தமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி…

14.03.2014 அன்று, குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கம் நடத்திய மாதாந்திரக் கூட்டநிகழ்வில், மூவர் விடுதலைப்போராட்டம் வெல்லும் தீர்ப்படைந்ததை எண்ணத்திலேற்று “தமிழர் பெருமை” எனும் தொடர் மாதந்திரத் தலைப்பில் இம்முறை ‘தியாகி செங்கொடியைப் பற்றிப் பேசப்பட்டது. கீழுள்ளவாறு பதிவுசெய்யப்பட்டது.

தலைப்பு – தமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி…

தீயள்ளித் தின்னவ
நீதிக்குத் தன்னுயிரைத் தந்தவ
யாருக்கோ செத்தவ
எனக்காகவும் அழுதவள் என் தாயம்மா
செங்கொடிக்கு வணக்கம்!

னைச் செந்தீயில் எரித்தாலும்
தீயள்ளி என்மீது தெளித்தாலும்
தமிழாகவே எரிந்து
தமிழாகவே கரிந்து
தமிழாகவே மண்ணிலூறி
தமிழாகவே மணத்து
தமிழாக மட்டுமே எனைத் தலைநிமிரச் செய்த என் தாய்மொழிக்கு வணக்கம்!

எந் தமிழுக்கும் செவிசாய்த்து, என் தமிழர்ப்பெருமையைக் கேட்கஇசைந்த இம்மாமன்றத்திற்கும்
பெரியோர் இளையோருக்கும் எனது சிரந்தாழ்ந்த வணக்கம்!!

ஒரு குழந்தையைப் பெற்றவர்களுக்கு ஒரு கனவிருக்கும், ஒரு குழந்தையோடு வளரும் சகோதர சகோதரிகளுக்கும், அந்தக் குழந்தைப்பற்றியாதொரு கனவிருக்கும்,

கொட்ட கொட்ட கண்விழித்து ஏக்கத்தோடு நமைப் பார்த்துக்கொண்டிருக்கும் நமது சமுதாயத்திற்கும் நமைப் பற்றியோர் கனவிருக்கும்..

வளர வளர, வயசு தீர வயசு வர, வாழ்க்கைப் பற்றி; வளரும் குழந்தைக்கும் ஒரு கனவிருக்கும்.

அப்படி எல்லாக் கனவுகளையும் தீயிலிட்டு, நெருப்போடு தன் உடலையேந்திப் போராடியச் செங்கொடிக்கு மூன்று உயிருக்கான நீதி மட்டுமே கனவாக இருந்ததெனில்; அந்த உத்தமியின் பெருமயைப் பேச எனக்குக் கிடைத்த இந்த மாமன்றத்தைப் பெரிதாக மதிக்கிறேன்.. நன்றியோடு நினைக்கிறேன்..

ஒரு சின்னப்பொண்ணு அவ;
சமூக அக்கறையும் குடும்பப் பாசமும் துள்ளலும் விளையாட்டும் நிறைந்த திறமையான பெண்ணவள்..

நாள்தோறும் பக்கத்துல இருக்கிற முந்திரிதோப்புக்கு போய் அங்குள்ளப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது அப்பொழுதிலிருந்தே அவளுக்கு வழக்கமா இருந்திருக்கு..

ஒருமுறை ஒருத்தர் செங்கொடிகிட்ட… ‘ஏம்மா, படிப்புல இவ்வளவு ஆர்வம் காட்டுறியே… பேசாம தபால்ல பட்டப்படிப்புக்கு படி’னு சொல்லியிருக்காரு. அதுக்கு யோசிக்காம செங்கொடி சொன்ன பதிலென்ன தெரியுமா? நான் மக்களை படிக்கறேன். இதுதான் இருக்கிற கல்வியிலயே உயர்ந்த கல்வி. எந்த டிகிரியும் இதுக்கு ஈடாகாது. இந்தப் படிப்பு எனக்கு போதும்…’ என்றிருக்கிறாள்..

