(குவைத்-3-மரணம்)
கோடி கோடி பணமிருந்தாலும் கூரையுரசி மேகம் நடந்தாலும் காலை வாறும் காலன் வந்து வா என்றழைக்கையில் போவென்று மறுக்கமுடியா மனித இனம் நாம். பிறகெந்த நம்பிக்கையை தோளில் சுமந்துகொண்டு விமானமேறினோமோ நாங்களெல்லாம்(?) தெரியவில்லை. மரணம் நெருங்கிவிட்ட சிலருக்குத் தான் மரணித்தல் பற்றியதொரு உயிர்பயத்தையும் நன்கறிய முடிகிறது. அதிலும் தான் இறப்பதைக்காட்டிலும் வேதனை உடனிருப்பவர் இறந்துவிடுவது. வீட்டிலிருக்கும் அம்மா ஒருநாள் இல்லையென்றாலே அந்த வீடு கலையிழந்துப் போகையில் காலத்திற்கும் அந்தம்மாவை விட்டுப் பிரிதலென்பது மரணத்தைக் காட்டிலும் மிகக் கொடூரமானது.
பிறப்பும் இறப்பும் பற்றி அறியாதார் யாருண்டு? பிறக்கையிலேயே மரணத்தையும் உடனெழுதிக் கொண்டுவந்தவர்கள் தானே நாமெல்லோரும்? மரணம் ஒவொரு வீட்டிலும் அழுது முடிப்பதாகவோ அல்லது மெல்ல மறப்பதாகவோ இருந்தாலும் உள்ளிருந்து குத்தும் வலி மீளாத் துயரத்தை தீராது வைத்திருப்பதுதான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்திருகாது. ஆனால் எங்கோ சென்று யாரோடோ வாழ்ந்து எனக்கு வந்தால் என்னாகுமோ என்று எண்ணி பயமுறும்வண்ணம் உடனிருப்பவர் மரணித்து தனது கட்டிலுக்கு மேலிருக்கும் கட்டிலிலோ அல்லது பக்கத்து அறையிலோ கிடப்பதென்பது வாழ்க்கையை ஒற்றை நொடியில் திண்றுகொள்ளக் கூடியதல்லவா?
வெளிநாடுகளுக்கு ஒப்பந்தப் பணியாளர்களாக வரும் பட்சத்தில்; யாருடைய பிரச்சனையிலும் தலையிடமாட்டேன், என்னால் எந்த கூட்டு சதியோ பழிக்கு ஆளாவதோ பிறரோடு சேர்ந்து நிறுவனத்தை எதிர்ப்பதோ எல்லாம் இருக்காது என்று எழுதிக் கொடுத்துவிட்டே தாய்நாட்டிலிருந்து வெறும் சதையாகவும் துடிக்கும் நரம்பாகவும் விடைபெற்றுவருகிறோம். மீறியும் முறுக்கெடுக்கும் தன்மானமானது ஊரில் கட்டிவிட்டுவந்தப் பணத்தையும் மறந்து சிலநேரம் வெளியெட்டிப் பார்த்துவிட, போட்ட துணிமாறாமலே விமானமேறி ஊர்வந்த கதைகளும் ஏராளமுண்டு.
ஆக நூறு ஆட்டிற்கு மத்தியில் அங்ஙனம் வெட்டப்படும் ஒரு ஆட்டின் தலை காட்டிய பயம் மீதிய மொத்த ஆட்டையும் அவர்கள் எண்ணியவாறே அடக்கி ஆளத்தக்கத்தான் எங்களின் அடிமைத்தன நிலை வெகுவாக அமைந்துவிடுகிறது.
