நெஞ்சு துடிக்குது நெஞ்சு துடிக்குது
நெஞ்சு துடிக்குது நெஞ்சு..
எம் – செல்வச்செழிப்பினில் வந்தப்
புழுக்களைக் கொல்லத் துடிக்குது நெஞ்சு!
(நெஞ்சு துடிக்குது..)
கெஞ்ச நினைக்குது கண்ணீர் வடிக்குது
கண்டு வலிக்குது நெஞ்சு..
எம் – செம்மொழி சொல்லிடும்
சந்தனப்பிள்ளையர் தன்மொழி விட்டதையெண்ணி!
(நெஞ்சு துடிக்குது..)
வீரம் மலிந்தது மாண்பு திரிந்தது
காமம் குத்துது நெஞ்சு..
எம் பிள்ளையர் பாவையர் – காதல் சதியிலே
வீழ்ந்திட வாடுது நெஞ்சு!
(நெஞ்சு துடிக்குது..)
கள்ளு குடிக்குது கல்வி மறக்குது
பணக்கொள்ளையி லெரியுது நெஞ்சு..
எந் தமிழர்பரம்பரை – தடுக்கி
விழாதொரு தடமதைத் தேடுது நெஞ்சு!
(நெஞ்சு துடிக்குது..)
பொங்கியெழுந்திடு.. போர்க்கொடி ஏந்திடு..
பெரும் படையெனச்சேர்ந்திடு நெஞ்சே; இனி
தவறெனில் களைவதும் சரியெனில் ஏற்பதும்
சத்தியமாகனும் நெஞ்சே..!!
(நெஞ்சு துடிக்குது..)
—————————————————–
வித்யாசாகர்
கருத்துள்ள பாடல் அருமை…
வாழ்த்துக்கள் ஐயா…
LikeLike