வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (1)

வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்..
(குவைத்)

சாதாரண மனிதரின் கனவுகளுக்கும் கைகால் முளைக்கவைத்து வாழ்க்கையை வண்ணமாக்கிவிட்ட உலகநாடுகளுக்கு மத்தியில் தன்னை முதலிடத்திலேயே வைத்திருக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளுள் குவைத்தும் முதலான ஒரு நாடு என்றால்; அங்கே வந்து தனது வாழ்க்கையை விதைத்துக் கொண்டோரால் அதை மறுக்கமுடிவதில்லைதான்..

கலர் டிவியில் ஆரம்பித்த வண்ணமயமான கனவு வெளிநாட்டுக் கனவு. பிடிச்சோற்றில் போதை கலக்கும் சாராயத்தின் ஒவ்வொரு மூடியின் மணத்தையும் கால்மேல் கால்போட்டுக்கொண்டு நுகர்ந்துப்பார்த்த அதிகாரக் கனவு அது. பசி என்பதைக் மறந்து’ பணம் பணம் என்றே ஓடி’ இரத்தத்தை வியர்வையாய் சிந்திக்கொண்டிருக்கும் வலி தாளாப் பயணம் எங்களின் வெளிநாட்டுப் பயணம்..

அம்மா தாலியை அடகுவைத்து, அக்காவுக்குப் புதிய தாலிவாங்கி, தங்கைக்கு வரன் பார்த்து, இன்னும் தாலிக்குப் பின்னான சேதியெல்லாம் சேரச்சேர தனது வாழ்க்கையை உதிரும் முடிகளோடு உதிர்த்துக் கொண்ட வலியது.

.வீடூ கட்ட ஆசை, வீடு வாங்க ஆசை, மனைவாங்க ஆசை, பொருள் சேர்க்க ஆசை, ஆசை ஆசையென்று வயதுகளை அடுக்கி அடுக்கி வருடத்தை வெளிநாடுகளில் தொலைத்து விட்டு வறண்ட ஏக்கத்தில் கிடைத்த பாசத்தின் மிச்சத்தில் கடமையாகவே தனது திருமணத்தை நடத்திக்கொண்ட, நனைந்த பல தலையணையின் ஈரமது..

தொலைபேசி கண்ணீரில் நனைந்து, கடிதங்கள் நினைவுகளில் ஊறி, காற்றெங்கும் பரவிய ஏக்கத்தின் உச்சத்தில்; இதயம் நிறையாத பாசத்தின் மிச்சத்தில்; தீரா மனப்புண் துன்பமாகவே போகிறது; எங்களின் ஊர்விட்டுப் போதலின் துன்பம்..

இதலாம் கடந்தும் நாங்கள் வெல்லும் இடமொன்று உண்டு, அதுதான் நாங்கள் ஊர்போகும் விடுமுறைக் காலம்.

அம்மாவுக்கு இனிப்பு பிடிக்கும், அப்பாவுக்கு தோள்துண்டு வாங்கணும், அக்காதங்கைக்கு புடவையும்’ குழந்தைகளுக்கு துணிமணியும், தின்பண்டமும் கூடுதலாக கணினியும் தொலைக்காட்சியுமென இரண்டுவருடத்திற்கு முன் கண்ட கனவுகளெல்லாம் நடந்தேறிவரும் தருணமது. கூரை மாறி’ வீடு இரண்டடுக்கு ஏறி’ வாசலில் சென்று நிற்கையில் அம்மா தங்கை அண்ணி எல்லோரின் முகத்திலும் நாங்கள் சிந்திய வியர்வை மினுமினுப்பாக மின்னும், புன்னகை பூச்சொரியும்.

அம்மா ஆரத்தி கலக்கி அழுதவாறே என்னருகில் வந்து எம்புள்ள வந்துட்டானா என்று விசும்பி விசும்பி அழுதவாறே ஆரத்தி சுத்துவாள், கன்னத்தில் சாரையாக கண்ணீர் வழியும் என்னம்மா என்று கட்டிப்பிடித்துக் கொள்ளத் துடிக்கும் நிமிடங்களில் நாங்கள் வாழ்க்கையை வெகுவாய் வென்றெடுப்போம்..

அப்பா ஓடிவந்து கன்னத்தைத் தாங்கி என் ராசா என்று உச்சிமுகர்ந்து, ‘உள்ளே வாயா..’ என்று அழைத்து மார்போடு அணைத்துக்கொள்வார், தங்கை ஓடிவந்து அண்ணா என்று தாயைக் கண்ட கன்றினைப் போல எகுறி என்மேலே விழுவாள், அக்கா கன்னத்தில் முத்தமிடுவாள், அண்ணிக்கு தரும் நெற்றி முத்தம் அன்பைப் பகிரும், தம்பிகள் ஓடிவந்து நீ விடுன்னா என்று எனது கையிலிருக்கும் சுமைகளை வாங்கி அவர்கள் சுமப்பார்கள், அண்ணன் எனை இழுத்து தன் மாரோடு அணைத்துக் கொள்வார். ஆக, அங்கேதான் விமானமேறத் துடிக்கும் கால்கள் வேகமாய் மீண்டும் முளைத்துகொள்ளும், வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம் தேடி மனசு அலையும்.. குவைத் போன்ற தேசத்தின் வசந்த வாசல்கள் எங்களுக்காகவும் திறக்கும்..

ஆனால் அங்கே நாங்கள் பட்ட அவஸ்தையும் அடைந்த துயரும் வாழ்ந்த வாழ்க்கையும் சொல்லிமாளாக் கதைகளைக் கொண்டவை. நடந்த தெருக்கள் ஒவ்வொன்றும் எங்களின் வாழ்க்கையை தேய்த்தவை. உரசி உரசி வடிவம் கண்ட அந்த எங்களின் கனவுகளும் அந்தக் கனவுகளை நனைத்தக் கண்ணீரும் நெஞ்சைத் தொடுபவை. நீலக்கடல் மோதும் அலைபோன்று நாங்கள் வாழ்ந்த மண்ணின் வாசனையும் வலிகளும் மாறிமாறி வந்துப்போகும் கதையினி’ எங்களை விதைக்கப்பட்ட நிலத்தின் வழி இங்கே எழுத்தாகத் தொடரும்..
———————————————————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. and tagged . Bookmark the permalink.

1 Response to வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (1)

 1. வணக்கம்
  அண்ணா

  பதிவை படிக்கும் போது ஒவ்வொரு மனிதனின் வெளிநாட்டு வாழ்கையின் எதிர்பார்ப்புக்கள் தான்… இருந்தாலும் பதிவில் ஆழ்ந்த சோகம் புதையுண்டு உள்ளது. நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s