எனவே எது நடப்பினும் சற்று பின்நகரும் கால்களோடுதான் எங்களின் அதிகபட்ச பணம் நோக்கியப் பயணம் அமைவதுண்டு, அவ்வேளைகளில் கண்முன்னே நடக்கும் கொல்லை, கொலை, அடிதடி, ஏற்றயிறக்கம், மொழிசார் பாரபட்சம் போன்றதல்லாது எங்கேனும் நடந்துவிடும் சில துர்மரணமென எதிலும் எங்களின் கால்கள் உணர்வாக முன்நிற்க முடியுமேத் தவிர முழுதாகப் போய்நின்று நியாயம் கேட்டு பேசிவிடவெல்லாம் முடிவதில்லை.
ஒருமுறை எப்போதுமே குடித்துத் திரிந்த ஒருவன் குடிப்பதை நிறுத்திவிட்டமையால் இறந்தான். அவனை உடனிருந்தோர் காப்பாற்ற முடிந்தும் காப்பாற்றாது விட்டனரெனில் அவர்களெல்லாம் உணர்வோடு வாழ்ந்துதான் என்ன பயன்?
பொதுவாக குவைத் நாட்டைப் பொருத்தவரை மது அருந்துதல் என்பது கண்டிக்கத்தக்கதொரு குற்றத்திற்கு உட்பட்டதாகும். சட்டவரம்பு படி மது அருந்த அனுமதியற்று இருப்பினும் குடிப்போர் தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளமுடியாமல் சட்டத்திற்கு புறம்பாக அவர்களே மறைமுகமாக காய்ச்சி குடிக்கவும் விற்கவும் செய்கின்றனர். சிலர் சட்டத்திற்கு புறம்பாக விற்போரிடத்தில் அதிகவிலைக்கு வெளிநாட்டு சாராயத்தை குடிக்கின்றனர். சிலர் முகச் சவரம் செய்தப்பின் தடவப் பயன்படுத்தும் ஜாக்சன் எனும் அதிகபட்ச ஆல்கஹால் கலந்த திரவத்தோடு குளிர்பானங்களை கலந்து குடித்து வெகுவிரைவில் பார்வையை இழப்பதும் ஈரல் வெடிப்பதும் பையித்தியம் பிடித்து அலைவதுமாகக் கூட உள்ளனர். காவல்துறைக்கோ அரசுசார் உயரதிகாரிகளுக்கோ முழுவதுமாகக்கூடத் தெரியாமல் இப்படியொரு உயிர்கொல்லும் நஞ்சினை தினந்தோறும் குடிப்போரும் பாலைவனப் பகுதிவாழ் குடியிருப்புகளில் அதிகமாகவே உள்ளனர்.
ஆனால் இதெயெல்லாம் இன்று குவைத்தின் அரசிடமோ காவல்துறையிடமோ முறையாகத் தெரிவிப்போமேயானால் அதை முழுதாக மறுக்குமளவிலும், சொன்னதற்காக நமைக் கூட முன்வந்து தண்டிக்கும் தீவிரத்திற்குமே தனது சோதனையை முடுக்கிவிட்டுக் கொண்டுள்ளது குவைத் அரசு. ஆயினும் அவர்கள் அறிந்தும் அறியாமலும் குடிப்பவர்கள் குடித்துக் கொண்டும் இறப்பவர்கள் இறந்துகொண்டுமே இருக்கின்றனர் என்பதே சோகம்.
ஆக அங்ஙனம் அந்த தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்த ஒருவன் பெரிதாக தான் பாதிக்கப்பட்டுவிட்டதை அறிந்து குடிப்பதை நிறுத்திவிட்டு ஒரு பத்து பதினைந்து தினத்தில் ஊர்சென்றுவிடலாம் என்று முடிவுசெய்கிறான். நான்கைந்து நாளில் கைகால் நடுங்கி தனியாக பேசி பிதற்றும் நிலைக்கு தள்ளப்பட மருத்துவரை அணுகினால் உன்னுடைய ஈரல் கடுமையாக பாதித்துவிட்டது, மூளைக் கோளாறு ஏற்பட்டுவிட்டது இனி ஒன்றும் செய்யயியலாது நீ ஊர்போய் முறையாகப் பார்த்துக்கொள் என்றுசொல்லி கைவிரித்து விடுகிறார்.
