ஒருகால தவத்தின் மூச்சு வெடித்து
வானசைக்கும் காற்று பரப்பி
பூமியின் கீழ்மேல் நகர்கையில் – அசையும்
இலைகளால் கிளைகளால் மரம் விலகி
மரமிடித்து
மணல் நகர்ந்தோடி
மேகங்கள் அசைந்து அலைந்து இடித்து
மழை கொட்டி
மலர்கள் பூத்து
உயிர்கள் முளைத்து
விதம் பல உருமாறி
விடும் மூச்சுக்கு எடுத்தக் காற்றை
ஒன்றாய் இரண்டாய் சுவாசிக்கையில்
இங்குமங்குமாய் அசைந்த நகர்வில் –
இயற்கையின் முதல் ஓசை எழுகிறது..
அந்த முதல் ஓசைக்கும் எனது மூத்த மொழி
தமிழுக்கும் எனது வணக்கம்..
ஓசைக்கு காது கொடுத்து
உள்ளிருக்கும் சாமி பார்த்ததும்
ஓசை இசையாகி எல்லாம் வசமாகும்
ஆசை பிறக்கிறது..
ஆசையில் நிற்காத மனம்
கண்ணீரில் நனைந்து
கண்டதை நினைத்து
கண்டதும் சிரித்து – கணம் பல உள்ளூறி
காற்றின் அசைவையெல்லாம் இசையாக்க
ஒரு ஜீவன் பிறக்கிறது
அது ஆராரோ படித்துமுடிகிறது..
ஆராரோ பாட்டுச்சத்தம்
பள்ளியில் நடந்து
வயலில் ஆடி
வேலையோடு புழங்கி
பின்னும்
புதுப் பாட்டைத் தேடி தேடி ஆயிரமாயிரம் மொழியாய்
உணர்வாய் புதிதாய் புதிதாய்
பரவி
இன்று புவியெங்கும் – எமது முதல் மூச்சு
முதல் காற்றின் தடம்
முதல் ஒலி புரண்ட சப்தம்
எமது உணர்வை முதன்முதலாய் பாட்டாக்கிக்கொண்ட
மண்ணிசையை
மறப்போர் எவரேனுமுண்டோ ? என சளைக்காமல் சவால்விட – “தெம்மாங்கு தென்றல்” எனும் பெயரில் துவங்கிய
குவைத்தின் முதல் மண்ணிசை கலைவிழா மன்றம்
எந்நாளும் வெற்றி வெற்றி என்று
முழு வெற்றியோடு நிற்க வாழ்த்தி –
நாமே இக்குவைத் நாட்டை விட்டுப் போனாலும்
இந்தப் பாலை மணல்வெளியெங்கும்
போகாத ஒலியாக
இசையாக
பாடல்களாக நம் மண்ணிசை இங்கே
நிலைத்திருக்க இவர்கள் மட்டுமல்ல
நாமெல்லோரும் கூட
உடனிருக்கவேண்டும் என்று வேண்டி
வாழ்த்துமன்போடு மகிழ்கிறேன். நன்றி..
பேரன்புடன்..
வித்யாசாகர்
nichayam udaniruppom,
LikeLike
நிச்சயம் உடனிருப்போம்,உதவிடுவோம்
கவியின் கட்டளையை காற்றின் மூலம்
கலை உலகிற்கு, எடுத்து செல்வோம்.
LikeLike
நன்றி தோழி..
LikeLike
பாராட்டுகள்
LikeLike
நன்றி ஐயா..
LikeLike