சாதியறு; மனதை மனிதத்தால் தை!! (வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 16)

ன்றெல்லாம் ராமநாத செட்டி
லோகநாதப் பிள்ளை
கொழுப்பேறியக் குப்பன்
ஏன் சுப்பனுக்குப் பிறந்த கருவாட்டு பயவென்றுக்கூட
எப்படி எல்லாமோ அழைத்து வாழ்ந்திருந்தோம் – ஆனால்
அப்போதெல்லாம் ஜாதி என்பது குலம்சார்ந்துச் சொல்லப்பட்ட ஒரு பேச்சடையாளமாகவும் பழக்கவழக்கப் பிரிவறிந்து அவரை அணுகி நன்னடத்தைவழியில் அறம் வழுவாத நிலைப்பாட்டிற்கு ஒத்துமே வாழ்ந்திருப்பதாக அறிகிறோம்

அப்போது கூட – அது தொழில்சார்ந்தப் பார்வையாகத் தான் இருந்திருக்கிறது. அதனால் தான் அந்தத் தொழில் மாறுகையில் அவரவருடைய வண்ணமும் மாறியிருக்கிறது ஆரம்பத்தில்..

பெரியோர் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் –
“பள்ளி முத்தினாப் பரையன்
பரையன் முத்தினால் சக்கிலி
சக்கிலி முத்தினாச் சாணான்
சாணான் முத்தினால் கிராமணி’ அதான் சாதி வேறென்ன” என்பார் சிலர்..

இதன் வரிசை சரியா தவறா, இல்லை நீளுமா குறையுமா என்பது தெரியவில்லை, ஆனால் நானிங்கே காண்பது; ஒருவர் தொழில் வேறாக மாறுகையில் அவரின் குலமும் மாறிவிடுகிறது. திறமையால் கீழ்மேல் கலையலாம். அதைவிடுத்து காலம்முழுக்க ஒருவருக்கு தாழ்வான பட்டத்தையே பச்சைகுத்தியதுபோல் அவரை வழிவழியாக சின்னசாதி என்று கீழேயேப் போட்டுவிட்ட இனம் நம் தமிழினமல்ல என்பதைத் தான் நானிங்கு பெரிதாகக் காண்கிறேன். அதைத் தான் “பிறப்பொக்கும்” என்றுத் துவங்கும் 972-ஆம் திருக்குறளில் “பிறப்பினால் எவரும் வேறுபடுவதில்லை; பிறப்பினால் மனிதர்களை வேறுபடுத்துவது தவறு. “உழைப்பே உயர்வளிக்கும்” என்பதை திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

ஆனால், நாமெல்லாம் இப்போது அப்படியா இருக்கிறோம்? சாதியை நாம் சட்டைப் பொத்தான்களைப்போல் தானே நெற்றி வரை மனிதத்தை மூடி குத்திக் கொண்டுள்ளோம்.. அதைவிட அரசு செய்வது வெகு கேவலம்; அசிங்கம்; மானக்கேடு; ஒரு குழந்தைப் பிறக்கும்போதே அது இன்னார் சாதியென்று அரசே வினவி பிறப்புச் சான்றிதழ் முதல் பள்ளிச்சான்றிதழ் வரைக் குத்திவிடுகிறது. அந்த சாதி எனும் விடாதக்கரையாகிப்போன நிறம் மெல்ல கணினியில் ஏறி காகிதத்தில் தூங்கி சாகும்வரை அவனுடைய கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது.

எனக்குத் தெரிந்த ஒரு தம்பி; எங்களூரில் சிறந்தத் தொழிலதிபராக இருக்கிறார். அவர் படித்து தொழில் கற்று முன்னேறி தனது லட்சியக் கனவுகளையெல்லாம் முடிக்கவே வயது முப்பதைக் கடந்துவிட்டது. முப்பது வயதானாலென்ன முப்பத்தியோரு வயதில் மணம் முடிய வழியில்லாமல் இருக்குமே அப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்கிறேன்; என்றார் கிடைக்கவில்லை, வாழவேண்டிய இருபத்தியாறு வயதில் விதவையென்றுச் சொல்லப்பட்டு வாழ்வின் ஆசைகளைவிட்டு ஒதுங்கிநின்று வாழ்கிறாளே அவளை மறுமணம் செய்துக் கொள்கிறேன்; என்றார் கிடைக்கவில்லை, அப்பன் தோள் வலுவிழந்து அண்ணன்மார் கரைகடந்து யாருமற்றவளாய் ஆகி அனாதை என்று பழிக்கிறார்களே அவளை மனந்துக் கொள்கிறேன்; என்றார் கிடைக்கவில்லை. இப்படியே எங்கெங்கோ தேடித் தேடி இன்று நாற்பது வயதைக் கடந்து விட்டார் அந்த அண்ணன்வயதாகிப் போன என் பாசத்தம்பி.

