கடவுளை கைவிடுங்கள்
வெறும் பூசைக்கும்
பண்டிகைக்குமானக் கடவுளை
கொஞ்சமேனும் கைவிடுங்கள்;
கேட்டுத் தராத
கண்டும் காணாத
காட்சிக்கு அலங்கரிக்கும் கடவுள்
நமக்கு வேண்டாம் கைவிடுங்கள்;
தீயோர் குற்றம்
தெருவெல்லாம் இருக்க
நல்லோர் மனதெங்கும் நிம்மதியின்றி தவித்திருக்க
நிம்மதியாய் வீற்றிருக்கும் கடவுள்
நமக்கெதற்கு? இப்போதே கைவிடுங்கள்;
கோவிலில் கற்பழிப்பு
தேவாலையத்தில் கொலை
மசூதியில் மதச்சண்டை
உள்ளே சாமி வெளியே பிச்சை
மரணமெங்கும் அநீதி
மாசு அறுக்காதக் கடவுளிங்கே யாருக்கு வேண்டும்?
வேண்டாம் கைவிடுங்கள்;
காசு தேவை
வீடு தேவை
சொத்து தேவை
வேலை தேவை
வசதி தேவை
பொண்ணு தேவை
ஏன், அடுத்தவன் பொண்டாட்டியை காதலிச்சாக் கூட
அதுக்கும் கடவுள்தான் தேவைன்னா
பிறகெகெதற்கு கடவுள் – கண்மூடி விட்டுவிடுங்கள்;
நீங்கள் உண்டியலில் பணம் போடவும்
தலைக்கு மொட்டை இடவும்
நிம்மதிக்கு ஆடு வெட்டவும்
தன்னம்பிக்கையில் நெருப்பு மிதிக்கவும்
சீலர்கள் வணங்கும் கடவுளை
சொந்தக்காலில் மிதிப்பதைவிட – பாவம் போகட்டும்
கைவிட்டுவிடுங்கள் அந்த
சுயநலக் கடவுளை;
உங்களுக்கு முதலில்
கடவுள் புரியட்டும்,
கடவுளை காட்சியாக்கிய படி
வாழப் புரியட்டும்,
கடவுளைக் காட்டும் மதத்தின் சாரமும்
மதவழி காணத்தகும் கடவுளின் சாராம்சங்களும்
ஏதேதென்றும்
எதற்கென்றும் புரியட்டும்,
கைதொழும் மனதிற்குள்
கடவுள் யாதுமாய்
எங்கும் நிறைந்த சத்தியமாய் உள்ளதை
விருப்புவெறுப்பின்றி அறியும் வரை
கடவுளை
கைவிட்டுவிடுங்கள்;
கையேந்தியதும்
பிச்சைப்போடுவது கடவுளின்
வேலையல்ல,
பிச்சை விடுபட இச்சை அறுபட
ஒருமுகப்பட்டு உயிர்மூச்சு வழியே
உள்நின்றுப் பார்ப்பதில் –
கடவுள் ஏதென்றுப் புரியும்,
அது சமதர்மமாகப் புரியாதவரை
கைவிட்டுவுடுங்கள்
நீங்கள் சண்டைக்கும் சாட்சிக்கும்
வெறும் –
கற்களாக மட்டும் வைத்திருக்கும்
கடவுள்களை!!
———— —————————-
வித்யாசாகர்
அருமை!
LikeLiked by 1 person
நன்றி உமா..
LikeLike