பிரித்துவிட்டேன்,
மொழி
பிரித்துவிட்டேன்,
மதம்
பிரித்துவிட்டேன்,
சாதி
அட நன்றாகவே பிரித்துவைத்திருக்கிறேன்;
வீட்டில் உற்றுப் பார்த்தால்
ஐயோ; அங்கே ஆயிரம் பிரிவு..
அதைப் பற்றியெல்லாம்
எனக்கெதற்கு வெட்கம் மானம் சூடு
சொரனையெல்லாம்.. (?)
பிரிவிலும்
பிளவிலும்
விழுந்து எழுந்து எப்படியோ
சாமி கும்பிட்டு பெரியாளாகி விடலாமென்றோ,
திரைப்படம் கண்டு
அறிவைப் பெருக்கிக் கொள்ளலாமென்றோ,
உழைக்காவிட்டாலென்ன
அம்மா உணவகம் போதுமென்றோ
சாமிக்கும் பேயிக்கும்
போலீசுக்கும் திருடனுக்கும் பயந்து பயந்து
ஒதுங்கி ஒதுங்கி,
வயிறு நிறைய சுயநலத்தையும்
மனசு நிறைய மாசுகளையும் ஏற்றிக்கொண்டு
மாடுகள் இழுத்து ஓடும்
இலக்கு தெரியாப் பயணத்தில்
மெத்தப் படித்தவனாகவும்
யாரோ விரட்ட விரட்ட
தன்னை பெரிய அறிவாளி என்று எண்ணியவாறு
ஓடும் –
எனது பிள்ளைக்கு நான் அப்பா.. அம்மா..
அவ்வளவுதான்’
வேறென்ன வேண்டும்?
ஒருவேளை –
குபீரென தீப்பற்றி ஏதேனும்
வயிற்றிற்குள்ளோ
மனதிற்குள்ளோ எரிந்தால்
காலடியில் கிடக்கும் மனசாட்சியை
போட்டு ஒரு மிதி மிதித்துக்கொண்டு
மீண்டும் வேறொரு வழி தேடி
ஓடிக்கொண்டே யிருப்போம்..
எங்கோ யாருக்கோ
எப்போதேனும் ஞானம் வரும்
வந்தால் அப்போது வந்து அவர்
நம்மை
நம் நாட்டை
உலகையெல்லாம் திருத்திக் கொள்வார்..
நமக்கு
நம் சாதி முக்கியம்
மதம் ?
முக்கியம்
இனம் முக்கியம்
இருக்கும் உயிர் விட்டுப்பிரியாதவரை
இப்படியே வாழ்ந்து போனால் போதும்;
சூரியன் நிலா மழை
சிட்டுக்குருவி
கடல் காற்று இலை
மரம்
சன்னல்கள்
அது வழியே தெரியும் உலகம்
உலகத்துள் நாம்
நாமிருக்கிறோம்
உலகத்துள் நாமிருக்கிறோம்
உயிரோடிருக்கிறோம்
அது போதும்
அது போதும்..
………..
——————————————————
வித்யாசாகர்