காரணமென்ன தெரியுமா சாதி. எனக்குத் தெரிந்த எத்தனையோ பெண்களைப் பார்த்து அவருக்காகப் பேசிவிட்டேன், அந்த மணமுடிக்கவுள்ள பெண்களுக்குக் கூட அத்தனை சாதி பற்றிய வருத்தமெல்லாம் ஒன்றுமில்லை ஆனால் பெற்றோருக்கு சாதி வேணும். ஐயோ அந்த சாதியா தாழ்த்தப் பட்ட சாதியிலப் போய் எப்படி… என்று விலகிப்போகிறார்கள். அப்படி சாதிக்கு சங்கூதிக்கொண்டு மனிதர்களை மிதிக்கத் துணியும் மனிதர்களை நேரில் சந்திக்கையில் நாணப் பட்டேன். துச்சமென அவர்களையெண்ணி தூர எறிந்தேன். இப்படியும் மனிதரிருப்பர் என்றறிகையில் சாதியைவிட்டு இன்னும் மரணதூரம் விலகிப்போனேன்.

சாதி என்பது என்னை உறுத்தாதவரை அல்லது எனக்கு வலிக்காதவரை அது ஒரு நோயென்பது எனக்கும் முதலில் புரியவில்லை. இன்று நான் வேறு சாதிக்காரன் என்னை யாரும் குறைத்துப் பார்க்கவில்லை, சாதி பற்றியப் பிரச்சனை எனக்கில்லை, எனவே அதன் ஏற்றயிறக்கம் எனது கண்ணிலிருந்து மறைக்கப்பட்டுப் போகிறது. அதையே மாற்றிப் பார்க்கையில் நானொரு தாழ்ந்த சாதியில் என்று சொல்வோருக்குமுன் அப்படிப்பட்டக் குலத்தில் பிறந்திருப்பேனாயின்; என்னைப்போலவே எலும்பு சதை ரத்தமென்று அதே இரண்டு கண் கை கால் மற்றும் ஒரே மூக்கு வாயென்றுப் பிறந்த ஒருவன் நான் மேல் ஜாதிக்காரன் நீ கீழ்சாதிக் காரன் என்று தூர ஒதுக்குவான் எனில்’ அதற்கு தலையாட்டும் முட்டாள்களாக’ உலகிற்கு நாகரீகம் கற்பித்த மூத்தக்குடி இனமான நம் தமிழின மக்களாகிய நாமும் வெறுமே தலையாட்டியிருக்கலாமா?

நான் ஒரு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறேன். எனக்குக் கீழே பணிபுரிபவர்களை ஒரு போதும் அவர்களை எனக்குக் கீழுள்ளவர்களாகப் பார்த்ததில்லை, என்னோடு சேர்ந்து வேலை செய்பவர்கள் என்று மட்டுமே எண்ணம் முடிகிறது. மாறாக அவர்களை எண்ணிலைக்கு ஏற்றும் முயற்சியே எனது கடமைகளில் ஒன்றாக உள்ளதே தவிர; அதைவிடுத்து அவர்களை கீழுள்ளவர்கள் கீழுள்ளவர்கள் என்று சொல்லிச் சொல்லியே அதலப் பாதாளத்தில் தள்ளுவது எப்படி முறையாகும்?

அதுபோலத் தானே இதுவும், வசதியில் திறமையில் வாய்ப்புகளில் மேல் கீழ் வருகிறது, வரத்தான் செய்யும் ஆனால் அதில் இடையுறும் மாற்றம் பொதுவானதாக எல்லோருக்கும் உரித்தானதாக இருத்தல் தானே நீதி?

சரி, அன்று நால்வராய் யிருந்தோம் ஒரு கூட்டில் வசித்தோம், இன்று நான்கு கடந்து, ஐந்து கடந்து, ஆயிரம் லட்சம் கோடியில் மாறி, பறந்து பரந்து உலகம் நிறைந்துப் போனோம். பழக்கவழக்கம் மாறிப்போனது. எல்லாம் வேறுவேறாகிப் போனோம். அங்ஙனம் ஆன நிலையில் திரும்பிப் பார்த்து ஒன்றாக நெருங்கும் தருணம் வேறுபாடு நமக்குப் பெரிதாக, பெரிதுபெரிதாக நெருடுகிறது.

