இந்த இரவைக் குடிக்க
ஒரு துளி விசமிருப்பின் கொடுங்கள்
குடித்துவிட்டு கீழே சரிகையில்
பொழுது விடியும்;
விடிந்தால் அம்மா வருவாள்,
இத்தனை நாள் –
அவளைவிட்டுப் பிரிந்திருந்த சோகம்
நெஞ்சை அடைக்கும்,
அம்மாவைப் பார்க்காதிருந்த பாரம்
கண்ணீராய் உயிருருக வழியும்,
கலங்கியக் கண்பார்த்து அம்மா
துடித்துப்போவாள்’
ஈரம் நனைந்தப் பார்வையால்
எனைத் தொடுவாள், தூக்கி நிறுத்தி
ம்ம்.. என்னைப் பார் என்பாள்’
நான் மீண்டும் எனை
உயிர்பித்துப் கொள்வேன்,
அவள் அழைத்து
வா என்றதும்
அதிர்ந்து எழுந்து அவள்முன் நிற்பேன்,
அவள் இல்லாதிருந்த நாட்களின்
கதையையெல்லாம்
அவளிடம் வாய்நிரையச் சொல்வேன்
அம்மா ‘என் பிள்ளையென்று’ ஆசையோடு கேட்பாள்
கன்னம் தடவி உச்சிமுகர்வாள்
என் சிரிப்பு கண்டு சிரிப்பாள்
அம்மாவின் மடியில் தலைவைத்துக் கொள்வேன்
அவளின் சேலை வாசத்தில் – உலகத்தின்
வாசம் உணர்வேன்
அவள் தொடுதலில் உடம்பெல்லாம்
நாட்களும் வருடமும் ஆயுள் ஆயுளாக
முளைத்துக் கொள்ளும்,
அவளின் தொடுதலின் ஸ்பரிசத்தில்
அவளின் கண்முன்னே
உயிர்பூத்துக் கிடப்பேன் நான்;
அதுவரை என்னைப்
போகவிடுங்கள்,
இப்போதைக்கு –
ஒரு சொட்டேனும் விஷம் கொடுங்கள்
அவளில்லாத இரவை
அந்த விசத்தோடு குடித்துவிடுகிறேன்!!
———————————————————–
வித்யாசாகர்