வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 18

சமூக ஓட்டைகளை சிந்தனையால் மூடுவோம்..

லகில் உயிர்கள் தோன்றி கோடானக் கோடி வருட அளவைக் கடந்து அமர்ந்துகொண்டும், வெறும் தற்போது நமக்கு அறியக் கிடைத்துள்ள இந்த ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளை மட்டுமே அதிகமாக கையிலெடுத்துக்கொண்டு, இன்றைய வாழ்க்கையை அளவிட்டுக்கொண்டு, நாளைய வாழ்விற்கான தீர்மானங்களை தேடிக்கொண்டு, முடிச்சவிழ்க்காமலே பல சிக்கல்களின் பிடியில் கை வேறாகவும் கால் வேறாகவும் கோர்க்கப்பட்டுள்ள நாமின்று நமது மூச்சுக்காற்றை உள்ளிழுத்து வெளியே விடக்கூட இன்னொருவரின் பாடம் அவசியப்படும் நிலைக்குத் தள்ளிவிடப்பட்டு, அசையும் கொடியாகவும்’ மணக்கும் மலராகவும்’ இனிக்கும் பழமாகவும்’ இருந்த நம்மை; வெறுக்கும் பொருளாக மாற்றிக் கொண்டும், நமைப் பெற்றத் தாயாக எதிர்நிற்கும் இயற்கையை, நமக்கான நீர் நிலம் காற்று வானம் நெருப்பெனும் இயற்கையை வதைத்து வதைத்து மனித இனமே இன்று அழிவின் பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறதே இது வருத்தப்படத்தக்கதொரு தருணமில்லையா..?

நம்பிக்கையை வலுக்கச் செய்து, அறிவியலை செயபாட்டுமுறை வழியே புகுத்தி, பிறரை நல்லதொரு பாதைக்கு மாற்றி, உனை நீ வணங்கு என்று இரு கை குவித்துக் காட்டிய மூதாதையருக்கு’ நாமே சென்று மாலை போட்டு மஞ்சள் படைத்து தனது நன்றியை’ மெச்சுதலை’ மனது நிறைந்த மதிப்பை கூட்டி கூட்டி கூட்டி கூட்டிக்கொண்டே வந்து’ எல்லோரையுமே இன்று ஏட்டிக்குப் போட்டியான கடவுள்களாக்கிவிட்டு, எனக்கென்ன என நாம் வாழும் வாழ்க்கை எத்தனை சரியானது..?

இன்று பார்த்தால் எத்தனை சாமி, எவ்வளவு கோவில்கள், என்னென்னப் பூஜை; எல்லாம் ஏதோ பக்தி கடந்து சுயநலத்தில் பெருகிப்போனதாகவே பார்க்கக் கிடைக்கிறதேயொழிய பக்தியால் மட்டுமே கோவிலுக்கு வருவதாக எல்லோரையும் பார்க்கையில் தெரியவில்லை. அதில்வேறு, கோவில்தோறும் பிச்சைக்காரர்களும் சூழ்ந்திருப்பதைக்கூட நம்மால் தடுத்திட இயலவில்லை. அவர்களின் பசியை தாண்டியும் எப்படி தெய்வம் உள்ளேமட்டுமே இருக்கிறதென்று அங்கே பாலை ஊற்றி வருகிறோம்..?

அதற்காக தெய்வமோ கோவிலோ அல்ல இங்கே குற்றம், தெய்வநம்பிக்கைக்கு பாலூற்றிவிட்டு வாழும் மனிதருக்கு வாழ்க்கயை கொடுக்காமல் இருப்பது நாம் சூழ்ந்து வாழும் நமது சமூகமெனும் கட்டமைப்பின் மீதான குற்றமன்றி வேறென்ன..?

எல்லாவற்றையும் விடக் கொடுமை, கடவுளை வழிபட கோவிலோடு’ வீட்டு அல்லது உள்ளத்தோடு நின்றோமா என்றால் அதுவும் இல்லையே. சுயநலம் பெருகப்பெருக கடவுள் எனதாகவும் உனதாகவும், கோவில்கள் என்னுடையதென்றும் உன்னுடையதென்றும், பிறகு என் எனும் அக்கறை தானெனும் செருக்காக மாற மாற கடவுள் கைமாறி’ பெரியப் பெரிய  கதைகளும் வரலாறுமாய் நமக்குள் வலிக்க வலிக்கத் தானே எல்லோரும் உயிரோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

ஓரிடத்தில் தவறு இருக்கிறது எனில் அதை சரிசெய்தல் கடமையில்லையா..? ஆமெனில் நமைச் சுற்றி நடக்கும் எண்ணற்றத் தவறுகளுக்கு நாமும் பொறுப்பில்லையா? அவன் கடவுள்’ இவன் கடவுள்’ நான் பெரியவன்’ நீ சிறியவன்’ உன் சாமி என் சாமி’ இது பெரிது அது பெரிதென்று இதுவரை பிரிந்துப்போனதென எல்லாமே உணர்தலை முறையாக உணராததாலும், அறிதலை சரியாக அறியாததாலும், புரிதலை தெளிந்துப் புரிந்துகொள்ளாததும், கேள்வியை பிறரின் கருத்தென்று மதிக்காமல் மண்ணில் புதைத்துப்போட்டதுமாய் ஆன காலக்குற்றங்கள் நாம் வந்தப் பாதையெங்கும் நீண்டுக்கொண்டே போனதால்தானல்லவா.. ?