வேறுபாடு பெரிதாகத் தெரிகையில் ஒத்துப் போவோரை நமக்குச் சாதகமாகயிருக்க வேண்டித் தேடுகிறோம், சரி போகட்டும், அது இயல்பு. அதில் மேல் கீழ் கூட வந்துவிடுகிறது. மேலுள்ளவனுக்கு கீழுள்ளவன் சிறியவனாகிப் போகிறான்; எல்லாம் நம் சிறுத்துப்போன அறிவின் அல்லது அகன்று விரிந்திடாத மனதின், உயர்வில்லா எண்ணத்தின், சமபார்வை கொள்ளாதப் புரிதலின் விளைவு என்று வைத்துக்கொள்வோம், எனில்; அதையும் மாற்று வழியில் போராடி கீழுள்ளவனுக்கு மேல் வர ஒரு வாய்ப்பினையும் அதே இயல்போடு வழங்குவதும் பொருத்த நீதியில்லையா?

அங்ஙனமில்லாது இவன் மேல் வரவே அருகதையற்றவன் என்பது எத்தகைய அநீதி இழைக்கும் கொடுஞ்செயல்? எத்தகைய மனிதத்து மீது திணிக்கும் கொடுமை? எவர் திணித்த மானுட முறிவு ஏற்படுத்தும் குற்றமிது?

இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும். ‘சாதியினால் ஒருவரை தீண்டத் தகாதவர் என்று பிரிப்பதை அல்லது தாழ்த்துவதை எதிர்த்து உடனே மறுத்தல் வேண்டும். நமைச் சார்ந்த இந்த நம் சமூகம் தள்ளிய நெடுங்காலப் பள்ளத்தில் பிறந்த ஒருவர் நேற்று சாக்கடை வாரிவிட்டு, இன்று படித்து, நாளை மருத்துவர் ஆவார் எனில் அவரிடம் உயிருக்குப் போராடும் மேல்சாதி என்று சொல்லத்தக்க ஒருவர் மருந்து வாங்கிக் குடிக்க மறுப்பைக் காட்டுவாரா?

காட்டுவார் எனில் அவர் உயிரற்றேப் போகட்டும், அதில் நமக்கு நாட்டம் வேண்டாம். அல்லாதோர் சிந்தியுங்கள்; பின் அதே ஏற்பை இணக்கத்தை நமக்குக் கீழுள்ள வேலை சார்ந்தோரிடமும் நாம் காட்டவேண்டாமா? நமக்குக் கீழுள்ள மனிதர்களையும் அப்படியே சமநிலைப் பார்வையோடுப் பார்க்கவேண்டாமா? அங்ஙனம் பார்க்கப் பழகிவிட்டால் நமக்கு மத்தியில் சாதியின் மூலமாக ஏற்பட்டுள்ள பிளவு நீங்கி மேல்கீழ் விகிதாசாரம் மாறி எல்லாம் மனிதத்தால் சமமே என்றொரு எண்ணம் வராமலாப் போய்விடும்?

வரும். மெல்ல மெல்ல வரும். சாதி என்பது ஏற்ற இரக்கத்தை ஏற்படுத்தாத வரை, இருந்தக் காலம் இருந்துபோகட்டும், இனியும்’ அது வலியேற்படுத்தியப் பின்பும்’ அதை நாம் இன்னொரு முகமாகப் பூசிக்கொண்டு அலட்சியமாக இருந்தோமானால் அந்தப் பழைய சாதியின் கறை ஒருக்காலும் மனதை விட்டு முற்றிலுமாய் எல்லோருக்குமாய் நீங்கவே நீங்காது. அது நீங்காதவரை நாம் மனிதரை மேல்கீழ் இல்லாது சமமாகப் பார்க்கமுடிதல் என்பது உசிதமில்லை. எனவே சாதிவெறியை விட்டு, சாதிப் பற்றினைவிட்டு வெளிவருதல் மட்டுமே மானுடருக்கு பொதுவான விடுதலையை மனமுவந்து மீட்டுத் தரும்.

சற்று இன்றைய பழக்கவழக்கத்தின் படியேக்கூட சிந்தித்துப் பாருங்கள்; என்னதான் திருமணத்தின் போது பழக்கவழக்கங்கள் ஒத்துவரவேண்டும் என்று ஒரே சாதியில் மணமுடித்துவந்தாலும் நூறு சதம் எல்லாமே இருவருக்குள்ளும், இரு குடும்பத்தாருக்குள்ளும் ஒத்துப் போய்விடுகிறதா? இல்லையே. வாழ்க்கையென்பது; புரிதலால் ஏற்படும் நெருக்கத்தின் அன்பில் மதிப்பில் அக்கரையில் கூடி இனிப்பதுதானேயொழிய, ஒத்துப்போவதில், வெறுமனே இசைந்துக் கொள்வதால் இதயம் ஒட்டிக் கொண்டு விடுவதொன்றுமில்லையே.