இசையில் அந்தப்பொண்ணுக்கு அத்தனை ஆர்வம் அதிகமாம். பறையை எடுத்து அடிக்க ஆரம்பிச்சாள்னா, இன்றைக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாமாம். எப்படிப்பட்ட வலு உள்ளவங்களும் ஒரு மணி நேரத்துக்கு மேல பறை அடிக்க மாட்டாங்க. கை வலிக்குமாம். ஆனா, செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பாளாம்.

தனி நபர் போராட்டத்தையோ அல்லது சமூக நிலை சார்ந்த தற்கொலை முயற்சியையோ எந்தச் சூழ்நிலைலயும் அவள் ஆதரிக்கவே கூடாதுன்றதுல உறுதியா இருந்திருக்கா. அப்படிப்பட்ட பெண்ணை தீயில் தள்ளியது யாரென்று யோசிக்கையில்தான் கனத்தப் பார்வையொன்று நம் மீதும் நம் தேசத்து அரசியல் மீதும் அசிங்கமாகப் படுகிறது…

தன்னோட பதினோரு வயதில்.. தவறாத நியாயம் வேணும்னு தன்னோட தந்தையையே சிறைக் கூண்டுல ஏத்தி இருக்கிறாள்..

ஒரு கூலி வேலை செய்யுற அப்பா, சின்ன வயசுலையே அம்மா இறந்துப்போறாங்க, ஒரு கட்டத்துல அப்பா இரண்டாவது திருமணம் செய்து வறாரு. வாழக் கிடைக்காத தாயன்பை அந்த அம்மா தறா, அதையும் பொறுக்காத அப்பா குடிச்சிட்டு வந்து சண்டைப் போடுறாரு, குழந்தைகளைப் போட்டு அடிக்கிறாரு. தட்டிக்கேட்ட சிற்றன்னையையும் அடித்து சண்டைக்கு இழுக்க ஒரு கட்டத்துல சண்டை முத்திப்போயி கோபத்துல மண்ணெண்ணெயை ஊற்றி அந்த இரண்டாம் தாயை எரித்தே விடுகிறான் அந்தப் படுபாவி..

எப்படியேனும் அந்த இரண்டாம் தாயை காப்பாற்றப் போராடும் செங்கொடியும் அவளுடைய தங்கச்சும் தீப்புண்ணிற்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள், அப்போது அவளுக்கு பதினோரு வயது. நேரே காவல்நிலையம் சென்று நடந்ததைக் கூறி தனது தந்தையை சிறையிலிட்டு தண்டனை வாங்கித் தருகிறாள் செங்கொடி.

கடைசியில் யாருமற்ற நிலையில் அவளுடைய சிற்றப்பா எடுத்தவளை வளர்க்கிறார். சமுதாயப் பார்வைகள் விரிகிறது செங்கொடிக்கு. மக்கள் மன்றத்துல சேர்ந்து பல தொண்டாற்றி வரும்போதுதான் ஈழத்துப் பிரச்சனைகள் அவளுடையக் கண்ணில்படவருது. முத்துக்குமார் தீக்குளிக்கிறார்.

அந்த சம்பவம் அவளுடைய மனதில் மிக ஆழமாகப் படுகிறது. எல்லா நேரத்திலும் ஆசானாக இருக்கும் தனது சிற்றப்பாவை நோக்கிக் கேட்கிறாள்; “ஏம்பா, ஏதோ ஒரு கட்டத்துல எல்லோரும் பொங்கியெழுறோம், போராடுறோம், நீதி நியாயம்னு கத்துறோம், பிறகு நாளாக ஆக அது மறந்து அந்தப் பிரச்சனைகளை அப்படியே விட்டுட்டுக் கடந்துப் போயிடுறோமே, பிறகு நமது பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு தான் என்னப்பா? என்கிறாள். அதற்கு யாராலும் பதில்சொல்ல முடியவில்லை.

அந்தச் சமயம் பார்த்துத் தான் இந்த மூவர் விடுதலைக் கோரியப் போராட்டம் எழுகிறது. தானும் கலந்துக் கொண்டு பெரும் ஆற்றலோடு களமாடுகிறாள். ஒரு கட்டத்தில் அரசியலின் அவலநிலைவெடிக்கும் ஆட்டம் துவங்க நீதி வேறாகவும் உண்மை வேறாகவும் திரிந்துவருகிறது. பொங்கி எழுகிறாள் செங்கொடி.

