தீமிதித்தக் கால்களைப்போல் இதயமெரியும்
பால்சுரந்த தாய்மையைப்போல் கண்கள் சிரிக்கும்
அலங்கரித்த மணமகளாய் அவள் தெரிவாள்
வாழ்வின் கதவுகளை வெளிச்சத்தோடு தேவதை திறப்பாள்
மழைநாள் காளானாய் ஆசைகள் பிறக்கும்
மின்னலின் வேகத்தில் ஆயிரம் கனவுகள் வரும்
முடிச்சிடாத தாலிக்குள் வாழ்க்கை வரமாய் அமையும்
முள்வேலி அவசியமின்றி உறவு கண்ணியப்படும்
முற்கால தவம்போல தனிமை இனிக்கும்
மாறுபட்ட கோணத்தில் வாழ்க்கை புரியும்
மனிதரைக் கண்டாலே அவளாய் தெரிவாள்
மிருகங்கள் சிரித்தாலும் சிநேகம் கூடும்
மிச்சமுள்ள வாழ்க்கையின் கேள்விகள் மாயும்
பத்துமாதம் சுமந்தவளும் தோற்றுப்போவாள்
பாதத்திலிட்ட தந்தை முத்தம் மறந்துபோகும்
யாருக்கும் கிடைக்காத ஒருத்தி கிடைத்ததாய் இருக்கும்
யாரென்னச் சொன்னாலும் மனம் அவளை நம்பும்
அவளைமட்டும் நினைத்து நினைத்து எண்ணத் தீயிலெறியும்
அறிவான உணர்வு சிதைந்து கற்பனை கூடும்
கல்லறையில் அவள் பெயரெழுத காலமும் கனக்கும்
இத்தனையும் பொய்யென்றால் காதலிப்பீர்
இல்லையில்லை உண்மையெனில் விட்டுத் தொலைப்பீர்
விடுதலையின் அர்த்தமென்ன சிந்திப்பீரா?
சுயமழியா திருத்தலன்றி வேறில்லை!!
————————————————————
வித்யாசாகர்