காலம் முழுக்க உன் வீடு என் வீடு நீ வேறு நான் வேறு என்று கிழவராகி மரணிக்கும் வரை சண்டையிடும் தம்பதியினர் ஒரு சாதியில் நடந்த திருமணத்திற்குப் பின்னும் ஏன் இன்றுவரையிலும்கூட இருக்கத் தானே செய்கிறார்கள்? ஆண் பெண் பேதம், நீ நான் பாகுபாடு, யார் பெரியவர் யார் சிறியவர் எனும் மதப்பு, ஒருவரை ஒருவர் வீழ்த்தும் சூழ்ச்சி என்பதெல்லாம் எந்த இரண்டு உயிர்கள் இணைந்தாலும் இடையே நடந்துவிடும் ஒன்றாகத்தானே இருப்பதை அறிகிறோம்(?)

பிறகு எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த இருவேறுபட்ட பாலினத்தைக் கொண்ட மிருகங்கள் மிருகங்களுமான மனிதர்கள் இணைகையில் அத்தனைச் சிக்கலும் அத்தனை இயல்பில் சட்டென எப்படி விட்டுப்போய்விடும்? பிறகு வெறும் சாதி மட்டும் பார்த்து கட்டிவைத்துவிட்டால் அந்த மாடுகள் இரண்டும் ஒன்றுசேர்ந்து ஒரே தொட்டியிலேயே காலத்திற்கும் தண்ணீர் குடிக்கும் என்பதை மட்டும் எப்படி யார் தவறாக உறுதி செய்துக்கொண்டாரோ தெரியவில்லை.

என்றாலும் முன்நடந்தவைஅத்தனையும் போகட்டும். வாழ்க்கையின் பல சீர்களைக் கற்பித்த பெரியோர்களை முன்னோர்களை இத்தருணத்தில்; மாறியுள்ளப் பல மாற்றத்திற்கிணங்க ஒத்துப் போகாத அதே பழைய முடிச்சுகளை கட்டவிழ்காமலேயே இன்றும் வைத்துக்கொண்டு அதற்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் நம்மையே தவறனைத்தும் சேருமென்றெண்ணி; நமை முதலில் திருத்திக் கொண்டு, நமக்குப் பின்னே வருவோருக்கு விடுதலைப் புரியும் வாழ்விற்காக சிந்திக்கத்தக்க வழியினை விட்டுச்செல்வோம்.

பழைய சாபத்தின் மிச்சம்போல; அன்றேற்படுத்திய சாதிமுறைகள் திரிந்து நடைமுறையில் அதன்போக்கிற்கு இழுத்தார்போல் மாறி திணியப்பட்டு, அதன் பல முகங்களாக இன்று நமை வாட்டி வாட்டி வதைப்பதெல்லாம்  நமக்குக் காலத்தால் நடந்துவிட்ட வேறுபல சதியைப்போல, இதுவுமொரு முற்றாத ஞானத்தால் நமக்கு நாமே இட்டுக்கொண்டநம் உயிர்கொல்லும் நெருப்பே என்பதை முதலில் உணர்ந்து நாமெல்லோரும் சாதியை மறுக்கவேண்டும்.

இப்படித் தான் வாழனும் இதைத் தான் செய்யணும், இது செய்தால் இது ஆகுமென்று நமக்குமேல் நாமே பல பழிகளை பல ரணங்களை பல துன்பங்களை வாரி போட்டுக்கொண்டேதான் இதுவரை வந்துள்ளோம். அப்படி ஒட்டிக்கொண்டு நம் கூடவந்துவிட்ட ஒரு தீண்டாமைதான் இன்றைய நிலையிலுள்ள இச்சாதி முறைகளும் என்பதை நாம் நிச்சயம் புரிந்தேயாகவேண்டும்.

