வியர்வையால் சமைத்த உலகமிது
வெற்றியால் முத்தமிட வாருங்கள் தோழர்களே..
முயற்சியால் நிமிர்ந்த முதுகுகள் இவை
வளர்ச்சிக்குப் பின்னிருக்கும் வலி மறக்காதீர் உறவுகளே..
எதிர்த்ததால் புதைக்கப்பட்ட உயிர்களுள் முளைத்தத்
துளிர்கள் உழைப்பாளிகள் உழைப்பாளிகள் மட்டுமே..
உலகின் மூலைமுடுக்கெங்கும் இரக்கமின்றி
குடித்த ரத்தம் உழைத்தோரின் ரத்தம் ரத்தமே..
அறியாமையை நங்கூரமாக்கி உழைத்தோரின்
ஆசையினுள் செலுத்திய –
அதிகாரக் கப்பல்கள் எத்தனை எத்தனையோ..
அரசு அடித்தால் அடிவாங்கி
ஆணை பணித்தாள் பணிந்துப்போய்
இட்ட இடத்திலெல்லாம் தலைமுட்டி முட்டி செத்த
சர்வாதிகாரத்து சாட்டைக்குள் சிக்கிய தலைகள்
எனது ஏழையின் தலைகளே..
சாதித் தகராறா உழைப்பாளிகளைக் கொல்
மதுதடுப்புப் போராட்டமா உழைப்பவன் முன்நிற்பான்
ஓங்கி அடி..
சாலை அமைத்தல்
ஓலைப் பின்னுதல்
சாக்கடை அள்ளுதல்
தங்கச் சுரங்கம் போதல்
அணுமின் உலையில் சாதல் என அத்தனைக்கும்
இறையாகும் எனதுழைப்பாளி வர்க்கத்திற்கு
எதிர்வினை தேடுகிறேன்;
மினுக்கும் தங்கத்திலும்
பசிக்கும் வயிற்றின் ஈரத்திலும்
படிக்கும் புத்தக வாசனையிலும்
மறைக்கும் மானத்தின் சேலையிலும் பல ஏழை
உழைப்பாளியின் எழுதப்படாத வரலாறு இருப்பதை
கண்மூடிப் பார்க்கிறேன்;
இரத்தம் சொட்டல்
வியர்வையில் பூமி நனைதல்
உழைத்தல் உழைத்தல் என எல்லாம்
இனியும் நடக்கும்
நடக்கட்டும்;
நமது காலடிகள் அவர்களை நசுக்காது
பதியப்படுமெனில்
காலத்துள்
வாழ்ந்தவர்கள் பட்டியலில் நம் பெயரும் பதிந்துப்போகும்!
———————————————————
வித்யாசாகர்
எதிர்த்ததால் புதைக்கப்பட்ட உயிர்களுள் முளைத்தத்
துளிர்கள் உழைப்பாளிகள் உழைப்பாளிகள் மட்டுமே.
LikeLike