மழைக்காலம்
மரணத்தின் வாசம்
மணற்தடமெங்கும்
மரக்கட்டை சாபம்;
மழைக்காலம்
மரண ஓலம்
குளங்குட்டை தோறும்
தவளைகள் ஏலம்;
மழைக்காலம்
பூக்களெல்லாம் பாவம்
உதிர்ந்து நனைந்து
உயிரோடு சாகும்;
மழைக்காலம்
மின்கம்பி அறும்
மின்வெட்டிற்கு முன்பாக
காகத்தின் சிறகெரியும்;
மழைக்காலம்
துண்டுதுண்டாய்ப் போகும்
மண்ணுக்குச் சாமி
மண்புழு மழைநீரில் நாறும்;
மழைக்காலம்
மாடும் கன்றும் – வெளியே
கொசு கடிக்க வாழும்,
கரந்தப் பாலில் மனிதம் சர்க்கரையால் இனிக்கும்;
மழைக்காலம்
கூரைகள் ஒழுகும்
ஈரவிறகில் சிறுமியின்
பசிகூடப் புகையும்,
மழைக்காலம்
மண்ணெண்ணையில் நெருப்பு வாங்கி
அவசரமாய் உலை கொதிக்கும்,
போதாத அரிசியால் சாதம்
கேட்காமலே கஞ்சாகக் குழையும்;
மழைக்காலம்
மாடிவீட்டில் வரும்போது
வசந்தமாகவே உள்ளேவரும்,
கூரைக்குள் மட்டுந்தானோ
காய்ச்சலாகக் கொதிகொதிக்கும்;
மருந்துவாங்கக் கண்ணீர்
யாசகமும் கேட்டுநிற்கும்
கூடிப்போகும் வட்டிக்கடனில்
இருக்குமுயிரை மெல்லவிடும்;
பாரபட்சத்தால் இயற்கையின்
புனிதம்கூட பூதமாகும்,
மழை பெய்யப் பெய்ய – ஈரத்தில்
மனசாட்சி மிகநன்றாக வேகும்!!
——————————————————————–
வித்யாசாகர்
சிறந்த பதிவு
தொடருங்கள்
LikeLike
மிக்க நன்றி யாழ்..
LikeLike