குவைத் தமிழோசையின் “மங்கையர்தின சிறப்புக் கவியரங்கம்..”

ன் கன்னித் தமிழுக்கும்
தாயிற்கும்
ஆசிரியைக்கும்
அன்பு மனைவிக்கும்
தோழிகளுக்கும்
தங்கைகளுக்கும்
முத்தச் சகோதரிகளுக்கும் எனது மங்கையர்தின சிறப்பு வாழ்த்துகள்..

த்தனை ஆங்கிலத்தையும்
அயல்மொழிகளையும் நஞ்சாகக் கலப்பினும்
நெஞ்சுநிமிர்ந்து நடந்தே –
ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்துவிட்ட
எனது சாகாத் தமிழுக்கு சிறந்தாழ்ந்த வணக்கம்..

தோடு எமை சிறப்பிக்க இங்கு வந்திருக்கும்
எனது அன்னையர் தந்தையர்
அண்ணன் தம்பிகள்
அக்காத் தங்கைகளுக்கும்
தோழியர் தோழர்களாகிய
தமிழோசைக் குடும்பத்திற்கும்,

வைத் தலைமை ஏற்றுள்ள அன்புச் சகோதரி
திருமதி அமுதா கோபால் அவர்களுக்கும்,
முன்னிலை வகுத்து நமக்குப் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும்
திருமதி செல்லம்மா வித்யாசாகர் அவர்களுக்கும்
எனது அன்புநிறை வணக்கம்..

முட்களை மிதித்து நடந்தாலும்
நம்பிக்கை ரத்தத்தைத் தீர்த்துக் கொள்ளாதவள்,
நிந்தனை ஆயிரம் வரினும்
கண்டவர் மனதுள் அன்பாகவே அணைபவள்,
கொடூர விதியது திருப்பி திருப்பிப் போட்டாலும்
தனது தீரத்தாலும் திறத்தாலும் நன்னடத்தையாலும் மட்டுமே
தனது வாழ்க்கையை
நேரே நேரே மாற்றிக்கொண்டவள்;

எனது அதீத அன்பின் மதிப்பின் உச்சம்
தாய்மைக் குறையாதக் கவிதாயினி
எங்களின் கவியரங்கத் தலைமை திருமதி. பாரதிக் கண்ணம்மா
அவர்களுக்கும் எனது மதிப்பான முதன்மை வணக்கம்..

றுதியாக, எனது தோளோடு தோள் நின்று
தோழமையோடு கவிதை வாசிக்க வந்திருக்கும்
எனது சகோதரக் கவிஞர்களையும் வணங்கி
எனது கவிதைக்கு வருகிறேன்..

தலைப்பு – பெண்கள் நம் கண்கள்..

பெண்வழியே புவியைக் கண்டோர் நாம்
பெண்வழியே பூமிப் பந்துமிதித்தோர் நாம்
பெண் இட்ட முதல் எழுத்தில் பாடத்தைத் துவங்கியோர் நாம்
நமக்குப் பெண்கள் கண்களாக இருப்பதில்
பெரிய ஆச்சர்யமில்லை;

கும்பிட்ட சாமி நேரில் வந்துநின்றதும்
கேட்டிட்ட சாமி கேட்டதைத் தந்ததும்
வாங்கிய வரத்தையும் நமக்கென வாங்கியதும்
பெண்களே பெண்களே..

வரலாறில் இல்லாமலே வாழ்வதும்
வாழ்வதைக் காட்டிக்கொள்ளாமளே நமக்காக மடிவதும்
கண்ணீராய் வியர்வையாய் ரத்தமாய்
அன்பூறிக் கரைவதும்,
கண்முன்னே கைதொழக் கிடைப்பதும்
பெண்களே பெண்களே..

கருப் பொருளாகி
காட்சிப் பிழையாகி
காய்ந்த மலரென வீழ்ந்தும்’ உள்ளத்துள்
நினைவுகளாய் மணத்து –
நாம் கைதொட்ட இடத்திலெல்லாம் வளைந்து
நமை நிமிர்த்திக் கொண்டிருக்கும் நேர்மை’
கண்ணியம்’
அன்பு’
நாகரீகம் கற்பித்த முதலெழுத்தும்
பெண்களே பெண்களே..

அவர்களை ஒரு கல்வியுள் அடக்கப்
பணித்த தமிழோசையின் கட்டளையை ஏற்பினும்
கல்வியில் பெண்டிரின் பெரும்பங்கைக் காட்டிட
என்னொரு விரல் போதாது;

அவர்கள் ஆற்றிய பெரும்பணியின்
வியர்வை ஆறாகி ஓடும்; சிந்திய ரத்தம்
இன்னும் பல தலைமுறையை
நன்னிலத்தில் வார்க்கும்..

இந்தியாவில் முதல் மருத்துவப் பட்டம் பெற்ற
தமிழக சட்ட மேலவையில்
முதல் உறுப்பினரான
முத்துலெட்சுமி அம்மையாராகட்டும்..

கருந்துளைக்கு
உச்சவரம்பு நிறை கூறிய
முதல் தமிழ் விஞ்ஞானி
முனைவர் பிரியா நடராஜனாகட்டும்..

எச் ஐ வி தொற்று பற்றி
விழிப்புணர்வு பாடம் புகட்டி
இந்தியாவில் இதுவரை
இருபதாயிரம் உறுப்பினர்களைச் சேர்த்த
பாசிட்டிவ் விமன் அமைப்பின் நிறுவனர்
கௌசல்யாவாகட்டும்..

வெறிகொண்டு படித்தாலே தேர்ச்சிபெறும்
சார்ட்டட் அக்கவுண்ட் படிப்பில்
இந்திய அளவில் முதல்வந்த
தங்கை பிரேமாவாகட்டும்..

மருத்துவம் அறிவியல் கலைத்துறை
சட்டக்கல்வி கலைமேன்மை
விளையாட்டுப் பாடமென எங்கும் வியாபித்து
எல்லாம் சாதித்து
எமக்குத் தாயாகவும் தோழியாகவும்
சகோதரிகளாகவும் உற்ற உறவாகவும்
மகளாகவும் இருக்கும் பெண்கள் – வெறும்
கண்கள் மட்டுமல்ல;
அதனினும் முன்’ னெனக் கூறி விடைபெறுகிறேன் நன்றி..
—————————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Responses to குவைத் தமிழோசையின் “மங்கையர்தின சிறப்புக் கவியரங்கம்..”

  1. சிறப்பான வரிகளுக்கு வாழ்த்துக்கள் ஐயா…

    Like

பின்னூட்டமொன்றை இடுக