தற்காலிகமாக உட்கொள்ளத்தக்க சில மருந்தினை வாங்கிக்கொண்டு ஓரிரண்டு நாட்களுள் ஊருக்குப் புறப்பட தன்னை தயார் செய்கிறான் அவன். உடல்நிலை மேலும் மோசமாகிப்போக உடனிருக்கும் அறைவாசிகளுக்குச் சொல்ல அவர்கள் அதற்கு முன் அவன் குடித்துவிட்டு செய்த தகாத செயல்களால் அவனை உதாசீனப் படுத்தி வெளியே போவென்றுச் சொல்லி வெறுத்தொதுக்கி விடுகின்றனர்.
வேறு வழியின்றி கிடைக்கும் மருந்துகளை தின்றுவிட்டு ஊர்போக பயணச் சீட்டு கடவுச் சீட்டெல்லாம் பெற்றுக்கொண்டு அவன் விமான நிலையம் செல்கிறான், அங்கே அவன் நிதானமாக இல்லாததைக் கண்டு விமான நிறுவனத்தின் பணியாளரால் அவன் குடிதிருப்பதாக எண்ணி நிருத்தப்படுகிறான். தான் குடிக்கவில்லை உடல்நலம் மோசமாக உள்ளது உடனே ஊருக்குப் போகவேண்டும் என்று கெஞ்சி அவன் வாதாடுகிறான். அப்படியெனில் முதலில் போய் உனது மருத்துவம் பார்த்த இடத்திலிருந்து உனது உடல்நிலவரம் குறித்த ஒரு கடிதத்தை பெற்று வா,, அதின்றி உனை அனுமதிக்க இயலாது என்று திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
வேறு வழியின்றி வீட்டிற்கு வந்து பெட்டியை வீசிவிட்டு கட்டிலில் சரிகிறான், வலி தாளாமல் பிதற்றுகிறான். கட்டிளின்மேல் இங்குமங்குமாய் புரளுகிறான். அருகில் படுத்திருந்த அறைவாசிக்கு அவனுடைய சப்தம் தூக்கத்தை கெடுப்பதாக இருந்தமையால் எழுந்து மின்விளக்கிட்டு பார்க்கிறான், அவனின் நிலை சற்று மோசமாக இருப்பது தெரியவருகிறது. என்றாலும் இந்நேரத்தில் இவன் எங்கு குடித்துவிட்டு எப்படி வந்தானோ யாருக்குத் தெரியுமென்று எண்ணிக்கொண்டு தனது அலைபேசியில் ரிக்கார்டிங் பொத்தானை அழுத்தி அவனுக்கு அருகில் வைத்துவிட்டு அவன் படுத்து உறங்கி விடுகிறான்.
நள்ளிரவில் அவனுக்கு திடீரென உயிர்போகும் வலி வருகிறது. துடிக்கிறான், தண்ணீர் வேண்டி அழுகிறான், எழுந்துப் போய் ஒரு குவளை நீர்மோந்துக் குடிக்க இசையாத உடல் மெல்ல மெல்லத் துடித்து தனது மூச்சை நிறுத்திக் கொள்கிறது.
மறுநாள் அண்ணா இங்ஙனம் ஒருவன் இறந்துவிட்டான் இப்படி இப்படி ஆனது என்கிறார்கள். நிறுவனத்தில் சென்று கேட்டால் அவனுக்கு ஆர்ட் அட்டாக் வந்துவிட்டது, அவனை தெரிந்தோர் யாரும் வராததால் பிணத்தை மருத்துவமணையில் வைத்துள்ளோம் என்கிறார்கள். அங்கே ஒரு எகிப்திய நாட்டை சேர்ந்த ஒரு அலுவல் அதிகாரி இருக்கிறான், அவனை நாங்கள் இன்னாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டு நேரில் சென்று தொடர்பு கொள்கிறோம். அவனுடைய மனைவியை அழைத்து அவரோடு தொலைபேசி வழியே பேசத் தருகிறோம். அவர் மனம் தாளாது நிருவனத்திலிருந்து எல்லோரிடமும் தன்னால் இயன்ற தொகையை வசூலித்துத் தருகிறார்.