இது இனிக்கிறதா, பின் இது இந்த வகை காய். இது மணக்கிறதா, பின் இது இவ்வகை பூ. இது புளிக்குமா இது அந்த சாதி பழம் என்று கைகாட்டி காட்டி நாம் பிரித்துக்கொண்ட பிரிவு எனும் சொல்தான் பின்னாளில் மனிதரிடம் மட்டும் மனிதரே கொண்டுவிட்ட ஏற்ற இறக்கத்தாலும் மாறாத அல்லது விடாத மனக்கரையினாலும் பெரும்பகுதி பாகுபாட்டையும் உட்கொண்டுவிட்டது. பின் அதற்குக் காரணமாக இனி நாம் யாரைக் கைகாட்டிடினும் அதற்கு நாம் முட்டாள்களாய் இருந்துவிட்ட மடமைத்தனமும் பெருங்காரணமாக ஓங்கிநிற்க; அத்தகைய ஈனச் செயல்களையும், மனிதரிடையே வேறுபாட்டையும் புகுத்தி, காலத்திற்கும் மாறாத ஏற்றயிறக்கத்தை இடைகொண்டு மனித இனத்தை அறுத்துக் கூறுபோடும் எவரையும் இனி அடையாளங்கண்டு புறந்தள்ளுவோம்; முடிந்தால் அவருக்கும் மனிதரிடையே ஏற்படுத்தும் தீண்டாமையுணர்வு தீது, பெருங்குற்றம், பாவச் செயல் என்பதைப் புரியவைப்போம்.

பரம்பரைப் பரம்பரைக்கும் குட்டி குட்டி ஒதுக்கி ஒதுக்கி வைத்துவிட்ட ஒரு பாதி சனத்தின் கண்ணீர்நனைத்த அடிமைத்தன வெப்பத்தின் மூச்சுக் காற்றினுள் வலிமிக்க சாதியெனும் நஞ்சுபுகுத்தி நம் மனிதக் குலத்தை நம் கைகொண்டே நசுக்கும் தீதாகிப் போன நம் குற்றச் செயலுக்கு, அல்லது காலத்தோடு ஒட்டிமாறிய மாற்றத்திற்கு நாமும் உடந்தை என்பதை எண்ணி அச்சப் படுவோம். வெட்கப்படுவோம். இனியேனும் மாறும் முயற்சியை, எல்லோரையும் அன்பால் அணைத்து நாம் ஒன்றே என்று கூடிநிற்கும் நற்பண்பை பொதுவாக உணர்வோம் உலகத்தீரே!

எத்தனையோ நன்மை தீமையை அறிவோம், பேசுவோம், புரிவோம், என்றாலும் எல்லாமே சரியெனில் இடையே கொத்தாக இப்படி பல உயிர்களை சீரழிக்க எங்கிருந்து வந்தது இந்த சாதியினால் நிலைகொண்டுவிட்டதொரு ஏற்றத் தாழ்வு என்பதைப்பற்றி மீண்டும் மீண்டும் சிந்தியுங்கள். முடிவு வரும்வரை ஓயாதீர்கள். அன்று வெறும் அடையாளமாக இருந்தது சாதி வைத்திருந்தோம், அது தவறோ சரியோ போகட்டும், ஆனால் இன்றும் ஆட்களைக் கொல்லும் நஞ்சு அதுவெனில் அதை உடனே ஒதுக்கி வைப்போம்.

பிறக்கும்போது ஒரே ஒத்த இயற்கையின் நியதிப்படி தான் எல்லோரும் பிறக்கிறோம்; அதிலிருந்து வளர்கையில் ஒருவர் இறங்கினால் ஏறியோர் மீண்டுமிறங்கி இறக்கத்தில் உள்ளோருக்குக் கைகொடுப்போம், ஏற்றத்தாழ்வினை அடியோடு வெறுப்போம், சாதி எனும் ஏற்றயிறக்கத்தால் சாயும் மனிதத்தை நேராக்கி எல்லோரின் வாழ்விற்கான நன்மையையும் எல்லோருக்கும் அடையத் தருவோம்.,

சாதி மறுப்புத் திருமணத்தை இருவரின் இருபாலரின் மனமொத்து’ உறவொத்துப் போகையில் உடனே மறுப்பின்றி ஆதரிப்போம்., மரமும் செடியுமென் ஜாதி என்று வாழ்ந்த எம் தமிழரின் பெருமைய எக்காலத்தும் உலகின் எட்டுத் திக்கிலும் காத்துநிற்போம். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றுச்சொன்ன அய்யன் வள்ளுவனின் வழியில் வீறுநடை போடுவோம். வாழ்க்கை எந்தவொரு பிளவையும் வைத்திருக்காது நம் அனைத்துயிர்க்கும் வசந்தமாகவேயினி வந்துவந்துப் போகட்டும்! வாழ்க மனித குளம்! வளர்க தமிழரின நன்னடத்தைகள்..
——————————————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், வாழ்வியல் கட்டுரைகள்! and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s