்லா வீடுதாண்டி’ நீ வரும்பாதைப் பார்க்குதடி;
நீ ஒருநேரம் பிரிந்தாலே
உயிர் இரண்டா உடையும்,
நீ ஒரு நாள் இல்லாத வீடு நெருப்பா தகிக்கும்,
நீயின்றி உண்ணும் ஒருவாய்ச் சோறும்
நஞ்சா உள்ளிறங்கும்;
இப்போ மொத்தமா பிரியிரியே; வாழ்க்கையை
வெறும்வீட்டில் விட்டுட்டியே..,
நான்கூட்டி வந்தப்பாவம் – உனைக்
கூட்டிப் போகுதோடி,
நானன்று வெச்ச நெருப்பு
என் வயிற்றில் எரியுதோடி,
பாட்டன் முப்பாட்டன் பறிச்சுவெச்சப்
பள்ளத்தில
என் கண்ணீர் நிரம்புதடி,
அது விதி அது நோகட்டும்’ நீ போ போ மகளே,
அப்பன் முகம் கண்ணில் நின்னா
கனவன் முகம் பார்த்துக்கோடி,
இனி கனவிலாவது வந்து வந்து
எனை அப்பான்னு அழைச்சுக்கோடி..
அதுவரையும் காத்திருப்பேன்; நீ
வரும்வரைக்கும் வாழ்ந்திருப்பேன்; வாழ்க்கை
கசப்புன்னுத் தெரிந்தாலும் நீ
வரும்பாதைப் பார்த்திருப்பேன்!!
———————————————–
வித்யாசாகர்
வணக்கம்…! உங்கள் கவிதையைப் படித்தக் காய்ச்சலில்… முயற்சித்தது….
*குறிப்பெதுவும் இல்லாத நாட்கிழிப்புகள்..*.
உன்னிடமிருந்து கொண்டுவந்திருந்த புன்னகைகளில் ஒன்றை எடுத்து தனிமைத்
துயரத்தில் வெடித்த என் உதடுகளில் பூசிக்கொள்கிறேன்..!
அலைபேசியில் சிணுங்கும் உன் ஒலிக்குறிப்புகளின் ஊடான சிரிப்புச் சிதறல்கள்
என் அறையெங்கும் …
சாவித்துவாரத்தின் வழியே வெளியேற முயன்ற அதில் ஒன்றை…இழுத்துப் பிடித்து என்
சட்டைப்பையில் பத்திரப் படுத்துகிறேன்…!
யாருமற்று அருந்தும் தேநீர் சமயத்தில் அது உடனிருக்கக்கூடும்…!
இருமலிலும் தும்மலிலும் அல்லலுறும் என் இதயக்கூட்டை அது இதமாக வருடக் கூடும்
….!
படுக்கையிலிருந்து எழமுடியா என் அதிகாலைத் தருணங்களை…
சமயலறையில் ஓய்வில்லாமல் உருளும் உன் வளையல் சத்தங்கள் தட்டி எழுப்புகின்றன
….!
கணவன் வெளிநாட்டில் இருக்கும் பெருமிதப் பேச்சுக்களின்போதெல்லாம் உன்
குரல்வளையை
விரகச்சூனியக்காரி வெடுக்கென்று கடிக்கிறாள்…!
கடமைகள்…கனவுகள்… ஒவ்வொன்றாய் நிறைவேறிவருவதை… காதோர நரைகள்
கணக்கெழுதிக்கொள்கின்றன…!
குறிப்பெதுவும் இல்லாத நாட்கிழிப்புகளை…உள்ளங்கையில் வைத்து
உருட்டிக்கொண்டிருக்கிறேன்…!
நன்றி…!
LikeLike