இதை இப்படியே விடக்கூடாது, நீதி வேண்டும். நியாயம் வெல்லனும், எனது அண்ணன்கள் அநீதியால் சாகக் கூடாது என்று முடிவெடுக்கிறாள். எத்தனையோ போராட்டம், எங்கெங்கோ கெஞ்சல், அழை என எல்லாவற்றிலும் கலந்துக்கொள்கிறாள். கடைசியில் எல்லாம் தோற்றுப் போக அவளுக்குக் கடைசியாக மிஞ்சியது; தனது உயிரும் உடலும் மட்டுமே…

அதை கயிலேந்துகிறாள். மண்ணெண்ணெய் ஊற்றினால் அணைத்துவிடுவார்கள் என்று பெட்ரோல் வாங்கி உடலின்மேல் ஊற்றிக் கொண்டு நியாயம் வேண்டும்.. நீதி வேண்டும்.. எனது அண்ணன்கள் மூவரைக் காப்பாற்று.. காப்பாற்று.. என்றுக் கத்தி கூச்சலிட்டவாறே முனகி முனகி தீயில் வெந்துக் கருகிச் சரிகிறாள்…

இங்கே தற்கொலை சரியான தீர்ப்பென்பது வாதமில்லை. அவளை அந்நிலைக்குத் தள்ளியது யார்? அவளைக் கொன்றது யார்? சமூக அக்கறைக் கொண்ட அழுத்தமானப் பெண்ணொருத்தியை அப்படி கருகி சாம்பலாக்கியது யார்? நம் திராணி போதாத அரசியல் செயல்களும் அதைத் தட்டிக்கேட்காமல் மறைமுகமாக ஊக்குவித்த நாமுமில்லையா?

அதை நாம் சரிசெய்யவேண்டும். அரசியல் நேர்மை, நடத்தையில் கண்ணியம், செயலில் பொதுதர்மம், பேச்சில் உண்மை என்று வாழ்ந்தவர்கள் நாம்; தமிழர்கள். அந்தத் தமிழரின் பெருமை காலத்திற்கும் நன்னிலத்தில் நிலைத்தல் வேண்டும். அங்ஙனம் தமிழரின் பெருமையில் ஒன்றான நீதிக்குவேண்டி உயிர்தந்த தமிழச்சி என் செங்கொடியின் தியகாத்தையும் எனது தமிழர் பெருமையில் ஒன்றெனக் கருதி.. இந்த அஞ்சலிக் கவிதையோடு விடைகொள்கிறேன்..

சிநெருப்புக் கொள்ளுதேன்னு
பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவ
பட்டுத்துணிப் பாவமுன்னு
கறுப்புச் சட்டையைப் போட்டவ..

கல்லுமுள்ளு மிதித்து
காலத்துள் காலடியைப் பதிந்தவ
ஐய்யய்யோ வலிக்குதேன்னு –
அதர்மத்தை எதிர்த்து உயிராலச் சுட்டவ..

சுடும்தீன்னுத் தெரிந்தும்
துணிந்து உடலாலத் தொட்டவ
தூக்குக் கயிறு முடிச்சவிழ்க்க
மொத்தத் தீயிலேறி நின்னவ..

மூவுயிரைக் காக்க
தன்னுயிரைத் தந்தவ
என் தமிழச்சி வீரத்தைக் காட்ட
உயிரேந்திப் போனவ..

மரணதண்டனை தீர்ப்பொழிக்க
தன் தலையெழுத்தைக் கலைத்தவ
இனி அழியாப் புகழுக்குள்; நினைவுக்குள்
எம் தாயாக நிலைப்பவள் –

தங்கச்சி செங்கொடிக்கு வணக்கம் கூறி நன்றியோடு விடைகொள்கிறேன்..

குறிப்பு: செங்கொடியைப் பற்றி அரியத் தகவல்களை நேரடியாக ஆராய்ந்துப் பதிந்துள்ள வினவு வலைதளத்திற்கும் நன்றி..
—————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to தமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி…

  1. yarlpavanan சொல்கிறார்:

    தங்களின் சிறந்த பகிர்வை வரவேற்கிறேன்.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s