இதற்கொரு முற்றுப்புள்ளியை வைப்பது எவ்வாறு? இதலாம் எவ்வாறு சரியாகும்?

சிந்தியுங்கள். எல்லோரும் சிந்தியுங்கள். நாம் வாழும் இடம் நமக்கானது. நமக்கான அத்தனைப் பேருக்குமானது. இடையே கிழிக்கப்பட்டக் கோடுகளெல்லாம் இனி இல்லாமல் போகட்டும். பிரிவு எனுமொன்றில் மேல்கீழ் நிகழுமெனில் அதை அவ்விடமே கைவிடும் மனிதம் ஓங்கிய நிலையை அடைவோம். மனதின் விரிசல்களை ஒற்றுமையாலும் அன்பாலும் நிரப்பி எதிர்காலத்தில் ஏற்றத்தாழ்வென்பதையே இல்லாமல்செய்யுமொரு நல்மனித சமுதாயத்தை அமைப்போம்.

ஒரு நாய்க்கு சோறு வைத்தால் கூட அது பாதியை தின்றுவிட்டு வயிறு நிரம்பியதும் மீதியை விட்டுத்தான் செல்கிறது. அடுத்த வேலைக்கென எடுத்து வைத்துக்கொள்ளவில்லை. அதற்காக நாம் அப்படி இருக்கமுடியாதுதான். நமது வாழ்க்கை; குடும்பம் உறவு என பிறர்பால் சார்ந்த  சங்கிலிமுறை வாழ்க்கை என்பதால், தனது சுற்றத்திற்கான சுயநலம் சோற்றில்கூட பெருகவே செய்கிறது. எனினும் அதிலிருந்து கொஞ்சத்தை, ஒரு பிடியை ஒதுக்கி இல்லார்க்குக் கொடுக்க முயற்சிப்போம். முதலில் மனதை பிறருக்கென திறப்போம். எல்லாம் நம் சொந்தம், நமைச் சுற்றியுள்ள மனிதர்கள் தானே? நமக்கிருக்கும் பசி, அவர்களுக்கும் இருக்காதா? நமக்குப் போகும் மானம் அவர்களுக்கும் போகாதா?

போகும். ஒரு ஆணிற்குப் போகாவிட்டாலும், பெண்ணிற்குப் போகும் சுற்றத்தைதான் இதுவரை நாம் கட்டமைத்து வைத்துள்ளோம். அது மாறும் வரைக்கும் வலிதான். அதிலும் வறுமையில் தெரியும் உடம்பு பெரிய வலியை தரவல்லது. அதை அன்பாலும் பெரிய மனது கொண்டும் மூடஎண்ணினால், நமது கோவிலும் தெய்வமும் இருக்கும் கோபுரத்திற்கு வெளியே நாலு பிச்சைக் காரர்கள் பட்டினியோடு இருப்பதை எதிர்காலங்களிலேனும் தடுக்க இயலும்.

நாம் நினைத்தால் எது நடக்காது ? நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவையும் நாம்தான் தீர்மாணிக்கிறோம். நமக்கான வீடு, உடை இன்னப்பிற போலவே, நமக்கான அத்தனையும்கூட நம்மால் தான் நடக்கிறது. எனவே எனக்கருகில் இருப்பவரிடம் மாற்றத்தை எதிர்ப்பார்க்கும் மனதை நாமெல்லோருமே விட்டுவிட்டு’ எனக்குள்ளான மாற்றம் என்ன, என்னாலான நல்லவை நடக்க நானென்னச் செய்யவேண்டும் என்பதையே முதலில் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க முனைந்தால், எளியோர் நல்வாழ்வு குறித்தும், இல்லார் பசி பற்றியும், இருப்போர் எடுத்துக்கொடுக்கும் குணம் பற்றியும் ஆலோசித்தால், நம் மகாத்மா அன்று நடுங்கும் குளிரில், அந்த முதுமை வயதில் அவிழ்த்துப்போட்டு நடந்த சட்டைக்கான நீதி இந்த நாம்வாழும் காலத்திலேனும் கிடைத்துவிட சாத்தியமேற்படலாம்..

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்வியல் கட்டுரைகள்! and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 18

 1. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  Like

 2. Dr Murugesan சொல்கிறார்:

  Very Good

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s