பல அவசர வேலைகளுக்கு மத்தியில் இவனை இன்னாரென்று பேசி பணத்தை பெற்று அவனுடைய மனைவியிடம் சேர்த்துவிடும் முயற்சியில் மட்டும் அங்குசென்ற எனக்கு நடந்த விவரங்களையெல்லாம் கேள்வியுற்றப்பின் அவனை சட்டென்று பிணமென்று உச்சரித்துவிட இயலவில்லை, உடலை எப்போது அனுப்புவீர்கள் என்றேன், போய் பெட்டி செய்யுங்கள், தூதரகத்தில் பேசுங்கள், கோப்புகள் எல்லாம் தயாரானதும் நாங்களே உங்களை அழைக்கிறோம் என்கிறார்கள். உடன் வேலை செய்தோர் எல்லோரும் ஆளுக்கொரு வேலையாக முயற்சித்து ஒரு வழியாக உடலை அனுப்பவும் பணத்தை பெற்றுத்தரவும் ஏற்பாடு செய்தாகிவிடுகிறது.
அவனைப் பற்றி சொல்லி என்னிடம் உதவி கேட்ட அந்த தம்பி வந்து அண்ணா இதுதான் அந்த ரிக்கார்டிங் கேட்டு பாருங்கள், ‘உயிர்போகும் முன் அவன் என்னென்ன பேசியிருக்கிறான் கேளுங்கள்’ என்றுசொல்லி கொடுக்கிறான். வாங்கி கேட்டேன், இதுவரை அவனின் முகத்தை நான் பார்த்திருக்கவில்லை, முதன்முதலாக அவனுடையக் குரலை கேட்கிறேன், உடம்பெல்லாம் பதறுகிறது. அருகில் அடுத்துத் தூங்கிய படுபாவி மீது சாபம் எழுகிறது. யாருக்கு இங்கே எண்ண நிலையோ யாரை யார் குறை சொல்வதோ என்று மனதால் விதியை நொந்துக் கொண்டு, அந்த உதவி கேட்டு வந்த தம்பியை தெய்வம் மாதிரி வணங்கப் பார்க்கிறேன். அவனுக்கு ஒரு பெண்குழந்தை இருப்பதாக சொன்னான். இவனுடைய மரணத்தால் கிடைக்கும் பணம் அவன்பட்ட கடனை அடைக்க உதவும் என்று சொன்னான். ஊரில் அழைத்துப் பேசினோம், மனைவி கதறி அழுகிறாள். அலைபேசியை துண்டித்துவிட்டு அவன் கடைசியாய் பேசியதை யாருக்கும் காட்டாதே என்றேன். அது இன்னும் எனது அலைபேசிக்குள் ஒரு உலகாய துயரத்தை அடைத்துக்கொண்டு கிடக்கிறது.
இங்கே வேலை மட்டுமல்ல தலையெழுத்து திரிந்துவிட்ட சிலருக்கு மரணம் கூட மலிவு தான். இங்கே வந்து நூறு பேர் சம்பாதித்து வளர்ந்ததை சாதித்ததைப் பார்த்திருக்கிறோம், அதலாம் வாங்கிய சம்பளப் பணத்தைப் போலவே மனதிலிருந்து தானாகக் கரைந்துப் போகும். ஆனால் யாரோ ஒன்றிரண்டு பேர் இறந்ததைக் கண்டிருக்கிறோம். அது தீராதக் கடனைப் போலவே நெஞ்சுள்லிருந்து உயிரை அறுத்துக்கொண்டே வருகிறது..
—————————————————————————————– தொடரும்..
வித்யாசாகர்